நீர்வேலியில் கொள்ளையர்கள் அட்டகாசம்: 30 பவுண் நகை 15 ஆயிரம் பணம் கொள்ளை
பருத்தித்துறை வீதியில் நீர்வேலி தெற்கில், வலி.கிழக்குப் பிரதேச சபைக்கு அருகிலுள்ள வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி 30 பவுண் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபா பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் நடந்துள்ளது
குடும்பத் தலைவர் சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் இருக்கவில்லை. அவரது மனைவி, மகள், பெரிய தாய் ஆகியோரே இருந்துள்ளனர்.
இரவு 1 மணியளவில் புகைக் கூட்டின் ஓட்டை கழற்றி அதனூடாகக் கொள்ளையன் ஒருவன் வீட்டுக்குள் நுழைந்துள்ளான். வீட்டின் கதவை அந்தக் கொள்ளையன் திறந்துவிட ஏனைய மூவரும் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் விழித்தெழுந்துள்ளனர். 4 கொள்ளையர்களும், வீட்டிலிருந்த பெண்கள் மூவரையும் அச்சுறுத்தி ஓரிடத்தில் இருத்தியுள்ளனர். இரண்டு கொள்ளையர்கள் அவர்களை கண்காணிக்க, எஞ்சிய இரண்டு பேரும் வீட்டை சல்லடை போட்டுத் தேடியுள்ளனர்.
சுமார் அரை மணி நேரம் தேடுதல் நடத்தி 30 பவுண் நகை, 15 ஆயிரம் ரூபா பணம், அலைபேசி என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் 4 பேரும் முகத்தை மூடியிருந்ததுடன், அவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
வீட்டைச் சுற்றி தோட்டங்களாக இருந்ததால், அயலவர்கள் எவரும் உடனே உதவிக்கு வரவில்லை. கொள்ளையடித்துச் சென்ற அலைபேசியை வாழைத் தோட்டத்துக்குள் வீசிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பத்து நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறிப்பு:>