Take a fresh look at your lifestyle.

புள்ளிகள் கரைந்த பொழுது நாவல் ஒரு பார்வை!

புள்ளிகள் கரைந்த பொழுது இது முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறிய மனிதப் பேரவலத்தை எடுத்துச்சொல்லும் ஒரு நாவல். இந்த நாவலை எம் கைகளில் தந்திருக்கின்றார் படைப்பாளி ஆதிலட்சுமிசிவகுமார்.

யாரிந்த ஆதிலட்சுமி சிவகுமார்?

கடந்த 36 ஆண்டுகளாக ஈழத்து தமிழ் இலக்கியவரலாற்றில் தொடர்ந்து பயணிக்கும் ஓர் இலக்கியப் படைபாளி. பெண் விடுதலை, பெண்ணியம் சார்ந்ததெளிவு, சமூக விடுதலை, இன விடுதலை, சமூக விழிப்புணர்வு, சமூக அக்கறை, எனப் பல்வேறு
பரிமாணங்களில் இவரது ஆளுமை மிக்க படைப்புக்கள் வெளிவந்தன, வெளிவந்து கொண்டு இருக்கின்றன.


1990 ஆம் ஆண்டு ‘புயலை எதிர்க்கும் பூக்கள்’ சிறுகதைத் தொகுதி,2000 ஆம் ஆண்டு ‘என்கவிதை’ கவிதைத் தொகுப்பு,2006 ஆம் ஆண்டு ‘மனிதர்கள்’ சிறுகதைத் தொகுப்பு என இவரது படைப்புகள் ஏற்கனவே வெளிவந்திருக்கின்றன. இப்பொழுது நான்காவது படைப்பாக |புள்ளிகள் கரைந்த பொழுது| என்ற நாவல் வெளிவந்திருக்கின்றது.

ஈழத்தில் வெளிவந்த ஈழநாடு,ஈழநாதம்,ஈழமுரசு,முரசொலி,உள்ளிட்ட பல பத்திரிகைகளிலும்,வெளிச்சம்,சிரித்திரன்,அமிர்தகங்கை,எரிமலை,காற்றுவெளி எனப் பல சஞ்சிகைகளிலும் இவரதுபடைப்புக்கள் வெளிவந்தன.

”புதுயுகம் ஒன்று படைத்திட வேண்டும் புறப்பபட்டுவா தோழி பூவாய் நீயும் இருந்தது போதும் புயலாய்மாறி எழுந்திடு தோழி” என்ற அவரது பாடல் பெண் விடுதலை என்கின்ற பொறியாய் எங்கள்ஊர்களின் பட்டி தொட்டிகளில் மட்டுமல்ல உலக முற்றத்திலும் ஓங்கி ஒலித்தது. இதுமட்டுமல்லமாவீரர்களின் அர்ப்பணிப்புக்கள்,கரும்புலி வீரர்களின் ஈகங்களைத் தாங்கி இவர் எழுதிய பலபாடல்கள் இன்றும் எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

புலிகளின் குரல் வானொலி தொடங்கிய காலத்தில் இருந்து இறுதிக்காலம் வரை கண்ணம்மா என்ற பெயர்மூலம் பல்வேறு வகையான படைப்புக்களால் மக்கள் மனங்களில் தனக்கென்றோர் இடத்தைப் பிடித்துக்கொண்டவர்.

அது மட்டுமல்லாது நிதர்சன நிறுவனத்தால் மாதச் சஞ்சிகையாக வெளிவந்த ஒளிவீச்சு, தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி என்பவற்றிலும் இவரது கவிதைகள்,படைப்புகள் வெளிவந்தன. இவரது சிறுகதைகள் குறும்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன.

அவற்றில் ஒன்றுதான் |வேலி| என்ற குறும்படம்.சமூகத்தளைகளால் பெண்களுக்கு இடப்பட்ட வேலியைக் கடந்து

