Take a fresh look at your lifestyle.

நானும் பங்கெடுக்கிறேன் நீங்களும் வாருங்கள்: போராட்டத்தில் அணி திரள விக்கி கோரிக்கை

 

எதிர்வரும் 16ஆம் திகதி வடதமிழீழ, முற்றவெளி பேரணியிலும் 19ஆம் திகதி தென்தமிழீழ, மட்டக்களப்பு போராட்டத்திலும் அணிதிரள நீதியரசர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு கிழக்கின் சகல பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து யாழ்.மாநகர் முற்றவெளிக்கு நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணிக்கும் மட்டக்களப்பில் எதிர்வரும் 19ம் திகதி செய்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் கதவடைப்பு மற்றும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணிக்கும் தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.அதிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்களின் அமைப்புக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் கடந்த காலங்களில் மிகவும் பொறுப்புணர்வுடன் மிகச் சிறந்த முறையில் போராட்டங்களை ஒழுங்கமைத்து இருந்தார்கள். குறிப்பாகக் கிளிநொச்சியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் பலரதும் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

கிளிநொச்சி போராட்டத்துக்கு பொதுமக்களும் வர்த்தகர்களும் வழங்கிய பேராதரவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேபோல 16ம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளும் போராட்டமும் மட்டக்களப்பில் 19ம் திகதி நடைபெறும் போராட்டமும் முக்கியமானவை. இந்த இரண்டு போராட்டங்களுக்கும் உங்கள் முழுமையான ஆதரவை வழங்கி எமது மக்களின் நீதிக்கான குரல் ஐ. நா வரை கேட்பதற்கு அணிதிரள்வீர்கள் என்று நம்புகின்றேன். நானும் இந்த இரண்டு போராட்டங்களிலும் உங்களில் ஒருவனாகக் கலந்துகொள்ளவிருக்கின்றேன், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:>