Take a fresh look at your lifestyle.

ஐநாவை மையப்படுத்திய ஒரு இராஜதந்திரப் போர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 39 வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலைமையில் பொறுப்புக்கூறலுக்கு சவால் விடும் வகையில் கொழும்பில் பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன. ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட சில அறிவிப்புகளும் அவருடைய செயற்பாடுகளும் சர்வதேச சமூகத்திற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் கொடுத்த உறுதி மொழிகளில் இருந்து முற்றிலும் முரண்படுவதாகவே அமைந்திருக்கின்றன. ஐ.நா.வை மையப்படுத்திய ஒரு இராஜதந்திரப் போருக்கான நகர்வுகளை ஶ்ரீலங்கா அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

இரண்டு விடயங்கள் தொடர்பாக இந்த இடத்தில் கவனத்தைச் செலுத்துவது அவசியம். முதலாவது ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகளின் பிரதானி முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர ஜயந்த குணரத்ன தொடர்பானது. இரண்டாவது, ஶ்ரீலங்கா ஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபையில் நிகழ்த்தப்போகும் உரை தொடர்பானது.

கொழும்பில் இடம்பெற்ற பதினொரு தமிழ் இளைஞர்களின் கடத்தல் அவர்கள் காணாமல் போன சம்பவங்களின் பின்னணியில் ரவீந்திர குணரத்ன சம்பந்தப்பட்டுள்ளார் என்பது நீதிமன்றத்தால் உறுதி படுத்தப்பட்டு, அவரை விசாரணை செய்வதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியில் மெக்சிகோவில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் அவர் அனுப்பப்பட்டு இருக்கின்றார். அங்கு அனுப்பப்பட்டுள்ள அவர் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அவரை தப்ப விடும் நோக்கத்துடன் தான் ஸ்ரீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக மெக்சிகோவிற்கு அவரை அனுப்பி வைத்ததா என்ற கேள்வியும் எழுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தெரியாமல் ரவீந்திர குணரத்ன அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டார் என்பது நம்பக் கூடியது அல்ல.

அதேவேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த சில கருத்துக்களும் இது தொடர்பில் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. கடந்த புதன்கிழமை அமைச்சரவையின் விசேட கூட்டமொன்றை அவசரமாக கூடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவீந்திர குணரத்னவைக் கைது செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்தார். பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் எவரையாவது கைது செய்வதாக இருந்தால் ஜனாதிபதி என்ற முறையில் தனக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கடுமையாக அங்கு கருத்துக்களை முன்வைக்கின்றார்.

அதாவது இராணுவத்தின் உயர் அதிகாரிகள் எந்த காரணத்திற்காகவும் கைது செய்யப்படக் கூடாது என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார் என்பது தெளிவாக தெரிகின்றது. இது முதலாவது சம்பவம்.

இதனைவிட மற்றொரு சம்பவம் முக்கியமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் இதுதொடர்பாக குறிப்பிட்டிருந்தார். அதாவது நியூயோர்க்கில் ஆரம்பமாகியுள்ள ஐநா சபையின் பொதுக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகிறார். இதற்காக இம்மாத இறுதியில் அவர் நியூயார்க் சென்றார். எதிர்வரும் 25ஆம் திகதி ஜனாதிபதியின் உரை ஐநா பொதுச் சபையில் இடம்பெற இருக்கின்றது. இந்த உரையின் போது படைத்தரப்பினர் பாதுகாக்கும் வகையில் புதிய யோசனை ஒன்றை தான் முன்னேற்றம் இருப்பதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார்.

வெள்ளிக்கிழமை கொழும்பில் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடக பிரதானிகளை சந்தித்தபோது இது தொடர்பான தகவல்களை ஜனாதிபதி வழங்கினார். ஐநா பொதுச் சபையில் ஜனாதிபதியை முன் வைக்கப் போகும் திட்டம் என்ன என்பது இதுவரையில் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் போர்க்குற்றங்களுக்கு உள்ளாகியிருக்கும் படையினரை பாதுகாக்கும் வகையில் அந்தத் திட்டம் அமைந்திருக்கும் என நிச்சயமாக எதிர்பார்க்க முடியும்.

