ஒரு உண்மை வீரனின் கதை

breaking

ஒரு உண்மை வீரனின் கதை

வநீதனைப்பற்றிச் சொல்வதானால் சண்டையில் தான் ஆரம்பிக்க வேண்டும்; சண்டைகளால் தொடர வேண்டும்; சண்டையொன்றில் முடிக்க வேண்டும். அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும். அந்தளவுக்கு சண்டைக்களங்களிலேயே அவனது வாழ்வு உருண்டோடியது; சண்டைக்களங்களிலேயே அவன் தூங்கி  விழித்தான் 

ழம்பாசியில் ஒரு சண்டை.
பால்ராஜ் அவர்கள் வன்னிக்குத் தளபதியாக இருந்த போதுஇ அவரது பாதுகாப்பு அணிக்குப் பொறுப்பாக இருந்தவன் நவநீதன் தான்.

தவிர்க்க முடியாத ஒரு பயணம்; தளபதி போகவேண்டியிருந்தது. அரசியலுக்குப் பொறுப்பாக இருந்த லெப்ரினன்ட் கேணல் சந்திரனும் கூட. போயே ஆகவேண்டும்; நோக்கம் முக்கியமானது.

அது இந்தியப்படைக் காலம்; இடறுப்படும் இடங்களிலெல்லாம் அவர்கள் நகர்ந்துகொண்டிருந்த ஒரு சூழ்நிலை. மிக நெருக்கடியான ஒரு நேரம் இடமும் அப்படித்தான்; மைய இலக்கு வைத்து இந்தியர்கள் படை நடாத்திக்கொண்டிருந்த மணலாற்றின் வேலியோடு குறைந்தளவு வீரர்களையே கொண்டு நகர்ந்து கொண்டிருந்த எமது அணிக்கு, திசையறி கருவி வழிகாட்டிக்கொண்டு இருந்தது. தண்ணிமுறிப்பு வீதியைக் கடந்து பழம்பாசிக் காட்டுக்குள் இறங்கிய போது வழமை போல முதலாவது ஆளாகச் சென்று கொண்டிருந்த நவநீதன், திடீரென நடை தயங்கி, ‘அலேட் பொசிசனில்’ வைத்திருந்த ‘எம் -16’, உயர்த்தி, மூக்கைச் சுழித்துக் கொண்டு திரும்பினான்.

அநேகமான தடவைகளில் இந்தியர்களின் அரவம் காட்டி, எம்மை அரட்டி விடுகின்ற அந்த ‘மணம்’ – சற்றுக் கூடுதலாகவே சுவாசத்தோடு கலந்தது.

காட்டுப் பாதை இடைக்கிடை நாம் பயன்படுத்துகின்ற தடம் தான் – அவதானித்திருக்கக்கூடிய எதிரி. இரை தேடி வந்திருந்தான். “இந்தியப்படையின் விசேட அதிரடிக் கொமாண்டோக்கள்” – தடயங்களை வைத்து புலிகள் ஊகித்துக் கொண்டனர். எங்கள் பாதையின் ஏதோ ஓர் இடத்தில் நிச்சயமாக எதிரி நிலை எடுத்திருப்பான் நம்பிக்கை உறுதியாக இருந்தது.

கைவிட முடியாத பயணம்; தேவை பெரியது. இது ஒரு புறம் போகஇ ‘அடிக்கப் போகின்றவனுக்குத் திருப்பி அடித்தே ஆக வேண்டும்’ என்ற ஆவேசமும் எழுந்தது. நவநீதனே முனைப்பாக நின்றான்.

தளபதி ஒழுங்கமைத்தார்; அணி இரண்டாக்கப்பட்டது. பிரதான குழுவிலிருந்து குறிப்பிட்ட ஒரு தூரத்தில் துணைக்குழு நகரும்.

