Take a fresh look at your lifestyle.

இலங்கை பாராளுமன்றம் கலைப்பு- வைகோ, அன்புமணி ,தினகரன் கண்டனம்.!

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு  தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் அதிகார சதுரங்கப் போட்டியில் தமிழ் இனப் படுகொலை நடத்திய மகிந்த ராஜபக்சேவின் தமிழர் ரத்தம் தோய்ந்த கரங்களில் இலங்கையின் முழு அதி காரத்தையும் மீண்டும் வழங்குவதற்கு இன்றைய அதிபர் மைத்திரிபால சிறிசேனா திட்டமிட்டு சதி நாடகத்தை நிறைவேற்றிவிட்டார்.

2019 ஜனவரி 5-ந் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று இலங்கை அதிபர் அறிவித்துள்ளார். சிங்களப் பேரினவாதத்தின் உச்சகட்ட அராஜகம் மீண்டும் அரங்கேறப்போகிறது. ஈழத் தமிழ் இனத்தையே கருவறுக்க வேண்டும் என்று படுகொலை நடத்திய ராஜ பக்சேவை சிங்கள இனவாத வெறியர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.

மகிந்த ராஜபக்சேயின் சகோதரன் கொத்தபய ராஜபக்சே அடுத்து நான் அதிபராவேன் என்றும் கூறியிருக்கிறான். ராஜபக்சே கூட்டத்துக்குப் பெரும்பான்மை கிடைத்தால் அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்து மகிந்தனே மீண்டும் அதிபராகவும் வாய்ப்பு ஏற்படலாம்.

இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு ஒருகாலும் நீதி கிடைக்காது. மகிந்த ராஜபக்சே கரங்களுக்கு மீண்டும் அதிகாரம் வருமானால், முதல் கட்ட மாக ஈழத்தமிழர்களின் பண் பாட்டுத் தனித்தன்மையை அழிக்க கட்டமைத்த கலாச்சாரப் படுகொலையை நடைபெறும். தற்போது தமிழர் பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் சிங்கள ராணுவத்தை மேலும் அதிக அளவில் நிலைப்படுத்துவார்கள். சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் தாயகத்தில் அதிகமாகும். வடக்கு கிழக்கு இணைப்புக்கு வழியில்லாமல் செய்ய ஏராளமான சிங்களக் குடியேற்றங்களை மேலும் அதிகப்படுத்தும் நிலை ஏற்படும்.

வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் மாகாணசபையில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, சிங்கள ராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களையும் வெளியேற்றவும், சிறையில் இருக்கும் தமிழர்களை விடுதலை செய்யவும், இனக்கொலைக் குற்றவாளிகளை அனைத்துலக நீதிமன்றத்தில் கூண்டியில் நிறுத்து வதற்கான நீதிப் பொறி முறை அமைக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும் தாய்த் தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள மானத் தமிழர்கள் தமிழ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். உலக நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா.மன்றத்திலும், மனித உரிமைக் கவுன்சிலிலும் குரல்கொடுக்க வேண்டும்.

சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான் ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வாகும் என்பதனை மனதில் நிறுத்தி, தமிழ் ஈழ விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள், தங்கள் உயிர்களைக் கொடையாகத் தந்தவர்கள், படுகொலைக்கு ஆளான தமிழர்களையும் நெஞ்சில் நிறுத்தி சூளுரை மேற்கொள்வோம்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

இலங்கை நாடாளுமன்றத்தை நேற்று நள்ளிரவில் கலைத்த அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா, புதிய நாடாளுமன்றத்தை அமைக்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் திடீரென கலைத்திருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையாகும்.

இலங்கை அதிபர் பதவியிலிருந்து எந்தக் காரணமும் இல்லாமல் தான் ரனில் விக்கிரமசிங்கே நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல், பிரதமர் பதவியை வகிப்பதற்கு தேவையான எந்த பெரும்பான்மையும் இல்லாத நிலையில் தான் ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக எந்தெந்த வகைகளில் எல்லாம் சட்டத்தை வளைக்க முடியுமோ? அந்தந்த வகைகளில் எல்லாம் சட்டங்கள் வளைக்கப்பட்டன. இலங்கை நாடாளுமன்றத்தையே முடக்கும் அளவுக்கு அதிபர் சிறிசேனா சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சர்வாதிகாரியாக செயல்பட்டார்.

இலங்கை அதிபர் சிறிசேனா அவரது சொந்த செல்வாக்கில் வெற்றி பெறவில்லை. 2015-ஆம் ஆண்டு தேர்தலில் ராஜ பக்சேவுக்கு எதிரான தமிழர்களின் வாக்குகளால் தான் அதிபர் தேர்தலில் அவரால் வெற்றி பெற முடிந்தது. தமிழர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற சிறிசேனா தமது பழைய இனப்படுகொலை கூட்டாளியுடன் அணி சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது நியாயமல்ல.

இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து விக்கிரம சிங்கே நீக்கப்பட்டு ராஜபக்சே நியமிக்கப்பட்ட போதே இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட்டிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்திருக்காது. இந்த வி‌ஷயத்தில் இந்தியா இனியும் அலட்சியம் காட்டாமல், இலங்கை சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அம்மா மக்கள் முன் னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்:-

தமிழர்களுக்கு தீங்கிழைக்கும் எந்த சூழலும் இலங்கையில் ஏற்படாதவண்ணம் ஐ.நா மன்றமும், இந்திய அரசும் கண்காணிக்க வேண்டும். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட செய்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட கொடூர நாட்களின் சுவடுகள் மறைந்து அமைதியான வாழ்வை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.

இலங்கையில் தமிழர் இன அழிப்பை முன்னெடுத்த ராஜபக்சேயை, அதிபர் சிறிசேனா பிரதமராக அறிவித்த கொடுமையை, அந்நாட்டு நாடாளுமன்றம் முறியடித்துவிடும் என்று உலகமே எதிர்நோக்கியிருந்த நேரத்தில், இந்த ஜனநாயக விரோத செயலை புரிந்த இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனவெறி கொண்ட ராஜபக்சேவுக்கு அதிகாரத்தை கொடுக்க முயற்சிக்கும் இச்செயல், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இந்திய அரசு இந்த நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், நலனுக்கும் தீங்கு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐ.நா.மன்றம் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை அழிக்கும் இந்த அக்கிரமச் செயல் வீழ்த்தப்பட வேண்டும்.

 

 

குறிப்பு:>