ஜனாதிபதி மைத்திரிபாலவின் இந்த செயற்பாடுகள் நிச்சயமாக ஒரு விடயத்தை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

அதாவது  போர்க்குற்றங்களுக்கு  உள்ளாகியிருக்கும் படையினரை பாதுகாப்பதற்கு அவர் முற்படுகின்றார் என்பதுதான் அது. ஜனாதிபதியின் இந்த செயற்பாடு ஆச்சரியப்படக் கூடிய ஒன்றல்ல. ஏனெனில் போர் வெற்றி வீரர்களை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்பதை அவர் அடிக்கடி கூறி வந்திருக்கிறார். அதனைவிட எந்தவொரு சிங்கள அரசாங்கமும் இவ்வாறுதான் செயற்படும் என்பதும் எதிர்பார்க்கக்கூடியதுதான்.

பொறுப்புக்கூறல் உட்பட நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஐநா மனித உரிமைகள் பேரவையில் வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் முடிவடைய இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கின்றது. இந்த கால அவகாசத்தை வழங்கும் தீர்மானம் ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட போது ஸ்ரீலங்கா அரசாங்கமும் அதற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது. குறிப்பிட்ட பிரேரணை கடுமையானதாக இருந்ததால் அதன் காரத்தை குறைக்கும் நோக்கத்துடன் அதற்கான இணை அனுசரணையை ஶ்ரீலங்கா அரசாங்கம் வழங்கியது. ஒரு இராஜதந்திர நகர்வாகவே இவ்வாறு இணை அனுசரணை வழங்கப்பட்டது. ஶ்ரீலங்காவும் குறிப்பிட்ட பிரேரணையின் பங்காளியாவதால், அதன் காரத்தைக் குறைப்பதற்கு சாவதேசமும் இணங்கியது என்பது கவனிக்கப்பட வேண்டும்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடன் அந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு இருந்தாலும் கூட அதனை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த செயற்பாடுகளும் இதுவரையில் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்கப்படவில்லை. சர்வதேச சமூகத்தை சமாளிப்பதற்கும் நம்ப வைப்பதற்கு அதற்கான அனுசரணையை ஸ்ரீலங்கா வழங்கியது மறுபுறத்தில் சிங்கள மக்களின் நம்பிக்கை வென்றெடுப்பதற்காக அதனை நடைமுறைப் படுத்தாமல் இருக்கின்றது.

இப்போது, கால அவகாசம் முடிவுக்கு வரவிருப்பதால், மீண்டும் உஷாரடைந்து அடுத்த காய்நகர்த்தலை ஶ்ரீலங்கா அசாங்கம் மேற்கொள்கின்றது. அதற்கான முதலாவது இராஜதந்திர காய்நகர்த்தல்தான் நியூயோர்க் ஐ.நா. பொதுச் சபையில் மைத்திரிபால சிறிசேன நிகழ்த்தப்போகும் உரை. மைத்திரயின் யோசனையை முன்னெடுப்பதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்திருக்கின்றார்.

போர்க் குற்றஞ்களுக்கு உள்ளாகும் படையினரைப் பாதுகாப்பதற்கு ஶ்ரீலங்கா அரசாங்கம் என்னத்தையும் செய்யும் என்பதற்கு வைஸ் அட்மிரல் ரவீந்திர ஜயந்த குணரத்னவின் விவகாரம் சிறந்த உதாரணமாக இருக்கின்றது. இது உள்நாட்டு விசாரணையிலும், நீதியிலும் எவ்வகையிலும் நம்பிக்கை வைக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகின்றது. ஶ்ரீலங்கா அரசாங்கம் உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் சிறப்பான முறையில் இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றது. அதனால்தான் இந்தளவு நெருக்கடிகளின் மத்தியிலும் அதனால், இவ்வாறு செயற்பட முடிகின்றது.

தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில், அவ்வறான திட்டமிட்ட இராஜதந்திரச் செயற்பாடுகளைக் காணமுடியவில்லை. முதலில் ஶ்ரீலங்கா அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடுகளை சர்வதேச சமூகத்தின் முன்பாக அம்பலப்படுத்த வேண்டும். அடுத்ததாக ஶ்ரீலங்காவுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் வகையில் சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியில் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். இதற்கு நன்று நிறுவனமயப்படுத்தப்பட்ட திட்டமிட்ட செயற்பாடுகள் அவசியம். தாயகத்திலும், புலம்பெயர்ந்த மண்ணிலும் இதற்கான செயற்பாடுகள் இல்லை என்றால், ஐநாவை மையப்படுத்திய தற்போதைய இராஜதந்திர போரிலும் ஶ்ரீலங்கா அரசாங்கம் வெற்றிவாகை சூடுவதை தடுக்க முடியாது போகும்.

குறிப்பு:>