Take a fresh look at your lifestyle.

தமிழ்த்தேசிய வாதம் உலகத்தமிழ்த் தேசியவாதமாக பரிணமிக்கவேண்டும்

தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வு என தமிழ்மக்களின் தாயகத்தை அங்கீகரிக்காத, தேசம் என்பதை  அங்கீகரிக்காத, சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத, ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்தமே சுமத்தப்படபோகின்றது என்பது தற்போது வெளிப்படையாகிவிட்டது. மோடி உடனான சிறீலங்க அதிபரினதும், சம்பந்தனினதும் சந்திப்பில் அது உறுதியாகிவிட்டது. சம்பந்தனும் அதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்றே தகவல்கள் வருகின்றன. பொம்மை நிலையில் இருக்கும் அவரிடமிருந்து வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது என்பது யதார்த்தம் தான்.

இந்தியாவிற்கு இலங்கை இந்திய ஒப்பந்தம் தான் முக்கியம். அதற்கு 13 ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கவேண்டும். வடமாகாணசபை இயங்குவது போல ஒரு தோற்றம் தெரியவேண்டும். அதற்கு அப்பால் தமிழ்மக்களின் நலன்களைப்பற்றி அதற்கு எந்தவித அக்கறையும் கிடையாது. அதற்குரிய  ஒரே கவலை 13 ஆவது திருத்தினை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தமிழ் அரசியலை எவ்வாறு கீழிறக்குவது என்பதுதான். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதற்கு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெற்றிடத்தை நிரப்ப வந்த தமிழ் மக்கள் பேரவையினாலும் வெளிப்படையான முன்னேற்றத்தைக் காட்டமுடியவில்லை. அதுவும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலிற்குள் சென்றுவிட்டதா? என்ற நியாயமான சந்தேகமும் எழுகின்றது.

இந்நிலையில் பிரக்ஞைபூர்வ தமிழ்த் தேசிய சக்திகள் என்ன செய்யப்போகின்றனர்? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி? இங்கு இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வுவரும் வரை தமிழ் அரசியலில் இச்சக்திகளுக்கும் கௌரவமான இடம் இருக்கும் என்பதை நாம் மறுக்க முடியாது. ஏன் தீர்வு வந்த பின்னரும் கூட தேசத்தை கட்டியெழுப்பும் பணியிலும் இவர்களுக்கு காத்திரமான இடமிருக்கும். இச்சக்திகளுக்கு இன்றைக்கு இருக்கவேண்டியது களநிலைமை பற்றிய புரிந்துணர்வும், பாதை பற்றிய தெளிவும், அதற்கான தியாகம் நிறைந்த உழைப்பும் தான். இதற்கு கொள்கைத் தெளிவும், கொள்கைப் பிடிப்பும் மிக அவசியம்.

தமிழ் அரசியல் முன்னேறிச் செல்வதிலுள்ள நெருக்கடிகள் பற்றித்தான் இன்று அதிகம் பேசப்படுகின்றது. எங்களுடைய தலைவிதியை எங்கள் நலன்களோடு எந்தவிதத்திலும் தொடர்பற்ற வல்லரசுகள் தீர்மானிக்கின்றன என்பது ஒரு நெருக்கடிதான். சிறீலங்கா அரசின் இராணுவ அடக்குமுறை ஒரு நெருக்கடிதான்.  மக்களின் கூட்டு உளவியல்  மோசமாக பலவீனமடைந்திருக்கின்றது என்பதும் ஒரு நெருக்கடிதான். ஆனால், வரலாறு நெருக்கடிகளை மட்டும் தருவதில்லை. அதனை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகளையும் தருகின்றது என்பதை நாம் மறக்கக்கூடாது. இவ்வளவு கால தியாகம் நிறைந்த போராட்டத்தின் பின்னரும் தமிழ் அரசியல் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கின்றது என ஒரு வாதமும் முன்வைக்கப்படுகின்றது. அதுவும் மிகவும் தவறானது.