சமூகப்புரட்சியை ஏற்படுத்துவதாக அந்தக் கதையிருந்தது. அந்தக்குறும்படம் தலைவரால் பாராட்டப்பட்டதுடன் அந்தக்கதையின் கருத்தியலை தலைவர் அவர்கள் பெரிதும் மதித்தார். அப்போது மட்டுமல்ல அதற்கு முன்னதாகவும் பின்னதாகவும் கூட தலைவர் அவர்களால் பாராட்டப்பட்ட மதிக்கப்பட்ட ஒரு படைப்பாளி, தலைவர் அவர்களின் கைகளால் பலதடவை பரிசில் பெற்றதோடு எழுத்துப்பணிக்காக தங்கப்பதக்கம் பெற்ற ஓர் உழைப்பாளி. போலி முகத்திரைகளைப் போர்த்து உலாவரும் பலர் முன்னே உண்மையை துணிவுடனும் நேர்மையுடனும் எடுத்துச் சொல்லும் ஒரு துணிச்சல்மிகு தையிரியசாளி. இதனால் பல விருதுகள் அவரைத் தேடி வந்தன.அவற்றில் ஒன்றுதான் மூத்த பெண் படைப்பாளர் என்ற விருது.

இதனை 2004 ஆம் ஆண்டு கப்டன் வானதி பதிப்பகத்தினர் வழங்கி மதிப்பளித்தனர்.

இப்படியாக பல்வேறு பரிமாணங்களில் தன்னைப் பட்டை தீட்டிக் கொண்ட படைப்பாளியால்தான் புள்ளிகள் கரைந்த பொழுது என்ற நாவல் படைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நாவல் எங்கள் மண்ணில் நடந்த பேரவலத்தை கற்பனையோ, கனவுகளோ,புனைவுகளோ இன்றி, தான் கண்ணால் கண்ட காட்சிகளையும், காதால் கேட்டதையும,; கூடவே இருந்து அனுபவித்து உணர்ந்ததையும்,உள்ளதை
உள்ளபடி தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.


தனக்கே சொந்தமான இலகுவாக அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய அழகான எளிய மொழிநடையில்,தமிழுக்கே சிறப்பைத்தரும் உவமை உவமான அணிகளைக் கோர்த்து, அந்தநாளின் நினைவுகளை ஒன்று குவித்து இந்த நாவலில்;;;; பாத்திரங்கள் ஊடாக நகர்த்தியிருக்கின்றார் ஆசிரியர். நாவலுக்கே உரித்தான இலக்கியப் பண்பில் இருந்து வழுவாமல்,ஓர் உண்மைச் சம்பவத்தைப்,பிரச்சாரப் போக்கின்றி,நாவலுக்குரிய உருவப்பண்பையும் மீறாமல்,அழகியல் உணர்வையும் மீறாமல், இலக்கியத்துக்குரிய தன்மையோடும்,அதே நேரத்தில் மண்வாசனையும் யாதார்த்தப் பண்பும் குன்றாமல்,
மிக அழகுறப் படைத்திருக்கின்றார். இதில் படைப்பாளியின் அனுபவம் கூடவே எட்டு ஆண்டுகால உழைப்பு என நின்று நிதானித்து மிக அழகுறச் செதுக்கப்படடிருக்கின்றது இந்த நாவல்.


இதில் செல்வராசு என்கின்ற பாத்திரம் பிரதான பாத்திரமாக வருகின்றது.கூடவே அவரது மனைவி இரண்டு பிள்ளைகள், அயல்வீட்டு சுந்தரமண்ண குடும்பம். இடம்பெயர்ந்து செல்லும்போது புதிதாக அவர்களுடன் இணையும் சுகியும் கைக்குழந்தையும்,அப்படியே கொஞ்சத்தூரம் போக தனிமனிதனாக இணையும் பரமேசு என்கின்ற பாத்திரம். தேவிபுரத்திலிருந்து இவர்களோடு இணையும் முருகேசு அண்ண குடும்பம் என
இந்தக் கதையில் பல பாத்திரங்கள் இணைந்து பயணிக்கின்றன.

இது நாவல் என்று சொல்வதைவிட அந்தக்காலத்தின் கோலத்தை எடுத்துக்காட்டும்,பதிவிட்டுக் காட்டும், உண்மைகளைத் தொகுத்துச் சொல்லும் வரலாற்று ஆவணத்துக்குரிய தகைமைகளையும் இந்த நாவல் கொண்டிருக்கின்றது.இன்று அதனுடைய அருமை புரியாது ,ஆனால் ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்குப்பின்
வருகின்ற எங்கள் பிள்ளைகள் தங்கள் மண்ணின் கதைகளை அறியவோ ஆய்வுகள் செய்யவோ முயலுகின்றபோது இந்த நாவல் நிச்சயம் வழிகாட்டும் என்பது எனது நம்பிக்கை.

