Take a fresh look at your lifestyle.

வெற்றுக்காசோலையில் மீண்டும் ஒரு கையொப்பம்?

கொழும்பில் இரு பிரதான சிங்களக் கட்சிகளுக்கும் இடையில் சூடுபிடித்த அதிகாரப் போட்டி உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில், இவ்விடயத்தில் தமிழர் தரப்பின் அணுகுமுறை எவ்வறானதாக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. உலக நாடுகளும், இராஜதந்திரிகளும் கூட தமிழ்த் தரப்பின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவதில் ஆர்வமாக இருக்கின்றார்கள். அடுத்த கட்ட நகர்வுகளுக்கு அது குறித்த தகவல்கள் அவர்களுக்கும் அவசியமாகலாம்.  

இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு, ஜெனீவா விவகாரம், பொறுப்புக் கூறல் போன்ற பல விடயங்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அதனால், தமிழர் தரப்பிலும் ஆரோக்கியமான காய்நகர்த்தல்கள் அவசியம் என்பதை இராஜதந்திர வட்டாரங்கள் மறைமுகமாக தமிழர் தரப்புக்கு இடித்துக்கூறியிருப்பதாக அறியமுடிகின்றது. அதனால்தானோ என்னவோ இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் இந்தப் பிரச்சினையில் உற்சாகமாக தமது ‘பங்கை’ செய்கின்றது.

ஆனால், வழமைபோலவே இந்த விடயத்திலும் தமிழர் தரப்பு ஒரு முகமாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

“இராமர் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன?” என்பதுதான் ஒரு சிலரின் நிலைப்பாடு. அதாவது,  “யார் ஆண்டாலும் எமக்கு ஒன்றுதான். ஆனபடியால் நாம் எமது வேலைகளைச் செய்துகொண்டிருப்போம். கொழும்பு அரசியல் எப்படியாவது போகட்டும்” என்பது அவர்களுடைய கருத்து. குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அனந்தி சசிதரன் போன்ற தீவிர போக்கை வெளிப்படுத்துபவர்களின் நிலைப்பாடு இதுதான். கொழும்பு அரசியல் அதிரடிகளை வெறுமனே ஒரு செய்தியாக மட்டும்தான் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த அதிகாரப் போட்டியை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது மற்றொரு சாராரின் கருத்து. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனைத்தான் சொல்கின்றது. கூட்டமைப்புடன் முரண்படும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் அதனைச்தான் சொல்கின்றார். ஆனால், இந்த இருவருமே அதனை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதில்தான் முரண்படுகின்றார்கள் போலத் தெரிகின்றது.

கூட்டமைப்புக்கு இன்றுள்ள மிகவும் முக்கிய பலம் அதனிடமுள்ள 14 வாக்குகள்தான். சிவசக்தி ஆனந்தனும், வியாழேந்திரனும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்தாலும், எஞ்சியுள்ள 14 வாக்குகள் நிர்ணயிக்கும் வாக்குகளாக உள்ளன. அதாவது 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும் சுமார் 105 உறுப்பினர்களையே தம்மிடம் வைத்துள்ளன. அதனால்தான் நிர்ணயிக்கக்கூடிய சக்தி இன்று சம்பந்தனின் கைகளில் உள்ளது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்காமல் பிரதமராகப் பதவியேற்ற மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆப்பு வைத்தது இந்த 14 வாக்குகள்தான். அதேபோல, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.மு. அரசாங்கம் மீண்டும் பதவியேற்க வேண்டும் என ஜனாதிபதிக்குக் கொடுத்த கடிதத்திலும் இந்த 14 உறுப்பினர்களும் கையொப்பம் வைத்துள்ளார்கள். ஆக, அக்டோபர் 26 க்கு முன்னைய நிலைமை மீண்டும் வருமாக இருந்தால் அதற்கும் கூட்டமைப்புதான் காரணமாக இருந்திருக்கப்போகின்றது.

அந்த வாக்குகளை வைத்து ரணிலுடன் பேரம்பேசுவது சரியானதா? என்பதும் அதன் மூலமாகக் கிடைக்கும் உத்தரவாதம் என்ன? அவை நடைமுறைப்படுத்தக்கூடியவையா? என்பதும் ஆராயப்பட வேண்டியவை. வழமையாக “ஆற்றைக்கடக்கும் வரைதான் அண்ணனும் தம்பியும்…” என்ற நிலைதான் இருந்துவந்திருக்கின்றது. அதாவது நெருக்கடிகள் உருவாகும் போது மட்டுமே சிறுபான்மையினக் கட்சிகளின் தயவு இரு பெரும் இனவாதக் கட்சிகளுக்கும் தேவையாக இருக்கும். அந்தத் தேவை முடிந்தவுடன் அதனைக் கைவிடுவது அவர்களுடைய வழமை. இது சரித்திரம்.