“ஒரு தேசியம் போராட்டம் தேசிய அரசியலினால்தான் உருவாகும்.  தேசிய அரசியலினால் தான் வளரும். ஆனால் அதன் வெற்றியை சர்வதேச அரசியல் தான் தீர்மானிக்கும்.” இது பேராசிரியர் சிவத்தம்பி அடிக்கடி கூறும் ஒரு கூற்று.  இதுவரை கால போராட்டம் ஆரம்ப இடத்தில் எம்மை கொண்டு வந்து விடவில்லை. மாறாக சர்வசேதமட்டத்திற்கு கொண்டுவந்து விட்டிருக்கின்றது என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. இனப்பிரச்சினை என்பது இன்று உள்நாட்டுப்பிரச்சினையல்ல சர்வதேசப்பிரச்சினை. சிறீலங்கா அரசாங்கம் இன்று தமிழ்மக்களது விவகாரம் தொடர்பாக உள்நாட்டிற்கு மட்டும் பதில் சொன்னால் போதாது. சர்வதேசத்திற்கு பதில் சொல்லவேண்டும். யாழ்ப்பாணத்தில் ஒரு மூலையில் நடக்கும் சிறிய போராட்டம் கூட இன்று உடனடியாகவே சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாகி விடுகின்றது.

Tamil Nationalismஇது தமிழ் மக்களுக்கு உள்ள மிகப்பெரிய  சாதகமான விடயம். வல்லரசுகள் இதனை உள்நாட்டிற்குள் சுருக்கிவிட முயல்கின்றது என்பதும் கூட்டமைப்பு அதற்கு துணை போகின்றது என்பதும் உண்மை தான். இதனை மீறி சர்வதேச மட்டத்தில் தமிழ் அரசியலை எவ்வாறு பலப்படுத்துவது என்பது நாம் சிந்திக்க வேண்டும். இங்கு சர்வதேச அரசுகள் தங்கள் நலன்களின் அப்படையில் செயற்படும் என்பது உண்மையே. ஆனாலும் சர்வதேச சமூகம் என்பது சர்வதேச அரசுகளை மட்டும் கொண்டிருப்பதில்லை. மாறாக சர்வதேச சிவில் சமூகத்தையும் கொண்டிருக்கின்றது. இந்த சர்வதேச சிவில் சமூகம் நலன்களின் அடிப்படையில் செயற்படுவதில்லை. மாறாக சர்வதேச விழுமியங்களின் அடிப்படையிலேயே செயற்படும். சர்வதேச சிவில்சமூகம் மத்தியில் தமிழ் அரசியலை பேசுபொருளாக்குவதன் மூலம் சர்வதேச அரசுகள் தமிழ் மக்களுக்கு எதிராக செல்வதை தடுத்து நிறுத்தமுடியும். இதற்கு சர்வதேச அரசியலை நாமும் நடாத்தவேண்டும். எமக்கென ஒரு வெளிநாட்டுக்கொள்கைஉருவாக்கிச் செயற்படுத்த வேண்டும. அரசுகள் மட்டும் வெளிநாட்டுக்கொள்கையை கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. விடுதலைக்காக போராடும் தேசிய இனங்களும் தமக்கென வெளிநாட்டுக் கொள்கையை வைத்திருக்கலாம்.

பௌத்த சிங்கள மேலாதிக்கக் கொள்கையை சர்வதேச சமூகம்  ஒருபோதும் ஏற்கமாட்டாது. சர்வதேச அரசியலை மேற்கொள்ளக்கூடிய சூழல் புலிகளுக்கு இருக்கவில்லை. ஆனால் இன்று சர்வதேச வெளியும், இந்திய வெளியும் தமிழ் மக்களுக்காக அகலத்திறந்து விடப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் சக்திகள் இதனை போதியளவிற்கு பயன்படுத்த இன்னமும் முன்வரவில்லை.

இரண்டாவது சாதகமான விடயம் இலங்கைத்தீவினை மையப்படுத்திய புவிசார் அரசயிலில் தமிழ்மக்களுக்கும் கௌரவமான இடமிருக்கின்றது என்பதாகும். ஆயுதப்போராட்டம்  முப்பது வருடகாலம் தாக்குபிடித்தமைக்கு  இவ்புவிசார் அரசியலும் ஒரு காரணம். தமிழ் அரசியல் சக்திகளில் ஒரு பிரிவினர் தமிழ் அரசியலை கீழிறக்க தயாராக இருந்ததினால் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்தது. இன்று தமிழ்மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி பிராந்திய வல்லரசும் சர்வதேச வல்லரசுகளும் தங்களுடைய  நலன்களை அடைய முயற்சிக்கின்றன. தமிழ்மக்கள் புவிசார் அரசியலில்  பங்கெடுக்க முடியாதவாறு மைதானத்திற்கு வெளியே தூக்கிவீசப்பட்டுள்ளனர். தமிழ்மக்கள் விழிப்பாக இருந்தால் கௌரவமான இடத்தை மீண்டும் பிடிக்க முடியும்.