இந்த நாவலுக்குள்ளே நுழைந்து நான் வெளியேறிய போது, அரசியல்,பொருளாதாரம்,
சமூகம்,பண்பாடு,இலக்கியம்சார் அனுபவம் எனப் பல்வேறு தளங்களில், பல்வேறு பரிமாணங்களில் ஆசிரியருக்குள் இருந்த பல்துறை ஆளுமை மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது.

உண்மையிலே எங்களது அரசியல் தலைவர்கள் செய்த சில தவறுகள் நறுக்கென்று
சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. முஸ்ஸிம் மக்களுக்கு சேனநாயக்கா புரிந்த கொடுமைகளுக்காக பிரிட்டிஸ் காரர்கள் அவரைச் சிறையில் அடைத்தபோது சேர் பொன் இராமநாதன் பிரிட்டிஸ் மகாராணியிடம் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி சேனநாயக்காவை சிறையில் இருந்து மீட்டு வருகின்றார்.. ஆனால் அதே சேனநாயக்கா
பிரதமராக வந்தபோது சிங்களக் குடியேற்றம் என்ற பெயரில் தமிழர்களின் நிலங்கள் பறிக்கக் காரணமாக இருக்கின்றார். இதனை செல்வராசு என்கின்ற இந்த நாவலின் கதாபாத்திரம் கதையோடு கதையாகச் சொல்கிறது.

எங்கள் சமூகம் எப்போதும் கட்டுக்கோப்பானது, பண்பாட்டுக் கோலங்களால் பின்னப்பட்டது. அப்படியான கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகின்றாள் செல்வராசின் மனைவியான சோதி என்ற பாத்திரம். யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர்ந்து அக்கராயன் ஆனைவிழுந்தானில் வசிக்கின்ற போது சனக்கூட்டத்துக்குள் குளிக்கவோ, இயற்கை கடன்களைக் கழிக்கவோ உணவு உண்ணவோ மறுத்து அடம்பிடிக்கும் பாத்திரமாக இருக்கும் சோதி முள்ளிவாய்க்கால் இடப்பெயர்வில் இருளை மறைப்பாக்கி இயற்கை கடன்களை முடிக்கும் அளவுக்கு போர்ச்சூழல் அவளின் வாழ்வியலை மாற்றிப் போடுகின்றது.

தமிழர்களுக்கே உரிய நகைச்சுவை உணர்வு சாவு துரத்துகின்ற போதுகூட குன்றாமல் இருந்ததை இந்த நாவலில் பல இடங்களில் காணக்கூடியதாக இருந்தது.

செல்வராசு குடும்பத்தோடு சேர்ந்தே இடம்பெயருகின்றது அயல்வீட்டு சுந்தரமண்ண குடும்பம். அவரது மனைவி இடம்பெயரத் தொடங்கும்போது அழகாக சேலை உடுத்தி ஏதோ சுற்றுலாவுக்குப் புறப்படுவதற்கு தயாராகி நிற்பது போல வெளிக்கிட்டு நிற்பதை ஓரிடத்தில் காணக்கூடியதாக இருந்தது.

இந்தக்கதையில் வந்து போகின்ற ஒவ்வொரு பாத்திரமும் மிகஅழகாக கோர்க்கப்பட்டிருக்கின்றது. சுகி என்ற பாத்திரம் கையில் குழந்தையோடு வருகிறாள். அவளுக்கு உதவிக்கு யாரும் இல்லை. கணவன் போராளியாகக் களமுனையில் நிற்கின்றான்;. செல்வராசுதான் அவளையும் தம்மோடு கூட்டிச்செல்கிறான். பலத்த சண்டைகள் நடக்கின்ற போதேல்லாம் அவள் தனது கணவனை நினைத்து அழுவாள்.
அவர் எந்தப்போரரங்கில் நிற்கிறார், அவருக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாது
அவதிப்பட்டுக் கொண்டே இருப்பாள். கடைசி வரை கணவணைப்பற்றி எதுவும் அறியாமலே முள்ளிவாய்காலை விட்டு வெளியேறுகிறாள் , உண்மையிலே போராளிகள் தங்கள் குடும்பங்களை விட தங்கள் கடமைக்குத்தான்

முதன்மை கொடுத்தார்கள் என்ற செய்தி இங்கே பதியப்பட்டிருக்கின்றது.அடுத்து பரமேசு என்கின்ற பாத்திரம் எல்லாவற்றையும் இழந்து கடைசியில் எஞ்சியிருந்ந தாயையும்
இழந்து தனிமரமாக வருகின்றான்.


