Take a fresh look at your lifestyle.

திட்டமிட்டு காய் நகர்த்திய மாநகரசபை: தியாகி திலிபனின் நிகழ்வை தலைமையேற்பதாக அறிவிப்பு

 

தியாகி திலீபனின் நினைவேந்தலை பொதுமக்கள் சார்பில் ஒழுங்கமைக்கப்பட்டு வரும் நிலையில், யாழ் மாநகரசபையும் திடீர் ஏற்பாட்டு அறிவித்தலொன்றை சற்று முன்னர் அனுப்பி வைத்துள்ளது.

மாநகர முதல்வர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது-

ஊடக அறிக்கை
யாழ் மாநகர முதல்வர் அலுவலகம்
25-09-2018

தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் நினைவுநாள் நிகழ்வுகளை யாழ் மாநகரசபையே பொறுப்பேற்று நடாத்தும் என்று யாழ் மாநகரசபை சார்பிலே அதன் முதன்மை நிறைவேற்று மக்கள் பிரதிநிதி யாழ் மாநகர முதல்வர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். இந்த அடிப்படையில் இத்தீர்மானத்திற்கு தடையுத்தரவு கோரி யாழ்ப்பாணம் நீதிமன்றிலே யாழ்ப்பாணம் பொலிஸார் தடையுத்தரவு கோரும் மனுவொன்றினைத் தாக்கல் செய்திருந்தமை யாவரும் அறிந்ததே.

தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகளைக் தடைசெய்யுமாறு யாழ்ப்பாணம் பொலிஸாரினால் யாழ்ப்பாணம் நீதிமன்றில் தொடுக்கப்பட்டிருந்த தடையுத்தரவு கோரும் வழக்கானது இன்று யாழ் நீதிமன்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டபோது, யாழ் மாநகரசபை சார்பில் சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ எம்.ஏ.சுமந்திரன் அவர்களும் மற்றும் சட்டத்தரணியும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ கேசவன் சஜந்தன் அவர்களும் மன்றில் ஆஜராகி தடையுத்தரவுக் கோரிக்கை சட்டவிரோதமானது என்றும் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்தல் மக்களின் அடிப்படையான உரித்து சார்ந்த விடயம் என்ற அடிப்படையிலும் முன்வைத்த வாதங்களை செவிமடுத்த மன்று இறுதியில் தியாகதீபம் தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை யாழ் மாநகரசபை நடாத்துவதில் எவ்வித சட்டச்சிக்கல்களோ பாதிப்புக்களோ இல்லை என்றும், நினைவேந்தல் நிகழ்வுகளும், நினைவுத்தூபி அமைப்பதும் சட்டவிரோதமானதல்ல, அவை சட்டபூர்வமானதே என்றும் தீர்ப்பளித்தது.

இதன் அடிப்படையில் நினைவுநிகழ்விற்கான அனுமதியினை இன்று (25-08-2018) பிற்பகல் இரண்டு மணியளவில் வழங்கியது. இத்தீர்ப்பின் அடிப்படையில் தியாகதீபத்தின் நினைவு நிகழ்வுகளை யாழ் மாநகரசபை திட்டமிட்ட அடிப்படையில் நடாத்தும் என அறியத்தருகின்றோம்.

இதற்கமைவாக நாளைய நிகழ்வுகள் பின்வரும் ஒழுங்கமைப்பில் இடம்பெறும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

26 செrப்டம்பர் 2018 புதன்கிழமை காலை 10:48 மணியளவில் தியாகதீபம் தியாகி திலீபன் அவர்கள் இத்தேசத்திற்காகவும் எமது மக்களுக்காக தனது இன்னுயிரை ஆகுதியாக்கிய இடத்தில் அகவணக்க நிகழ்வுகள் இடம்பெற்று அங்கிருந்து தியாகதீபத்தின் நினைவுத் தூபி இருக்கின்ற இடத்திற்கு அஞ்சலி செலுத்துவோர் வந்துசேர்வர்.

அங்கு பொதுச் சுடரினை எமது மக்களுக்காக தாம் ஈன்றெடுத்த இரண்டு உயிர்களை மாவீரர்களாக்கிய பெற்றோராகிய சின்னவன் சரசு ஆகியோர் ஏற்றுவார்கள். அதன் பின்னர் ஈகைச்சுடரினை எமது மக்களுக்காக தாம் ஈன்றெடுத்த இரண்டு உயிர்களை மாவீரர்களாக்கிய பெற்றோர் விநாயகமூர்த்தி செல்வமணி ஆகியோர் ஏற்றுவார்கள். தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கான மலர்மாலையினை மாவீரர் இனியவனின் புதல்வியார் மோதழில் அவர்கள் அணிவிப்பார்கள். அதன் பின்னர் அஞ்சலி செலுத்துவோர் மலரஞ்சலிகளை செலுத்துவார்கள்.

இவ்வாறு இந்நினைவு நிகழ்வுகள் யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் உணர்வுபூர்மாக நடைபெறுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. எமது மக்களின் உணர்வுகளையும் எமது மக்களின் தேவைகளையும் நன்குணர்ந்து செயற்படத் திடசங்கட்பம் பூண்டுள்ள நாம் எமது மக்களுக்கான சட்டரீதியாகவும், நியாயபூர்வமாகவும் அனைவரையும் ஒருங்கிணைத்து எமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம்.

இதனை நன்குணர்ந்தவர்களாக மக்களும் எமோடு தொடர்ந்து பயணிக்கின்றார்கள். எமது தேசியப் போராட்டமும், அதற்காக மேற்கொள்ளப்பட்ட தியாகங்களையும் நாம் எப்போதும் எமது மனதில் இருத்தியே முன்னகர்கின்றோம் என்பதற்கு இன்றையதினம் எமக்குக் கிடைத்திருக்கின்ற நீதிமன்றத் தீர்ப்பும் மற்றுமொரு சான்றாகவும் அமைந்திருக்கின்றது. இப்போது தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வை சிறப்புற அனுஷ்டிப்பதற்கு எல்லோரும் ஓரணியில் அணிதிரள்வோம் என்று அழைப்புவிடுக்கின்றேன்.

நன்றி
இம்மானுவேல் ஆனல்ட்
முதல்வர், யாழ் மாநகரபை