புவிசார் அரசியலைப் பொறுத்தவரை இலங்கைத்தீவு மட்டுமல்ல தமிழ்நாடும் கேந்திர இடத்தில் தான் இருக்கின்றது இது புவிசார் அரசியலில் தமிழ்மக்களை மேலும் வலுப்படுத்துகின்றது. தமிழ்மக்களுக்கு இரட்டிப்பு பலத்தினைக் கொடுக்கின்றது. இந்த புவிசார் அரசயில் வாய்ப்புக்களைப் பற்றி ஈழத்தமிழர் மத்தியிலோ, தமிழகத்தமிழர்கள் மத்தியிலோ போதியளவிற்கு பேசப்படவில்லை. கிழக்குத்தீமோர், கொசேவா, தென்சூடான் விடுதலைக்கு  புவிசார் அரசியலை காரணமாக இருந்தது. தமிழ்மக்களைப் பொறுத்தவரை இந்தியாவைக் கையாள்வதற்கு தமிழக மக்களும் மேற்குலகத்தைக் கையாள்வதற்கு புலம்பெயர் மக்களும், முழுச்சர்வதேசத்தையும் கையாள்வதற்கு உலகம் வாழ் தாயக வம்சாவழி, தமிழக வம்சாவழித் தமிழர்களும் துணையாக உள்ளனர். இவற்றை ஒழுங்கமைப்பதற்கு நிலம், புலம், தமிழகம் என்பவற்றிற்கிடையே ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியமானது.

Global Nationsஇன்று உலகில் பல நாடுகளில் தமிழ்மக்கள் வாழ்கின்றபோதும் எங்குமே அதிகாரம் இல்லாத கையறு நிலையில் உள்ளனர். தமது அடையாளத்தைப் பாதுகாப்பதற்கே பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் உலகமட்டத்தில் தமிழ்மக்களின் நலன்களைப் பேணுவதற்கு உலகத்தமிழர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஈழத்தமிழ்மக்கள் விடுதலையடைகின்றபோது உலகம் வாழ் தமிழர்களின் நலன்களை பேணக்கூடிய நிலை ஏற்படும். இதற்கு “உலகத் தமிழ்த்தேசியவாதம்” என்ற சிந்தனையை கட்டியெழுப்பவேண்டும். ஏற்கனவே “தமிழவன்” போன்ற தமிழக சிந்தனையாளர்கள் இது பற்றிய முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

உலகம் தழுவிய தமிழ் அரசியல் இயக்கத்தைக் கட்டவேண்டிய தேவை அவசியமாக உள்ளது.

இங்கே ஒரு விடயத்தை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. தமிழ்மக்கள் மிகச்சிறிய தேசிய இனம். அதன் எதிரிகளோ மிகவும் பலமானவர்கள். உலகம் தழுவிய தேசிய அரசிய இயக்கத்தைக் கட்டி எழுப்புவதன் மூலமே  இந்த எதிரிகள் தரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க முடியும். இதற்கு  சேமிப்புச் சக்திகளையும், நட்புச் சக்திகளையும் எமக்கு பின்னால் அணி திரட்டவேண்டும்.  மலையக மக்கள், தமிழக மக்கள், உலகம் வாழ் தமிழக வம்சாவழி மக்கள் தமிழ் அரசியலின் மிகப்பெரும் சேமிப்புச் சக்திகளாவர். உலகம் வாழ் முற்போக்கு ஜனநாயக சக்திகள் தமிழ்மக்களின் சிறந்த நட்புச் சக்திகளாவர் இவர்களை அணிதிரட்டுவதன் மூலம் தமிழ் அரசியலில் மிகப்பெரும் பாய்ச்சலை மேற்கொள்ள முடியும்.

இதற்கெல்லாம் முக்கிய நிபந்தனை தாயக மட்டத்தில் நாம் வலுவான  நிலையின் இருப்பதே. இங்கு வலுவானநிலை என்பது தேர்தலில் வெற்றிபெற்று முழுத் தமிழ்மக்களின் வலிமையையும் வல்லரசுகளிடம் அடகுவைப்பதல்ல. மாறாக இலக்கு, கொள்கை, வேலைத்திட்டம், அமைப்பு என்பதில் வலுவாகநிற்பதே!

தமிழ்த்தேசிய சக்திகள் இதற்கு தயாரா?

 

சி.அ.யோதிலிங்கம்

குறிப்பு:>