கோட்டாவின் ஆசியுடனேயே கடத்தல்கள், தாக்குதல்கள்: பொன்சேகா
ஶ்ரீலங்காவின் தென் பகுதியில் நடைபெற்ற தாக்குதல்கள், கடத்தல்கள் போன்ற சம்பவங்கள் கோட்டாபயவால் வழிநடத்தப்பட்ட குழுவாலேயே முன்னெடுக்கப்பட்டன என்று அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேனா குற்றவிசாரணைப் பிரிவுக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் நான்கு மணிநேரம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.
வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பொன்சேகா மேற்படி தகவலை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கோட்டாபய வாக்கு மூலம் அளித்துள்ளார். அதுபற்றி என்னிடம் கேட்கப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற தாக்குதல்கள், கடத்தல்கள் போன்றன கோட்டாபயவால் வழிநடத்தப்பட்ட குழுவாலேயே முன்னெடுக்கப்பட்டன. அன்றும் இதைச் சொன்னேன். இன்றும் தெளிவாகக் கூறினேன்.
என்னைச் சிறையில் அடைத்த பின்னர், எனக்குச் சார்பான படை அதிகாரிகளைக் கைதுசெய்து – கொடுமைப்படுத்தி – சிறையில் வைத்து சட்டவிரோதத் தாக்குதல்கள், கொலைகளுடன் எனக்கு தொடர்பிருக்கின்றது எனக் கதை சோடிக்கப் பார்த்தனர். அது கைகூடவில்லை. இன்றும் முயற்சிக்கின்றனர். ஆனால், அதுவும் கைகூடாது என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்.
நான் போரை வழிநடத்தினேன். எனவே, கொழும்பில் போருக்கு புறம்பாக நடந்த சம்பவங்களுக்கு என்னால் பொறுப்பு கூறமுடியாது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் கோட்டாவே பொறுப்புகூற வேண்டும்” என்றார்.
குறிப்பு:>