Take a fresh look at your lifestyle.

கால நீடிப்பும் கூட்டமைப்பும்

ஐ.நா.வில் சிறிலங்காவுக்கு இனிமேலும் கால அவகாசம் கொடுக்கக்கூடாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெனீவா குறித்து ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்தில் ‘ரெலோ’ ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்குச் சென்றிருந்த போதே சேனாதிரா, இதனைக் கூறியிருக்கின்றார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேளவிகளுக்குப் பதிலளித்த போது, மாவையர் இதனைக் கூறியிருந்தாலும், இது தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கருத்தா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது.

கூட்டமைப்பின் அல்லது தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு இதுதான் என்றால், கூட்டமைப்பு எம்.பி.க்கள் அனைவரும் கையொப்பமிட்டு, இதனை ஒரு மகஜராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கும், உறுப்பு நாடுகளுக்கும் உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும். ஆனால், கூட்டமைப்பு எம்.பி.க்களோ அல்லது தலைமையோ அதற்குத் தயாராகவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆக, மாவையர் அந்த நேரத்தில் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளரைச் சமாளிப்பதற்காகச் சொன்ன வார்தைகளாகளே அதனை நோக்க வேண்டியுள்ளது.

சிறிலங்காவுக்கு மேலும் இரு வருடம் அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் உள்ள நிலையில், கால அவகாசம் கொடுகக்கூடாது என சேனாதிராஜா திடீரென அறிவித்திருப்பது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்டமைப்பின் கொள்கையை தீர்மானிக்கக்கூடியவர்களாக இருக்கின்ற சம்பந்தனோ, சுமந்திரனோ இந்த நிலைப்பாட்டுடன் உடன்படுவதாகத் தெரியவில்லை.

மாவையர் தமிழரசுக் கட்சித் தலைவராக இருந்தாலும், அதன் போக்கையோ, அதன் கொள்கைகளையோ கட்டுப்படுத்தக்கூடிய ஆளுமை அவருக்கு இல்லை. தலைமைப் பதவி என்பது அவரிடம் பெயரளவுக்குத் தான் உள்ளது. கட்சியை வழிநடத்துவபராகவும், கொள்கைகளை வகுப்பராக, தீர்மானங்களை எடுப்பவராக சுமந்திரனே இன்றுள்ளார். அதனால்தான், மாவையர் யாழ்ப்பாணத்தில் இதனை அறிவித்தது, அப்போது அவருக்கு ஏற்பட்டிருந்த நிர்ப்பந்தம் காரணமாக இருக்கலாமே தவிர, கூட்டமைப்பின் நிலைப்பாடாக அதனைக் கருத முடியாது என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

ஜெனீவா தீர்மானம் 2015 ஆம் ஆண்டிலேயே சிறிலங்காவின் இணை அநுசரணையுடன் கொண்டுவரப்பட்டது. இதனை நிறைவேற்றுவதற்காகக் கொடுக்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் பின்னர் 2017 ஆம் ஆண்டில் மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டது. இந்த நான்கு வருடகாலத்தில் தீர்மானத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட எதனையும் சிறிலங்கா அரசாங்கம் செய்யவில்லை. செய்வதற்கான அக்கறையையும் அது காட்டவில்லை.

இந்த நிலையில் சிறிலங்கா இராஜதந்திர வட்டாரங்களில் இரண்டு விதமான அணுகுமுறைகள் இப்போது காணப்படுகின்றது. சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரேரணையிலிருந்து சிறிலங்கா முற்றாக விலகிக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார். சிங்கள – பௌத்த கடும் போக்காளர்களைத் திருப்திப்படுத்துவதுதான் அவரது உபாயம். பிரேரணையிலிருந்து விலகிவிட்டாமல், மேற்கு நாடுகளின் நிர்ப்பந்தங்களிலிருந்து தப்பிவிடலாம் என அவர் நினைக்கின்றார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கமோ, மேலும் இரு வருட கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ள முற்படுகின்றது.

