Take a fresh look at your lifestyle.

வாக்குப்பதிவு இயந்திர கோளாறு .? தேர்தல் ஆணையத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம்.!

ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு ஏற்பட்ட தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆந்திரப்பிரதேசத்தில் 30% வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்கு இயந்திரம் செயல்படவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படாத வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படாததால் வாக்காளர்கள் பலர் திரும்பிச் சென்று விட்டனர். திரும்பிச் சென்றவர்கள் மீண்டும் வாக்களிக்க வரமாட்டார்கள் என்பதால் குறிப்பிட்ட சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

25 மக்களவை தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதேபோல், மொத்தமுள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,118 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனை தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், ஆந்திராவில் நூற்றுக்கணக்கான இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், இயந்திரம் சரி செய்யப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காலை 9.30 மணி வரை வாக்குப்பதிவு துவங்காத அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

குறிப்பு:>