Take a fresh look at your lifestyle.

கணவனின் பயிற்சியில் கொள்ளையில் ஈடுபட்ட பெண் பிடிபட்டார்

 

ஸ்ரீலங்கா , ஆபத்துக்கு உதவும் போர்வையில், பெண்ணொருவரை ஏமாற்றிப் பணம் மற்றும் நகை​களைக் கொள்ளையிட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தில், தம்புளை காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட இப் பெண் கொழும்பின் பல பிரதேசங்களிலும் இடம்பெற்ற தங்கநகைக் கொள்ளை மற்றும் ஏமாற்றிப் பணம் பறித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புபட்டவரென என்றும் தேடப்பட்டு வந்தவரென்று, காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, தம்புளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பெண், சில குழுக்களுடன் இணைந்து, இந்த மோசடிகளில் ஈடுபட்டாரா என்பது தொடர்பில், சிறப்பு காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் பிளியந்தலைப் பகுதியைச் சேர்ந்த 38 வயதானவரெனவும் கனடாவில் வசிப்பதாகத் தெரிவித்து, தம்புளை, இனாமலுவ பிரதேசத்திலுள்ள பெண்ணொருவரை ஏமாற்றி, அவரிடமிருந்து தங்க மாலையைக் கொள்ளையிட்டுச் சென்றதாகப், பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் கணவர், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவரெனவும் அவரே இந்தப் பெண்ணுக்கு திருட்டு மற்றும் ஏமாற்றிப் பணம் பறித்தல் குறித்துப் பயிற்சியளித்ததாகவும், சந்தேகநபரான பெண், காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரை, தம்புளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.