Take a fresh look at your lifestyle.

புலம்பெயர் மக்கள் அனுசரணையுடன் தான் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்; விக்கி

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் புலம் பெயர் தமிழர்களுடன் தம்மை அடையாளப்படுத்தப் பயப்பட்டு நின்றார்கள். தமக்கும் பயங்கரவாதிகள் என்ற நாமம் சூட்டப்படலாம் என்ற பயமே அதற்குக் காரணம். என்னைப் பொறுத்தவரையில் புலம்பெயர் மக்களின் அனுசரணையுடன் தான் எமது இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அவர்கள் எங்கள் பலம்” எனக் கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.

ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விகளுக்கு அளித்துள்ள பதிலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று அவர் அனுப்பிவைத்துள்ள கேள்விகளுக்கான பதிலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவரது பதில்களின் விபரம்:

கேள்வி – தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து தாபிக்கப்படப்போகும் ஒரு கூட்டமைப்புப் பற்றியே எங்கும் பேச்சாக இருக்கின்றது. இவ்வாறான ஒரு கூட்டமைப்பின் ஊடாகத்தான் நீங்கள் தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றீர்கள் என்று நாங்கள் கூறினால் அது சரியாக இருக்குமா?

பதில் – இன்னும் முடிவெடுக்கவில்லை.

கேள்வி – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு தீவிரப் போக்குடைய ஒரு தமிழ் அரசியல் வாதி என்று கருதப்படுகின்றார். ஆகவே நீங்கள் அவர் போன்றவர்களால் பிழையாக வழிநடத்தப்படுகின்றீர்கள் என்று கூறப்படுகிறது – உங்கள் கருத்து?

பதில் – “தீவிரம்” என்ற சொல் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. தான் ஒரு மிதவாதி அல்லது மத்திமவாதி என்று தன்னைக் கருதுபவர் தனது கொள்கைகளை எதிர்ப்பவரை தீவிரவாதி என்பார். ஆனால் மேற்படி மிதவாதி அல்லது மத்திமவாதி எங்கிருந்து அந்தக் கருத்தை வெளியிடுகின்றார் என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டியதொன்று. அவரின் கருத்துக்கள் உண்மையில் மிதமானவையா அல்லது தவறானவையா என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வெள்ளையர் காலத்தில் கெப்பற்றிபொல திசாவே என்பவர் குற்றவாளியாக வெள்ளையர்களால் கணிக்கப்பட்டார். இன்று இந் நாட்டவர்கள் அவரை புகழுக்குரிய வீரனாகக் கணிக்கின்றார்கள். அதெப்படி? ஒரே நபர் வெவ்வேறு மக்களால் வெவ்வேறு விதமாகக் கணிக்கப்படுகின்றார்கள்.

இளம் கஜன் மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றார். அவர் தனி நாடு கோரவில்லை. வன்முறை வேண்டும் என்று சொல்லவில்லை. அவர் ஒரு தீவிரவாதியல்ல. நானும் ஒரு தீவிரவாதியல்ல. அவர் என்னை இயக்குவதோ நான் அவரை இயக்குவதோ இல்லை. நாங்கள் இருவரும் இன்னும் பலருடன் எமது மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றோம். அண்மைய உள்@ராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை மக்கள் வெகுவாகக் குறைத்தனர். கஜன் ஒரு தீவிரவாதி என்று அவர்கள் நினைத்திருந்தால் அவருக்கு மக்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள் அல்லவா?

கேள்வி – தமிழர்களின் நீண்டகால போராட்டத்திற்கு உங்கள் பங்களிப்பென்ன? தமிழர்கள் சார்பாக நீங்கள் பேசியுள்ளீர்களா?

பதில் – எமது தமிழ் பேசும் மக்களுக்கும் பாரளாவிய புலம் பெயர் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவை உருவாக்கியுள்ளேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் புலம் பெயர் தமிழர்களுடன் தம்மை அடையாளப்படுத்தப் பயப்பட்டு நின்றார்கள். தமக்கும் பயங்கரவாதிகள் என்ற நாமம் சூட்டப்படலாம் என்ற பயமே அதற்குக் காரணம். என்னைப் பொறுத்தவரையில் புலம்பெயர் மக்களின் அனுசரணையுடன் தான் எமது இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அவர்கள் எங்கள் பலம்;.

2001ம் ஆண்டு மும்மொழிகளிலும் உச்ச நீதிமன்ற வரவேற்பின் போது பேசுகையில் தமிழ் மக்களுக்கான பொறுப்பான நியாயமான தீர்வு பற்றிப் பிரஸ்தாபித்தேன்.

நாம் என்ன செய்தோம் என்பது மற்றவர்களால் அடையாளப்படுத்தப்பட வேண்டும். எம்மால் அல்ல. எமது மக்களின் விடிவிற்காக எனது குரல் நீதியைப் பெற இடைவிடாது ஒலித்து வந்துள்ளது. போரின் பின்னர் தமிழ்த் தேசியத்தையும் அதன் உள்ளார்ந்த கொள்கைகளையும் அழிந்து விடாது வைத்திருக்க எனது குரல் அனுசரணையாக இருந்து வந்துள்ளது என பிறர் கூற நான் கேட்டுள்ளேன். அதாவது “எல்லாம் முடிந்து விட்டது” என்ற கருத்து மக்கள் மனதில் வேரூன்றிக் கொண்டிருந்த வேளையில் அந்தக் கருத்தை எம்மவருட் சிலர் வலுவேற்ற எத்தனித்த வேளையில் “எதுவுமே முடியவில்லை” என்ற மாற்றுக் கருத்தை நான் வலியுறுத்தி வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கேள்வி – டெனீஸ்வரனைப் பதவியில் அமர்த்த மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டும் நீங்கள் அதை நடைமுறைப்படுத்தவில்லை என்று நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டு உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நீங்கள் செய்ததற்கான காரணம் என்ன? யாருக்கு அந்த அதிகாரம் உண்டு? உங்கள் நடவடிக்கைக்கான காரணத்தைக் கூறமுடியுமா? கௌரவ டெனீஸ்வரனை மீள் நியமனம் செய்ய முன்வராததற்கு உங்கள் காரணத்தைக் கூறமுடியுமா?

பதில் – மேன்முறையீட்டு நீதிமன்றக் கருத்தின் படி எந்த ஒரு அமைச்சரையும் நியமிக்கவோ, பதவிநீக்கவோ எனக்குரித்தில்லை. ஆளுநருக்கே அந்த அதிகாரம் உண்டு. அவ்வாறு நீதிமன்றத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அந்தப் பணியைச் செய்யவேண்டியவர் ஆளுநரே. ஆனால் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டு என் மீது சுமத்தப்பட்டுள்ளது. எது எவ்வாறிருப்பினும் இது நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆகவே இவை பற்றி விலாவாரியாக வழக்கு நடைமுறையில் இருக்கும் போது பேசுவது தவறு.

குறிப்பு:>