Take a fresh look at your lifestyle.

தேசியத் தலைவரின் ஆன்ம பலம்

தேசியத் தலைவரின் ஆன்மஇலங்கையின் போக்கு உலகப் பார்வையாளர்களை தமது பக்கம் ஈர்த்துள்ளது. இலங்கையின் விடுதலை தமிழர்களின் வாழ்வியல் தன்மைகளைத் தடமாற்றியது. கிழக்கிந்தியக் கம்பெனியின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த இலங்கையின் இறையாண்மை, தமிழர்களை அடிமையாக்கத் துணை புரிந்தது. இலங்கையின் விடுதலைக்குப்பிறகு தான் தமிழினத்தின் அடிமை வாழ்வு அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொண்மை வாய்ந்த ஒரு இனம் தம்முடைய வாழ்வுரிமைக்காக அமைத்தக் களங்கள், அழித்த உயிர்கள், இழந்த செல்வங்கள், அளவிடமுடியாதவை. ஆனாலும் தமக்கான ஓர் அடையாளத்தைப் பெற்றுக் கொள்ள தாம் எந்த நிலைக்கும் செல்லத் தயாராக இருந்துகொண்டு வருகிறோம்.

வரலாறு என்பது ஆற்றைப் போல தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். தமிழீழ மக்களின் போராட்ட வரலாறும் அவ்வாறே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஓடாத ஆறு தேக்க நிலையை அடைந்து குட்டையாகிவிடும். ஆகவே வரலாறு என்பது ஆற்றைப் போல இயங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். எந்த ஒரு இயக்கமும் தமது தேவையை கருத்தில் கொண்டே அமைகிறது. தேவைகளே படைப்புகளின் தாய் என்கிற கூற்றின்படி விடுதலை என்னும் தேவையை போராட்டம் என்கிற வடிவங்களை படைத்தளிக்கிறது. தமிழீழ போராட்ட வரலாறும் தேவையை முன்னிருத்தியே தொடங்கப்பட்டதால் அது தமக்கான தேவையை அடையும் வரை தமது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளாது. நிறுத்திக் கொள்ளாது என்று சொல்வதைவிட நிறுத்திக் கொள்ள முடியாது என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

விடுதலைப் போராட்டமென்பது சாதனைகளின் தொகுப்பல்ல. சாதித்தப் பின்னர் ஓய்வெடுக்க முடியாது. தமிழீழ மீட்பு என்பதும் மீட்புக்குப்பின் ஓய்வெடுக்கக் கூடிய இயக்கமல்ல. மாறாக தமது மக்களின் விடுதலையை வென்றெடுத்தப் பின் தாம் இழந்த இன மான அடையாளத்தை மீண்டுமாய் புதிய கட்டமைப்புச் செய்ய வேண்டும். தொன்மை வாய்ந்த தமது மொழி அடையாளங்களை, இலக்கியப் பதிவுகளை பண்பாட்டுத் தன்மைகளை, கலாச்சார உருவகங்களை, அழுத்தமாய் சந்தேகத்திற்கு இடமின்றி வழிவழியாய் காக்கப்படுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும், அரிய அறிவியல் படைப்புகளாலும், பன்னாட்டு மயத் தன்மைகளாலும், உலக முதலாளித்துவ சுரண்டல்களாலும் தேசிய இனங்களின் தன்மைகள், உலகெங்கும் சிதைவடைந்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் தமிழ் தேசியம் உயர்ந்தோங்கி நிற்பதற்கும் தமிழ் தேசிய தலைவரே காரணம். கலை இலக்கிய பண்பாட்டுத் தளங்கள் மட்டுமின்றி அவர்களுடைய தனிமனித வாழ்வும், பொருளாதார தேடல்களும், அவர்களுக்கானத் தேவைகளும் நிறைவாக்கப்பட வேண்டும். இதுதான் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் அடையாளமாகத் திகழும். இந்த அடிப்படையில்தான் தமிழீழ விடுதலை இயக்கம் நமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைப் போக்கு அமைந்திருந்தார்.

தமிழீழ குடியரசு அமையும்போது தமது மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்காக பாசன வழிமுறைகளை விவசாய நிலங்களின் பாதுகாப்பை உழவுத் தொழிலின் அடிப்படைக் கட்டமைப்புகளை மறுசீரமைப்புச் செய்ய இத்துறை குறித்த பல்வேறு அறிஞர்களை அழைத்து தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார். இயக்க உறுப்பினர்களை உலகெங்கும் பரவலாக அனுப்பி அவர்களை விண்வெளி ஆய்வு, ஆழ்கடல் ஆராய்ச்சி, அதி நவீன தொழில் நுட்பங்களை அறிந்துவர கட்டளையிட்டிருக்கிறார். சட்டம், அறிவியல், புவியியல், வேதியியல், இயற்பியல், கல்வித் தொடர்பான பாடத்திட்டங்களை முழுக்க முழுக்க தமிழிலேயே கற்றுத்தரத் திட்டம் வகுத்து அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை சிந்தித்து பாடதிட்டங்களை உருவாக்கியிருந்தார். போராளிகளை மட்டுமல்ல, நாட்டின்மீது பற்றுக்கொண்ட ஒவ்வொருவனும், போராளியாக இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாக தமிழீழ மக்களை போர் பயிற்சிக்கு உட்படுத்தியிருந்தார்.