ஒரு பதுங்கித் தாக்குதலானது பலவகைப்பட்டதாக அமையும். வலது புறமிருந்து வரலாம் இடது புறமிருந்தும் வரலாம். நேரெதிரிலிருந்து வரலாம். சில சமயம், வலது அல்லது அடது புறத்தோடு எதிர்ப்பக்கத்திலிருந்தும் “L” வடிவத்தில் வரலாம். இவற்றில் எது நடந்தாலும் எதிர்கொள்ளக் கூடியவாறு திட்மிடப்பட்டது பிரதான குழு தாக்குதலைச் சந்திக்க, துணைக்கழு காட்டுக்குள் இறங்கி, வளைத்து, எதிரியை நாரிப்பக்கத்தால் தாக்க வேண்டும். நவநீதன் தான் கொமாண்டர்.

அணி அசையத் துவங்கியது வழமை போல நவநீதன் முன்னுக்கு. அது அவனுக்கே உரிய துணிவு கத்திக்கொண்டு பறந்த ஒரு காட்டுக் குருவியைத் தவிர நிசப்தம் தன் முழு ஆதிக்கத்தையும் செலுத்தியிருந்தது; ‘மயான அமைதி’யை விடப் பயங்கரமானது ‘வன அமைதி’ எதிர்பார்க்கும் சண்டை; எதிர்ப்படப்போகும் நேரத்தை எதிர்கொள்ளத் துணிந்த மனது. அதிகரிக்கும் இதயத்துடிப்போடு கலந்த ஆக்ரோசம். சுடத் தயாரான துப்பாக்கிகளின் குழல்வாய்கள் நிமிர்த்தி – பாயத்தயாரான புலிகளின் பதுங்கல் நகர்வு. சருகு நெரிபடும் சத்தத்தோடு மட்டும், அடிமேல் அடிவைத்து அணி சகர்ந்து கொண்டு…

திடீரென, இயல்பு மாறிப்போயிருந்த காடு; இயற்கை குலைந்து போயிருந்தது வனம். சூரியனை நோக்கி வளர வேண்டிய மரக்கிளைகள் சில, வளைந்து, பூமியை நோக்கி இருந்தன. இருக்கக்கூடாத இடங்களில், சருகுகள் கூடுதலாய்.

சருகுகளின் மறைப்பினூடாக மின்னுகிற எல்.எம்.ஜி.குழல்; இலை குழைகளின் உருமறைப்பிற்குள் வெட்டிவெட்டி முழிக்கும் கண்கள்; மெல்ல அசையும் ‘ஹெல்மட்’டுகள்.

கண்டுகொண்ட நவநீதன் நிதானிக்க, பார்த்துவிட்ட தளபதி சைகை செய்ய, தாசனின் துணைக்குழு காட்டுக்குள் இறங்க – மூர்க்கத்தனமான சண்டையைத் தொடங்கி வைத்தான் நவநீதன். எட்டித்தொடும் தூரத்திற்குள் இயந்திரத் துப்பாக்கிகளின் குமுறல்; எம்.16 சுடுகுழல் சிவக்க, எதிரிகளின் உச்சந் தலையைக் குறிவைத்தான் அந்த வீரன். இந்தியக் கொமாண்டோக்களின் முன்வரிசை அணியை, பதுங்கிய இடத்திலேயே அவன் பதுங்க வைத்தது, பிரமிப்பூட்டுகிற வேகம். முதலாவது ஆளைச் சுட்டதிலிருந்து, சண்டையை நடாத்தி துரத்தித் துரத்தி அடித்து, ஆயுதங்களை எடுத்து முடித்துவைத்து – எல்லாமே அவன் தான்.

‘அதிரடியை முறியடித்து அதிரடித்தல்’ – படையியல் விஞ்ஞானத்தில் இதற்கு ‘Counter Ambush’ என்று பெயர். எங்கள் போராட்ட வரலாற்றில் இது ஒரு முக்கிய சம்பவம்; தளபதி பால்ராஜின் நெறிப்படுத்தலில் செய்வித்து முடித்தலன் நவநீதன்.