இந்த இரண்டு தரப்பினருமே பிரேரணையில் தெரிவிக்கப்பட்டவைகளை நிறைவேற்றுவதில் அக்கறை கொண்டவர்களாக இல்லை. கால அவகாசம் காலத்தைக் கடத்துவதன் மூலம் பிரச்சினையை நீர்த்துப்போகச் செய்வதற்கான ஒரு உபாயம் மட்டுமே!

இந்த நான்கு வருடங்களில் செய்யாதததையா இன்னொரு இரண்டு வருட கால அவகாசத்தில் அவர்கள் செய்யப்போகின்றார்கள்? கடந்த வருடங்களில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் இலங்கை அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கக்கூடாது என்பதற்காக, மேற்கு நாடுகளால் பெருமளவுக்கு நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. அதாவது, அதன் கடுமையான தன்மை குறைக்கப்பட்டு மென்மையாக்கப்பட்டது. அதனைக் கூட நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வரவில்லை. இன்னும் இரண்டு வருடங்களைக் கொடுப்பதென்பது பிரச்சினையின் தீவிரத்தைக் குறைப்பதற்கான ஒரு உபாயமாக மட்டுமே இருக்க முடியும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெற்ற பிரதான கட்சியாக இருப்பதால், இராஜதந்திர வட்டாரங்களில் அதன் கருத்துக்கள் எப்போதும் முக்கிய கவனத்துக்குள்ளாகின்றது. கடந்த வருடங்களிலும் அரசாங்கத்தைப் பாதுகாப்பதில் கூட்டமைப்பின் பங்களிப்பு பிரதானமாகவே இருந்துள்ளது. உள்நாட்டு அரசியலில் மட்டுமன்றி, ஜெனீவா களமுனையில்கூட அரசாங்கத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே கூட்டமைப்பின் தலைமை செயற்படுகின்றது.

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களின் உரிமைக் குரலையும், அவர்கள் எதிர்பார்க்கும் நீதியையும் மழுங்கடித்துவிடலாம் என்பது அரசாங்கத்தின் உபாயம். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் அதற்கு எதிராகச் செயற்பட வேண்டிய கூட்டமைப்பு, அதற்கு ஆதரவாகச் செயற்படுவது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியளிக்கின்றது. அபிவிருத்தி என்ற பெயரில் கூட்டமைப்பு எம்.பி.க்கள் ஒவ்வொருவருக்கும் 40 கோடி வரையில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுகின்றது. இந்தப் பணத்தைக் கொண்டு சில அபிவிருத்தித் திட்டங்களை செய்தால் அடுத்த தேர்தலில் தமது வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையுனேயே எம்.பி.க்களும் செயற்படுகின்றார்கள்.

உள்நாட்டில் தம்மைப் பாதுகாப்பதற்கும், ஜெனீவாவில் கால நீடிப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் கூட்டமைப்பின் ஆதரவு தேவை என்பதால், இந்த பாரிய நிதி ஒதுக்கீடு கூட்டமைப்பினரின் வாய்களை அடைக்கச் செய்துவிடும் என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் கணிப்பு. இந்தக் கணிப்பு பெருமளவுக்குச் சரியாக உள்ளது என்பதைத்தான் நடைபெறும் சம்பவங்ளும் உறுதிப்படுத்துகின்றன. வடக்குக்குச் சென்ற ரணில் விக்கிரமசிங்க “மறப்போம்; மன்னிப்போம்” என அறிவித்ததும் நோக்கத்துடன்தான்.

வடக்கு, கிழக்குக்கு அபிவிருத்தி அவசியம்தான். ஆனால், நிரந்தரமான அரசியல் தீர்வையும், பொறுப்புக்கூறலையும் வழங்காத அபிவிருத்தி நிலையானதாக இருக்குமா என்ற கேள்வி உள்ளது. அதேவேளையில் அபிவிருத்தி என்ற மாயையைக் காட்டி தமிழ் மக்களுக்கான நீதியையும், அவர்களுடைய உரிமைகளையும் குழிதோண்டிப் புதைத்துவிடும் சிறிலங்கா அரசின் இராஜதந்திரத்துக்கு கூட்டமைப்பு துணைபோகின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது.

குறிப்பு:>