Take a fresh look at your lifestyle.

மாகாண சபைத் தேர்தலே முதலில் நடத்தப்படும்; மைத்திரி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் குறித்து சில கருத்துக்களை உருவாக்கி நடைபெறவேண்டிய மாகாண சபைகளுக்கான தேர்தல்களைப் பின்போட சிலர் முயற்சிக்கின்றார்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தற்போது 6 மாகாண சபைகளின் நடவடிக்கைகள் செயலிழந்த நிலையில் உள்ளது என்றும் இது ஜனநாயகத்துக்கு ஒருபோதும் நல்லதல்ல என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, 13ஆவது அரசமைப்பு திருத்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களுக்கும் இது முரணானதாகும் என்றும் கூறினார்.

எனவே ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசுகின்றவர்கள் அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராக வேண்டுமெனகுறிப்பிட்ட ஜனாதிபதி, தான் அது பற்றித் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து, மாகாண மட்டத்தில் அமைப்பாளர்களை அழைத்து சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுவரும் கலந்துரையாடல் தொடரில் ஊவாமற்றும் மத்திய மாகாண அமைப்பாளர்களுடனான சந்திப்பு நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விரைவாக மாகாண சபைத்தேர்தலை நடத்தி மக்களின் வாக்குரிமையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையை நியமித்து மூன்று வாரங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் அந்த அமைச்சுக்களின் கீழ்வரும் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்டசபைகள் மற்றும் நிறுவனங்களுக்கான தலைவர்கள், பணிப்பாளர்சபை நியமிக்கப்படாதமை குறித்து சில தரப்பினர் ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி விரல் நீட்டுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அது முற்றிலும் தவறான கருத்து எனக் கூறினார்.

இந்த நிலைமைக்கு அந்த அமைச்சுக்களே வகை கூறவேண்டும் என்பதுடன், குறித்த பரிந்துரைகள் பிரதமரின் அலுவலகத்தினால் ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்கப்படாமையே இந்த தாமதத்திற்கு காரணமாகும்எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கான பொறுப்பை ஜனாதிபதி அலுவலகம் ஏற்றுக்கொள்ளாது என்று குறிப்பிட்டார்.

குறிப்பு:>