ஆனால், தினேசுக்கு இதயத்துக்கப் பக்கத்தில் வெடிகொழுவிக் கொண்டது. பீறிட்டுப் பாய்ந்த இரத்தத்திற்கு சாரத்தைக் கிழித்துக் கட்டுப்போட்டு, தடிமுறித்து ‘ஸ்ரெச்சர்’ கட்டித்தூக்க முற்பட்ட போதும், வேதனையின் முனகலோடு தினேஸ் மறுத்துவிட்டான்.

ஆசையோடு தளபதியின் கன்னங்களைத் தடவினான்; கூடவந்த தோழர்களின் நிலைமைகளை விசாரித்தான், பெற்றெடுத்த ஆயுதங்களைத் தொட்டுப் பார்த்துப் பூரித்தான், எங்கள் ‘டடி’ முகாமில் – மற்றத் தோழர்களுக்குப் பக்கத்தில் தான் தன்னையும் புதைக்குமாறு வேண்டியவன். முனகி, முனகி மெல்ல அடங்கி எல்லோரையும் பார்த்து விழிகளை மூடிய போது, வெற்றியின் ஆயுதங்களைக்காட்டி அதற்கு வித்தாகிப் போனவனை வழியனுப்பி வைத்துவிட்டு, நவநீதன் இறுகிப் போய் நின்றான்.

ரலாற்றில் பொறிக்கப்பட்ட மாங்குளம் முகாம் தகர்ப்பு –

தமிழீழத்தின் நெஞ்சத்தின் மீது குந்தியிருந்த பக்கத்து நாட்டுப் படைகளைக் குடியெழுப்ப நிகழ்த்தப்பட்ட தாக்குதல். இரண்டாவது தடவையாகவும் – நிச்சயமாக இறுதியானது என முடிவு செய்யப்பட்ட சமர்.

முதல் நாள் நள்ளிரவுக்குச் சற்று முன்னர் ஆரம்பித்த சண்டை, மறுநாள் விடிந்து மதியமாகியும் நடந்து கொண்டிருந்தது. தென்முனை முற்றாகவே எதிரிக்குச் சாதகமான பிரதேசம். அது வயல்வெளி; அங்கு அவனது கைதான் ஓங்கியது. கூடுதலாக இழப்பைச் சந்தித்ததால், எங்கள் தாக்குதலணி காலையிலேயே பின்னால் எடுக்கப்பட்டு விட்டது. தென்முனை வழியான தாக்குதல் நிறுத்தப்பட்டு விட்டது.

வடமுனையில் தனது முழுச் சக்தியையும் பிரயோகித்து எதிரி தடுத்து நின்றும், அவனது அரண்களையும், மினிமுகாம்களையும் உடைத்துக் கொண்டு முன்னேறிய புலிகளின் அணி, பிரதான முகாமிற்கு அருகில், ‘ஹெலி’ இறங்கு தளத்தில் – கடும் எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. எதிரிஇ தனது பலமான அரணொன்றிலிருந்து மூர்க்கத்தனமாக மோதினான்; தனது முழுப் பலத்தையும் திரட்டிச் சண்டையிட்டான்.

ஏனெனில் ‘ஹெலி’ இறங்கு தளம் யாருடைய கைக்குப் போகின்றதோ அந்தப்பக்கம் தான் வெல்லும். அவனிடம் போய்விட்டால் உதவி எடுத்து புத்துயிர் பெற்று விடுவான்; எங்களிடம் வீழ்ந்து விட்டால் தனித்து விடப்பட்டு குற்றுயிர் ஆகிடுவான். எனவே எதிரி இறுதி முயற்சியாக மோதினான். உயிர் பிரிகின்ற நேரத்தில் ஒரு அசுர பலம் வருமாமேஇ அந்தப் பலம் கொண்டு தாக்கினான்.

