Take a fresh look at your lifestyle.

யுத்தகாலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்- வடக்கு ஆளுனர்!

யுத்தகாலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வடக்கில் படுகொலை செய்யப்பட்டதை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஏற்றுக்கொண்டுள்ளார்.

தற்போது வீதி விபத்துக்கள் மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் வடபகுதியில் பலர் தமது உயிர்களை மாய்த்துக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கவனமாக சென்று வாருங்கள் என்ற போக்குவரத்து பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்ட கருத்தமர்வும் செயன்முறைப் பயிற்சியும் இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயினால் இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக யாழ் மாவட்டச் செயலகத்தில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதி பயிற்சிக் கல்லூரிகளின் சாரதிகளுக்கும் இன்றையதினம் கருத்தமர்வு நடாத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வீதி விதி முறைமைகள் குறித்தும் விபத்துக்களை தடுப்பது குறித்தும் செயன்முறைப் பயிற்சிகளும் இங்கு கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன.

வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் சாரதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்விலே போக்கு வரத்து விதிமுறைகள் தொடர்பாக புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டார்.