Take a fresh look at your lifestyle.

மைத்திரியின் உரை மாற்றப்பட்டதா? மனோவின் பதிவு கிளப்பும் சந்தேகம்

“உண்மையில் ஸ்ரீலங்கா  ஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபையில் ஆற்ற வந்த உரை இதுவல்ல. ஆனால் இறுதி தினங்களில் உரை வடிவம் மாற்றப்பட்டது. அது எப்படி, ஏன் என்ற விபரங்களை பகிரங்கமாக சொல்ல முடியாது” என ஶ்ரீலங்காவின் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தற்போது நியூயோர்க் சென்றுள்ள ஸ்ரீலங்கா அமைச்சர் மனோ கணேசன், மைத்திரி ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றும் போதும் அருகில் இருந்துள்ளார். அங்கிருந்து தனது முகப்புத்தகத்தில் அமைச்சர் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“அமைச்சர் மனோ கணேசன் அவர்களே, என்ன, என் உரையில் சர்ச்சை எதுவும் இல்லை தானே! இப்போது திருப்திதானே?”

ஐநா சபையில் உரை நிகழ்த்தி இறங்கி வந்ததும் ஸ்ரீலங்கா  அமைச்சர்கள் குழு ஸ்ரீலங்கா ஜனாதிபதியை சூழ்ந்த போது, என்னை அழைத்த ஜனாதிபதி மைத்திரி, என் தோளில் கைகளை போட்டவாறு இப்படி கேட்டார்.

ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்து பேசி அதிலே திருத்தம் செய்ய வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரி, ஐநா சபையில் தனது உரையின் போது கோரிக்கை முன் வைக்க போகிறார் என இலங்கையில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், அப்படி சர்ச்சைக்கு உரிய கருத்துகள் எதுவும் ஜனாதிபதியின் உரையில் இடம்பெறவில்லை. வழமையாக இலங்கையிலே பேசுகின்ற கருத்துகளையே ஜனாதிபதி தனது உரையிலே குறிப்பிட்டார்.

ஆக, “போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இனிமேல் சர்வதேசம் எனது நாட்டை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்” என்று மேலதிகமாக குறிப்பிட்டார்.

“அந்த புதிய கண்ணோட்டம் என்னவென்று நீங்கள் இங்கே கூறவில்லை. நல்லது. அது என்னவென்று ஊருக்கு போய் விளக்கமாக சொல்லுங்கள் ஜனாதிபதி அவர்களே” என்று நான் கிண்டலாக சொல்ல, அனைவரும் சிரித்தார்கள்.

(உண்மையில் ஜனாதிபதி ஆற்ற வந்த உரை இதுவல்ல. ஆனால் இறுதி தினங்களில் உரை வடிவம் மாற்றப்பட்டது. அது எப்படி, ஏன் என்ற விபரங்களை பகிரங்கமாக சொல்ல முடியாது. சொன்னாலும் பலருக்கு புரியாது)

இவ்வாறு மனோ கணேசன் குறிப்பிட்டிருக்கின்றார்.

குறிப்பு:>