சண்டை உக்கிரமடைய அடைய, எங்கள் தாக்குதலணி பலவீனப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் நாங்கள் கைவிட முடியாது; ஹெலித்தளத்தை விட்டுச் சற்றுப் பின்னால் வந்தால் கூட, நாங்கள் தோல்வியடைந்ததற்குச் சமம். எதிரி நிலத்தோடு மட்டுமே மோதினான்; நாங்களோ வானத்தோடும் மோத வேண்டியிருந்தது. நேரம் நீள நீள எங்கள் கை சோர்ந்து கொண்டு போனது. அவனா? நாங்களா? என்ற நிலை. சண்டையை நடத்திக் கொண்டிருந்த தளபதி, நிலைமையின் இக்கட்டைப் பிரதான கட்டளையகத்துக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தான். கைவிடமுடியாது; ஏற்கெனவே இந்த முகாமை அழிப்பதற்காக நாங்கள் செலுத்திவிட்ட விலை பெறுமதியானது; திரும்பவும் ஒரு தடவை அற்புதமான உயிர்களைக் கொடுக்க முடியாது. துவங்கியதோடு அடித்துடைத்து முடித்து விட வேண்டும்; இனி விட இயலாது.

கடைசி வழிமுறை ஒன்றைக் கையாள கட்டளைப்பீடம் முடிவு செய்தது. கைவசம் வைத்திருந்த, தேர்ச்சி பெற்ற வீரர்களைக் கொண்ட மேலதிக தாக்குதலணி ஒன்றை – நுட்பமான ஒரு தந்திரோபாயத்தோடு பிரயோகித்து ஒரு இறுதி எத்தனிப்பைச் செய்வதே அது. அவனா? நாங்களா? என்ற எதிர்பார்ப்புக்கு விடை தரப்போகும் அடி; அந்த வரலாற்றுத் தாக்குதலின் வெற்றியை நிர்ணயிக்கப் போகிற அதிரடி. இதன் முக்கியத்துவம் முக்கியமானது.

ஹெலித்தளத்தில் சண்டையிடும் எதிரியை கிழக்குத் திசை வழியாக மேலால் மேவி வளைத்து, அவனை வலது பக்கத்தால் நெருங்கி, அறைந்து நொருக்க வேண்டும். வான் ஆதிக்கத்தைத் தனது கையில் வைத்திருப்பவனின் கண்களுக்கு மண் தூவி – நில ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போரிடுகின்றவனின் பார்வையில் பட்டுவிடாமல் – அவனை அண்மிப்பது என்பது, அந்த உச்சி வெயில் பகலில் ஒரு இமாலயக் காரியம். எதிரியை எதிர்கொள்ளும் நேரம் வiர் தன்னைச் சேதப்பட்டு விடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அந்த அணிக்கு உண்டு; தோல்வியைத் தழுவும் நிலையிலிருந்து அந்தத் தாக்குதலை மீட்க வேண்டிய பொறுப்பும் அதற்குத்தான் உண்டு. எனவேஇ அந்தச் சிக்கலான சூழ்நிலையிலும் சரியான முறையில் நகர்த்திச் சென்று சரியான நேரத்தில் – சரியான இடத்தில் – தாக்குதலைத் தொடுத்து, அந்த அணியை வழிநடாத்தக்கூடிய திறமை அதன் கொமாண்டருக்கு இருக்க வேண்டும். அணியின் தளபதியாக நகரத் துவங்கியவன் நவநீதன்.

தாக்கிக் கொண்டிருந்த எமதணி தளர்ந்துகொண்டிருந்த வேளை, அனுப்பி வைத்த தளபதி காத்திருந்த நேரம், என்ன முடிவோ என நாங்கள் ஏங்கி நின்ற பொழுது – மூர்க்கங்கொன்ட புலிகளாய் பாய்ந்தனர் வீரர்கள். ஆக்ரோசமான தாக்குதல் தடைகளை உடைத்து, தானை சிதைந்து, பகைவன் சின்னாபின்னமாகிப் போக – புதிய தெம்புடனும், புதிய வேகத்துடனும் பிரதான முகாமைக் குறிவைத்தனர் புலிகள்.