அவன் வாழ்வதற்கான நம்பிக்கைகள் எல்லாம் இழந்த போதும் அவனுக்குள் இருக்கும் அழகான காதல் அவனைவாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அவன் ஒரு மருத்துவப் போராளியைக் காதலித்தான்.சண்டையெல்லாம் முடிந்தபிறகு இருவரும் உயிரோட இருந்தால் கலியாணம் செய்வதாக அவன் எண்ணியிருந்தான். இடம்பெயர்ந்து செல்லும் இடமெல்லாம் முடிந்தவரை அவன் அவளைத் தேடிக்கொண்டே இருக்கின்றான்.ஆனால் கடைசிவரை அவளைச் சந்திக்கவே முடியவில்லை.கடைசியில் முள்ளிவாய்க்காலில் அவள் வீரச்சாவடைந்த செய்தியை அவளது தோழி மூலம் அறிந்து கொள்கின்றான். அந்த இழப்பை யீரணிக்க முன்பே அவனும் எதிரியின் தாக்குதலில் சாவடைகின்றான். அந்தளவிற்கு சாவுகள் மலிந்த பூமியாய் எங்கள் மண் இருந்தது.

இறந்தவர்களை அரைகுறையாய்ப்; புதைத்தும் புதைக்காமலும் இருக்கும் இடங்கள்தான் மக்களின் இயல்பான வாழ்விடங்களாக மாறியது. நாவலிலே ஒரு இடத்தில் வருகின்றது.ஒருபெண் சமையல் செய்து கொண்டிருக்கின்றாள்;. பக்கத்தில் அரைகுறையாய் தாக்கப்பட்ட உடலின் பாகங்கள் தெரிகின்றது.

அந்தளவுக்கு போரின் கோரத்துக்குள் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற செய்தி இங்கே
சொல்லப்படுகின்றது. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் பெற்றோர் இருக்கும் பிள்ளைகள் தாம் வீரச்சாவடைந்தால் இங்கே தமக்கு பழக்கமானவர்கள் நெருக்கமானவர்களது பெயர் முகவரிகளை உரித்துடையவாகளாக கொடுத்திருந்தார்கள்.

அப்படிக் கொடுக்கப்பட்ட பிள்ளைகள் வீரச்சாவடைந்த போது அந்த வித்துடலை எடுத்து தன்சொந்தப் பிள்ளைக்கு கடமை செய்வது போல் செய்திருக்pறார்கள்.இது நாம் அறிந்தது மட்டுமல்ல நேரில் பார்த்ததும் கூட, அதை இந்த நாவலில் கிளிநொச்சி கிஸ்ணபுரத்து அம்மா மட்டக்களப்புப் போராளி ஒருவரின் நினைவு நாளன்று முதியோர்கள் சிலருக்கு உணவும் உடையும் வழங்;குகின்றார்.

இங்கே |யாரையும் யாருமில்லாதவர்களாக யாரும் விட்டதில்லை| என்ற பெரும் செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. இறுதிப்போர் நடந்த நாட்களில் மக்கள் மனங்களில் இருந்த ஆதங்கங்கள் பல இந்த நாவலில் வெளிப்பட்டுக் கிடப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. உலக நாடுகள் நாங்கள் அழிந்து கொண்டிருப்பதைப் பற்றி வாய்திறக்கவில்லையே. என்பது அந்த சூழலுக்குள் வாழ்ந்த மக்களின் பெரும் கவலையாக இருந்தது.

தமிழ் மக்களை குண்டுபோட்டு சிங்களவன் அழித்துக்கொண்டிருக்கின்றான். வயது வேறுபாடு இன்றி எமது இனம் அழிந்து கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் இழப்புகளின் அருமை அவர்களுக்குப் புரியும் என்பது ஒரு சிலரின் ஆதங்கமாக இருந்தது. ஆனால் அவர் ஒருபோதும் சிங்களச்சனத்துக்கு அடிக்கமாட்டார் அவரைப் பொறுத்தவரை அரசாங்கத்துக்கும் அரசாங்கத்தின்ர படைகளுக்கு எதிராகவும்தான் போரட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறாரே தவிர அந்த
சிங்களச் சனத்துக்கு எதிராக இல்லை என்கின்ற செய்தி 2,3.தடவை வந்து போகின்றதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

அதேபோல் தேசியத் தலைவர் அவர்களை எந்தளவுக்கு மக்கள் மதித்தார்கள் நேசித்தார்கள் என்பதை பல இடங்களில் இந்த நாவலின் கதாபாத்திரங்கள் பேசுவதை உணரக்கூடியதாக இருந்தது. 