இந்த தொலைநோக்கு ஏதோ இனம் புரியாத பரவசத்தால் தோன்றியது அல்ல. இது மக்கள் மேல் கொண்ட அக்கறையால் பன்னெடுங்காலத்திற்கு தமிழீழம் என்கிற மண், அந்த மண்ணின் பாரம்பரியம், அந்த மண்ணிற்கே உரிய ஒழுக்கம் ஆகியவை எக்காலத்திலும் அழியாதவாறு ஒரு தெளிவான சித்தாந்தத்தை நமது தேசிய தலைவர் வகுத்து வைத்திருக்கிறார். ஒன்றுபட்ட சோவியத் ஒன்றியத்தின் அரசு இருக்கும்போது இந்தியாவில் இருந்து சென்ற ஒரு கணித மேதை அங்கு பள்ளிகளை பார்வையிடச் சென்றார். அங்கு நான்காம் வகுப்பு அறைக்குச் சென்று அங்குள்ள மாணாக்கரை கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு மாணவனை எழுப்பி ஒரு ஆப்பிள் நான்கு ரூப்பிள் வீதம் என 5 ஆப்பிள்களை வாங்கி, அதை ஆறு ரூப்பிள்கள் வீதம் விற்பனை செய்தால் நமக்கு எத்தனை ரூப்பிள் லாபம் கிடைக்கும் என கேட்டாராம்.

அதற்கு அந்த மாணவன் குறைந்த பட்சம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 500 ரூப்பிள் தண்டமும் செலுத்த நேரிடலாம் என கூறினானாம். கேள்வி கேட்டவருக்கு அதிர்ச்சி. ஏன் என்று அந்த மாணவனைக் கேட்டபோது, அந்த மாணவன் கூறினான். பொருளிற்கான விலை நிர்ணயம் செய்ய நமக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. எந்த ஒரு பொருளுக்கும் விலையை நிர்ணயிக்க அரசுக்கு மட்டுமே உரிமையிருக்கிறது. ஆகவே இதுதான் கிடைக்கும் என்றான்.

ஆக சிறு குழந்தைகளுக்குக் கூட ஒரு பொருளின் விலையை மட்டுமல்ல, அந்த நாட்டின் தன்மைகளை கற்றுத் தந்து தமது நாட்டின் மேல் மரியாதையையும், நேர்மை மீது நம்பிக்கையையும், உருவாக்கி வைத்திருந்த மாமனிதன் லெனினுக்குப் பிறகு தமது நாட்டில் இந்த நேர்மையும், உண்மையும் செழித்தோங்க வேண்டும் என்ற சிந்தனை கொண்ட தலைவராக நமது தேசிய தலைவர் திகழ்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். இதுதான் நம்மை தமிழீழ மண்ணின் மீது பற்றுக் கொண்டவர்களாக உருமாற்றும்.

அதைப்போன்று வியட்நாம் போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்க ஏகாதிபத்திய அரசு தோழர் ஹோசிமின்னுக்கு எதிராக சவால் விடுத்தது. எங்களிடம் இத்தனை அணுகுண்டுகள் இருக்கின்றன. இனி நடக்கும் போரில் நாங்கள் அணுகுண்டுகள் வீசுவோமென ஹோசிமின் பதிலளித்தார். எங்கள் மண்ணில் வாழும் ஒவ்வொரு வியட்நாமியனும் அணுகுண்டுகள் தான் என்பதை மறந்து விடாதீர்கள் என. இதைத்தான் தேசியத்தலைவரும் சிங்கள பேரினவாதத்திற்கெதிராக அறைகூவல் விடுத்தார்.

நாங்கள் கருவிகளின் பலத்தால் களத்தில் இருக்கவில்லை. மாறாக எங்கள் ஆன்ம பலத்தால் களமாடிக் கொண்டிருக்கிறோம் என. ஆக விடுதலைப் போராட்டத்தில் வரலாற்று நிகழ்வுகளோடு தமிழீழ மீட்புப் போராட்டமும் இணைந்து போனதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தேசியத் தலைவரின் ஆன்ம பலம் தான் சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து முறியடித்தது. எந்த நிலையிலும் தம்மின மக்களுக்காகத் தம்மை சமரசப்படுத்திக் கொள்ளாத அச்சமற்ற மனநிலைதான் நமது தேசியத் தலைவரோடு வெற்றியாய் தொடர்ந்து நடந்தது. நமது தேசியத்தலைவரின் சிந்தனைப் போக்கே இப்போது வெற்றி வாகை சூடியிருக்கிறது. சரத்பொன்சேகவின் துணைவியார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இலங்கை மக்கள் அனைவரும் ராஜபட்சேவின் அடக்குமுறைக்கெதிராக போராட முன்வர வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார்.

மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து இனவெறியாட்டம் போட்ட ராஜபக்சேவின் அடக்குமுறைகளை, அநியாயங்களை, குருதி வெறியை சிதறடித்து அந்த பேரினவாதியின் குடைசாய்க்க எலி, புலிகள் முன் கருவியேந்த வேண்டியதில்லை. நமது தேசிய தலைவரின் ஆன்ம பலமே அந்தக் கொடுங்கோலனை வீழ்த்த போதுமானது.

நமது தேசியத்தலைவரும், தமிழீழ மக்களும், இணைந்து குரலெழுப்பி அறிவித்த போது, அறியாமல் வாழ்ந்த உலகச் சமுதாயம், இப்போது மஹிந்தவின் கொடூர குணத்தை அறிந்து வருகிறது. இப்போது உலகிற்கு தெரியும், நமது தேசியத் தலைவரின் ஆன்ம பலம்.

கண்மணி.

பலம்

குறிப்பு:>