எங்கள் கதாநாயகனுக்கு வெடி; இடுப்பு எலும்பை நொருக்கிச் சென்று விட்டது சன்னம். காலுக்கு மணல் மூடை கட்டித் தொங்க விட்டு, யாழ்ப்பாணம் மருத்துவமனையில் படுத்தருந்து, “இந்தச் சுமையின் வேதனையை விட, மாங்குளத்தை வென்றதே மனதுக்கு மகிழ்வு” என்றவன் 7 மாதங்களுக்குப் பிறகு எழுந்து நடக்கத் துவங்கிய போது, இடதுகாலில் ஒரு அங்குலம் கட்டையாகிப் போயிருந்தது.

முல்லைத்தீவில் ஒரு படையெடுப்பு – நவநீதன் அப்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தளபதி; லெப்ரினன்ட் கேணல் நரேசுக்குத் துணைவனாய் நின்று, நிர்வாக வேலைகளை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்தான்.

தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்காக தளபதி தீபனும், நரேசும் எமது படையணிகளை எடுத்து வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்றிருந்த வேளை, ‘சத்பல’ என்று பெயர் சூட்டிக்கொண்டு முல்லைத்தீவிலிருந்து படையெடுத்தான் எதிரி; ஆயிரக்கணக்கான துருப்புக்கள், யுத்த வானூர்திகள் பலம் சேர்க்க பெருமெடுப்பில் முன்னேறத் துவங்கினர்.

ஆனால் காவலரணில் இருந்ததோ சண்டைக்குத் தேர்ச்சி பெறாத போராளிகள். சண்டை செய்யக்கூடியவர்கள் என்று எவருமே இல்லை. இருந்தவர்களைத் தான் பொறுக்கி எடுத்து அனுப்பியாகி விட்டதே. இருப்பவர்கள் சண்டைக்கு அனுபவப்படாதவர்கள் புதியவர்கள்.

அவர்களை வைத்துக் கொண்டு எதிரி முகாமின் வாசலிலேயே களத்தைத் திறந்தான் நவநீதன்.

ஒரு முழுநாள் – ‘நவநீதன் சண்டையைச் செய்வித்தான்’ என்பதைவிட, ‘நவநீதன் தான் சண்டை செய்தான்’ என்றுதான் சொல்ல வேண்டும். திரண்டு நகர்ந்த அந்நியச் சேனையை திறமையுடனும் – துணிவுடனும் தடுத்துத் தாமதப்படுத்தினான் அந்தப் போர்வீரன். மறுநாள் எமது படைப்பிரிவுகள் வந்து சேருகின்ற போது, தந்திரமாகச் சண்டையிட்டு, திரண்டு நதர்ந்த பகைவர்களை அவன் தடுமாற வைத்திருந்தான். அந்த முதல் நாள் சண்டையில் தங்களில் 6 பேர் கொல்லப்பட்டதாக சிறீலங்கா வானொலி அறிவித்தது.

“இனியாவது என்ர பொடியனை வீட்ட விடுவியளே?” என்று கேட்காத, கேட்க நினையாத – “எப்ப தம்பி எங்களுக்கு சுதந்திரம் எடுத்துத் தரப்போறியள்?” என்று மட்டும் மனதார ஆதங்கப்படுகின்ற – ஒரு தமிழன்னையின் மடியில், அந்தப் பூ முகையவிழ்த்தது. அது – 1969 ஆம் ஆண்டு, கார்த்திகை 12 ஆம் நாள். திருலோகநாதன் என்று திருநாமம் சூட்டினார்கள்.