கூட்டமைப்புக்கு மூன்று விடயங்களில் ரணில் எழுத்துமூலமாக வாக்குறுதியளிப்பார் என முதலில் வெளிவந்த செய்திகள் தெரிவித்தன. அதாவது, அடுத்த பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்துக்கு முன்னதாக புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருதல் (அந்த அரசியலமைப்பில் என்ன இருக்கும் என்பது தனியாக ஆராயப்பட வேண்டிய பிரச்சினை), கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு என்பனவே அவை. பிந்திய தகவல்களின்படி எழுத்து மூலமாக வாக்குறுதியளிக்கப்படாது எனத் தெரிகின்றது. அதில் சில பிரச்சினைகள் இருப்பதால், வாய்மொழி மூலமாவே வாக்குறுதியளிக்கப்பட்டதாம்.

அதனை நம்பியே கூட்டமைப்பு எம்.பி.க்கள் 14 பேரும் மகிந்தவை பதவிநீக்கம் செய்வதற்கான நீதிமன்ற மனுவிலும், ஐ.தே.மு. வை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்காக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலும் கையொப்பமிட்டனர். கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலர் நாம் மீண்டும் ஏமாறக்கூடாது எனக் கடும் தொனியில் இதனை எதிர்த்த போதிலும், கூட்டமைப்புத் தலைமையின் கடுமையான அழுத்தம் காரணமாகவே அவர்கள் தமது கையொப்பங்களை வைத்தார்கள்.

இந்த இடத்தில்தான் கூட்டமைப்பின் தலைமைக்கும் விக்கினேஸ்வரனுக்கும் இடையில் முரண்பாடுகளைக் காணமுடிகின்றது. எழுத்து மூலமாக கொடுத்த வாக்குறுதிகளையே சிங்கள சிங்கள இனவாத அரசுகள் கிழித்தெறிந்தமை வரலாறு. சரித்திரப் பிரசித்தி பெற்ற பண்டா- செல்வா உடன்படிக்கை, டட்லி- செல்வா உடன்படிக்கை என்பன சிங்கள அரசின் பிரதமர்களாலேயே கிழித்தெறியப்பட்டன. அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தப் பின்னணியில் வெறுமனே வாய்மூலமான வாக்குறுதியை நம்பி கையொப்பமிடுவது நியாயமா என்பதுதான் முன்னாள் முதலமைச்சர் எழுப்பும் கேள்வி!

கூட்டமைப்புத் தலைவர்கள் சரித்திரம் அறியாதவர்கள் அல்ல. அதேவேளையில், வாய்மொழி மூலமாகக் கொடுத்த வாக்குறுதிகளைக் கூட காப்பாற்றக்கூடியவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றாரா என்பது அடுத்த கேள்வி! அதாவது அதற்கான கள நிலை உள்ளதா?

அரசியலமைப்பு ஒன்றை புதிதாகக்கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். அது இல்லாமல் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது சாத்தியமில்லை. ரனில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சேர்த்தால் 116 வாக்குகள் மட்டுமே உள்ளது. ஆனால் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவதற்கு 150 வாக்குகள் அவசியம். எதிர்வரும் பெப்ரவரிக்கு முன்னர் இது சாத்தியமானது அல்ல. ஆக, அரசியலமைப்பைக் கொண்டுவருவேன் என்ற வாக்குறுதி நடைபெறக்கூடிய ஒன்றல்ல.

அதனைவிட, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை என்பன பாதுகாப்பு அமைச்சுடன் சம்பந்தப்பட்டவை. பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதுதான் இலங்கையின் மரபு. மீண்டும் ரணில் ஆட்சி ஏற்பட்டாலும் பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம்தான் வைத்திருப்பார். அத்துடன் முப்படைத் தளபதியாக இருப்பவரும் அவர்தான். சம்பந்தனுக்கும் ரணிலுக்கும் ஏற்படக்கூடிய இணக்கத்தின் அடிப்படையில் இந்த இரண்டையும் செய்ய மைத்திரி முன்வருவாரா?

இலங்கையின் இனவாத வரலாற்றைப் படித்த அனைவருக்கும் தெரிந்த விடயம் இது!  அவ்வாறு ரணில் முன்வந்தாலும் தமது அரசியலுக்காக தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி அதனை முறியடிக்க தன்னாலான அனைத்தையும் செய்வதற்கு மைத்திரி முற்படுவார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

தென்னிலங்கை அரசியல் குழப்பங்களை எமது நலன்களுக்குப் பயன்படுத்திக்கொள்வது இராஜதந்திரம்தான். விடுதலைப் புலிகள் கூட இவ்வாறான இராஜதந்திரத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். ஆனால், கூட்டமைப்பு ரணில் கொடுத்த வாக்குறுதிகளை நம்பித்தான் இப்போது கையொப்பமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது.

கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், அதனை நிறைவேற்றுவதற்கான சாத்தியங்களையும் பார்க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இப்போதும்,  வெற்றுக் காசோலையில்தான் கையொப்பமிட்டிருப்பதாகவே தெரிகின்றது. பழுத்து முதிர்ந்த ராஜதந்திரியான சம்பந்தனும், அவரது ‘கோயபல்ஸான’ சுமந்திரனும் இவற்றை எப்படியும் சமாளித்துவிடலாம் என்றுதான் வழமைபோல நம்புகின்றார்களா?

குறிப்பு:>