Take a fresh look at your lifestyle.

ஈ.என்.டி.எல்.எவ் கும்பலின் முகாமைத் தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவை தழுவிய மாவீரர்கள் நினைவாக.!

திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த ஈ என் டி எல் எவ் கும்பலின் முகாமைத் தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவை தழுவிய 22 மாவீரர்கள் நினைவு சுமந்த கவிதை
 
எரிமலைப் புலிகள் இருபத் திருவரை
திருமலைக் கடல் தின்று தீர்த்ததாம்….
தன் நீர் போதா தென்று கடல் எம்
கண்னீர் கேட்டுக் கைநீட்டியதாம்
இப்பெரும் துன்பம் எப்படிச் சுமப்போம் ?
 
வெறிச்சிங்களப்படை விலாவை உடைத்தவர்
குறிவைத் திந்தியப் படைகொன்றழித்தவர்
மாற்றார் அழிக்க முடியா மறத்தினர்
காற்றில் கடலில் கவிழ்ந்து போதாம். …
இப்பெரும் துன்பம் எப்படிச் சுமப்போம் ?
 
மான  மாமலைத் தோள்கள் சாய்ந்ததாம்….
கோன மாமலைக் குடும்பம் மடிந்ததாம்….
நிலையாய்த் தமிழினம் நிமிரக் குமுறிஒர்
அலையாய் எழுந்தவர் அலையில் முடிந்ததாம். ..
இப்பெரும் துன்பம் எப்படிச் சுமப்போம்.?
 
வளம் மிகுந்த வாழைக் குருத்துக்கள்
இளம் பருவப் பிறை நிலவுகள்
வாழும் காலம் வாழாது வலையில்
விழும் மீனாய் வீழ்ந்து சரிந்ததாம்….
இப்பெரும் துன்பம் எப்படிச் சுமப்போம்.?
 
கிடைத்தற் கரிய கிளர்ச்சி நெருப்பினர்
அடைத்த சிறையின் ஆணிவேர் போர்த்தவர்
முற்றிப் பழுத்த முழுத்தமிழ் வீரர்
பற்றி இழுத்த அலையில் படுத்ததாம்….
இப்பெரும்  துன்பம் எப்படிச் சுமப்போம் .?
 
நஞ்சு மாலை கடலில் தொலைந்ததாம்.
அஞ்சி டாதார் உடல்கள் அழிந்ததாம்….
நாளைப் போரை நடத்த இருந்தவர்
தோளை மீன்கள் தின்று தொலைத்ததாம்….
இப்பெரும் துன்பம் எப்படிச் சுமப்போம் ?
 
(06.02.90 அன்று திருகோணமலைக் கடலில் ஏற்பட்ட படகு விபத்தில் வீரமரணமடைந்த எம் தோழர்கள் நினைவாக. )
-வெளியீடு:விடுதலை புலிகள் இதழ் (1990)
 
 
 

குறிப்பு:>