ஓர் இடத்திலே செல்வாராசு வேண்டிக் கொள்ளுவான் கடவுளே அவருக்கு மட்டும் சாவற்ற ஆயுளைக் குடுத்திடப்பா என்று …
இப்படியாக இன்னுமொரு இடத்திலே வெள்ளையன்ர ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணா விரதமிருந்த மகாத்மா காந்திய மகான் என்று எங்கட ஆட்கள் கொண்டாடுகினம்..

ஊரில சில பழைய ஆட்களின்ர வீடுகளில படம்கூட வைத்திருக்கினம்.

ஆனால் அதே அகிம்சை வழியில உண்ணாவிரதமிருந்த திலீபனை ஏன்மறுக்கினம். விமர்சிக்கினம்..என்ற யதார்த்தமான கேள்வி சாதாரண மக்களால்
எழுப்பப்பட்டிருக்கின்றது.

மக்கள் வாழ்க்கையில் இயல்பாக வருகின்ற சாமத்தியவீடு, கலியாணம்,குழந்தைப்பேறு என்பவை இந்த நாவலுக்குள்ளும் வருகின்றது. இந்தச் சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு எங்கள் சமூகம் எப்படி முதன்மை கொடுத்து இருந்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இங்கே குழந்தை பெற்ற பெண் இரண்டு மூன்று நாட்களாக உண்பதற்;குக் கூட எதுவுமின்றி நடக்கமுடியாமல் ஒரு ஓரத்தில் இருப்பதைக் காணமுடிகின்றது.

இப்படியாக இந்த நீண்ட பயணத்தில் தான் பார்த்த அனுபவித்த அறிந்த உண்மைச் சம்பவங்களை அழகான கதைப்பின்னலோடு நாவலின் பாத்திரப் படைப்புக்கள் ஊடாக, செய்தியைக் கொண்டு வந்த முறை,எங்களின் வரலாறுகளை யதார்த்தமாக நாவலுக்குள் புகுத்தும் உத்தி என படிப்போர் மனதைத் தொடும் வகையில், எங்கள் மண்ணில் நடந்து முடிந்த மனிதப் பேரவலத்தை நாளைய தலைமுறையினரின் கைகளில் பக்குவமாக
ஒப்படைத்திருக்கிறார்.

உண்மையிலே உளவியலாளர்கள் சொல்லுவார்கள் அவலங்களை மறந்து விடுங்கள் என்று,ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லுவார்கள் வரலாற்றைப் பதிவு செய்யுங்கள் என்று இப்படி இரண்டு முரண்நிலைகளுக்கிடையில் இந்த நாவல் வெளிவந்திருக்கின்றது.

ஏனெனில் இன்று 2009 ற்குப் பின் வரும் படைப்புக்கள் சில வழிதவறிப் பயணிப்பதை நாங்கள் கண்ணூடாகக் காண்கின்றோம்.இந்த நிலையில் இப்படியான நம்பகத் தன்மையோடும்,உணர்வோடும் உயிர்ப்போடும் படைக்கப்பட்டிருக்கும் இந்த நாவல் காலத்தின் தேவை.

எமது போராட்ட வாழ்வின் உண்மைகளை கலை இலக்கியப்படைப்புக்கள் தரிசித்து நிற்க வேண்டும.;எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்கு முறையின் கொடூரத்தினை சிரிஷ்டி கர்த்தாக்களாகிய நீங்கள்தான் சித்தரித்துக்காட்ட வேண்டும் என்ற எங்கள் தேசத்தலைவரின் எண்ணத்தினை சகோதரி ஆதிலட்சுமி சிவகுமார் செயல் வடிவம் கொடுத்திருக்கின்றார்.

தாரகம் இணையத்திற்க்காக அ.அபிராமி

குறிப்பு:>