Take a fresh look at your lifestyle.

விக்கிக்கு எதிரான நடவடிக்கை தமிழர் அரசியல் வலுவைப் பலவீனமாக்கும்; சித்தர்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரனுக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழர்களின் அரசியல் வலுவைப் பலவீனமாக்கும் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முப்பதாவது ஆண்டு நிறைவினையயாட்டிய முத்து விழா மட்டக்களப்பில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில் –

“எமது கட்சியின் செயலதிபர் உமாமகேஸ்வரனின் செயற்பாடுகள் என்றும் தூர நோக்குடனேயே இருந்து வந்தன. தமிழீழம் என்ற விடயத்தினை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் ஏற்றுக்கொள்ளா. ஆகவே நியாயமான தீர்வொன்றை நோக்கி சென்றால்தான் வடக்கு, கிழக்குப் பிரதேசத்தைச் சுதந்திரமான பகுதியாகப் பெறமுடியும் என்ற நம்பிக்கையுடனேயே அவர் கூடுதலாகச் செயற்பட்டு வந்தார்.

எமது பின்னடைவுகளுக்கு முக்கிய காரணம் நாங்கள் தனியாகச் செயற்படவேண்டும், வேறு நாடுகளுடன் சார்ந்திருக்ககூடாது என்பன போன்ற அரசியல் நிலைப்பாடுகளே ஆகும். இந்தியாவுடன் யுத்தம் நடைபெற்ற காலத்திலும், இலங்கை இராணுவத்துடன் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் எமது மக்களின் பாதுகாப்புக்காக எமது கட்சி உறுதியுடன் செயற்பட்டது.

1990க்கு பின்னர் வவுனியாவில் 27 கிராமங்களை நாங்கள் உருவாக்கி எமது இருப்பைப் பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். இவை எல்லாம் நாங்கள் தேர்தலில் நிற்போம் என நினைக்காத காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளாகும். அந்த வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பது தமிழ் தலைவர்கள் ஒன்றிணைந்து பேசி உருவாக்கிய ஒரு கூட்டமைப்பு. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது வலிந்து கொண்டுவரப்பட்ட அமைப்பாகும்.

இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பில் பல வேறுபாடுகள், பிரச்சினைகள் இருந்தாலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதில் எமது கட்சி மிகவும் தீவிரமாக இருக்கின்றது. மேலும் வடமாகாண முதலமைச்சர் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தமிழர்களின் பலத்தினைப் பலவீனமாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும். ஆகவே ஒற்றுமையை வலியுறுத்தும் அதேவேளையில், ஒற்றுமையைக் குழப்புபவர்களை நிராகரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதையில் கட்சிகளைக் கொண்டுசெல்வதற்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உதவ வேண்டும்.”