Take a fresh look at your lifestyle.

தூத்துக்குடி மக்கள் கொல்லப்பட்டதை கண்டித்து கொழுப்பில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

தமிழகம் , தூத்துக்குடி மாவட்டத்தில், காவல்துறை நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதை கண்டித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று புதன்கிழமை பிற்பகல் 4 மணிக்கு, கொழும்பு கொள்பிட்டி, காலி வீதியில் உள்ள இந்திய துாதரகத்துக்கு முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், தமிழர் தாயக பிரதேசங்களை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், சட்டத்தரணிகள், மற்றும் பொது அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நரேந்திரமோடி அரசு படுகொலைக்கு பதில் கூற வேண்டும் என்று, இந்தியத் துாதுதரக அதிகாரியிடம் அருட்தந்தை சக்திவேல் வலியுறுத்தினார்.

இந்திய மத்திய அரசே! பொதுமக்களின் படுகொலைக்கு பதில் சொல் என்று கோஷம் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். சிங்கள சமூக ஆர்வலர்களும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

கொழும்பு மலையகம் ஆகிய பிரதேசங்களை மையமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், ஆர்ப்பாட்டத்தின் முடிவில், இந்திய தூதரக அதிகாரியிடம் மகஜர் ஒன்றை கையளித்தார்.

நரேந்திர மோடி அரசின் தூண்டுதலால் காவல்துறையினர், ஜனநாயக வழியில் மூன்று மாதங்களாக தங்கள் பிரதேசத்தின் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்திய போராட்டத்தை, துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அழிக்க முற்பட்டதாக அருட்தந்தை சக்திவேல் குற்றம் சுமத்தினார்.

அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, அருட் தந்தை சக்திவேல், பொதுமக்கள் படுகொலை செய்ய்ப்பட்டமை தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.