600 வரையான உணவுகளை அசத்தலாக சமைக்கும் ரோபோ சமையல்காரன்

breaking
  எத்தனை பேருக்கும் சுவை மாறாத உணவை வேகமாக சமைத்து தரும் இயந்திர சமையல் கலைஞர் ரோபோ செஃப் வந்து விட்டது. ஆம். இந்தியாவின் முதல் இயந்திர சமையல் கலைஞர்! வீடுகளில் பெண்களின் திறமைகளை முடக்கிப் போட்டிருக்கும் ஒரு அறை சமையலறை. இதிலிருந்து பெண்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று உணவுத் துறை சார்ந்த விஞ்ஞானிகள், ஏனைய தொழில்நுட்ப துறையினருடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வகையில், மிக்சி, கிரைண்டர், ஜுஸ் மேக்கர், காபி மேக்கர், காய்கறி வெட்டும் கருவி, இன்டக்‌ஷன் ஸ்டவ் என்று பல்வேறு கருவிகள் வந்து விட்டன. இதையெல்லாம் கடந்து, ஆன்லைனில் உணவு பொருட்களை ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிடும் பழக்கமும் அதிகரித்து விட்டது. ஆனால், அதில் கிடைக்கும் சுவை, நாம் எதிர்பார்ப்பை விட மிக குறைவுதான். பிரபலமான உணவகங்களுக்கு சென்றால், அங்கு ஒரு நாள் கிடைக்கும் சுவையான உணவுப் பொருள், மறு முறை அதே சுவையுடன் கிடைப்பதில்லை. இந்த சூழ்நிலையில், சுவை, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை தயாரிப்பதற்காக புதிதாக வந்துள்ளது ரோபோ செஃப்... இது இந்தியாவின் முதல் சமைக்கும் இயந்திர மனிதன். இதன் செயல்பாடு குறித்து, இந்த ரோபோ சமையல் கலைஞரை வடிவமைத்த குழுவின் தலைவரும், ரோபோசெஃப் நிறுவனத்தின் உரிமையாளருமான சரவணன் சுந்தரமூர்த்தி கூறியதாவது: “மென்பொருள் நிபுணராக 11 ஆண்டுகள் பணியாற்றி விட்டு, உணவுத்துறையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த 5 ஆண்டுகளாக என்னுடைய குழுவினருடன் இணைந்து ஆய்வு செய்து, ரோபோசெஃப் என்ற இந்த இயந்திர மனிதனை வடிவமைத்து உள்ளோம். இது 600 வகையான ரெசிபிகளை சமைக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறோம். உணவகங்களில் ஊழியர்கள் அதிகாலை மூன்று மணியளவில் எழுந்து, காலை உணவை தயாரிக்க வேண்டியிருக்கும். அவர்களுக்கு ஒரே மாதிரியான பணியை தொடர்ந்து செய்வதால், சலிப்பும் ஏற்படுகிறது. அது சுவையிலும் எதிரொலிக்கிறது. இதனை மாற்ற வேண்டும், ஒரே சுவையுடன் அனைவருக்கும் பிடித்த உணவு வகைகளை சமைக்க வேண்டும், அதனை முழுவதும் தானியங்கி அடிப்படையில் தயாரிக்க வேண்டும் என்பதுதான் ரேபோசெஃப் வடிவமைப்பின் உந்துதலாக இருந்தது.