“குவா……குவா……!” சத்தத்தோடுஇ அந்தக் குழந்தை – தவழ்ந்து, உருண்டு, மண்ணளைந்து, தத்தித் தடுமாறி எழுந்து நடக்கத் துவங்கிய அந்த ஓலைக்குடிசையில், அவனுக்கு முன்னமே ஏழ்மை பிறந்து விட்டது. நிரந்தரத் தொழில் இல்லை. நிலபுலங்கள் எதுவும் இல்லை. இரண்டு நேரம் சாப்பிடக்கூட வழியில்லை; வறுமை

கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்தவன், 7ஆம் வகுப்போடு – குடும்பத்தின் ஏழ்மைச் சிலுவைக்குத் தோள் கொடுக்க, வீட்டில் நின்று கொண்டான். இருந்தாற்போல் ஒருநாள் – திடீரென அப்பா தில்லையம்பலத்தார் மீளாத் துயில் கொண்டுவிட்ட போது, துன்பமும் ஏழ்மையும் சேர்ந்து அழுத்திய பெருஞ்சுமைக்குள் அந்தக் குடும்பம் சிக்குண்டது; வதங்கியது

இத்தகைய – துயர்படிந்த ஒரு குடும்பப் பின்னணியிலிருந்து, அவன் போராட்டததுக்கு வந்த போது, அவனுக்கு 16 வயது.

தளபதி பசீலனின் அரவணைப்பில் அந்தச் சின்னப் போராளி வளரத் துவங்கினான்.

அவனுக்குப் போர் ஆசானாகி நின்ற, அவனது போராட்ட வாழ்வின் ஆரம்பத்தை வழிப்படுத்தி விட்ட குருஇ அவர்தான்.

துப்பாக்கிகள் தந்து, சிறந்த வீரர்களுக்கு நிகரானவனாகச் சுடப்பழக்கி, பயிற்சிகள் வழங்கி – அந்தச் சின்ன வயதிலேயே, நவநீதனுக்குள் மாபெரும் வீரத் தன்மைக்கு வித்திட்ட பெருமை, பசீலனையே சாரும்.

தளபதி பசீலின் மெய்ப்பாதுகாவலனாக, ‘எம் 16’ உடன் கூடத்திரிந்த நாட்கள், அவனுக்குள் ஆரம்பித்த நினைவுகள்; அந்தக் காலத்தில் அவர் சொல்லித் தந்த சண்டை முறைகள்; மறத்தலற்ற மனப்பாடங்கள்.

நவநீதன் பகைவரைச் சந்தித்த முதற்களம் என்று குறிப்பிடக்கூடியது, முந்திரிகைக்குளம் தாக்குதல்.

மணலாற்றில் சிங்களக் குடியேற்றதுக்கு விழுந்த பலமான முதல் அடி அது. அந்தப் பெரு வெற்றியைப் பெற்றத் தந்தவன் பசீலன். அப்போது – ‘கென்ற்’, ‘டொலர்’ பண்ணைகளில் மட்டுமே தொற்றியிருந்த அந்த விசக்கிருமிகள் பல்கிப் பெருகி மணலாற்றில் படரத் துவங்கிய பிரதான அசைவுப் பாதையை, பதவியாவிலிருந்து மேற்குக் கரை நோக்கி காட்டினூடு அமைத்துக் கொண்டிருந்த இராணவ அணியே தாக்கப்பட்டது.

வியூகம் அமைத்து நின்று, தளபதி பசீலன் தாக்குதலை நடாத்திய போது – அவரது நிழலாக நின்று பொறி கக்கினான் நவநீதன். கொல்லப்பட்ட 20 வரையான படையினரில் சிலரது உடல்களில், அந்தச் சின்ன வீரனது துப்பாக்கி தான் கோலம் போட்டதாம்…… சண்டை முடிந்தபோது புலிகள் இயக்கத்தின் ஆயுத இருப்பில் 12, ‘ரி 56’ கள் கூடியிருந்தன் சிங்களக் குடியேற்றத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன்இ திட்டத்தின் அந்த பிரதான அசைவுப் பாதை, நிரந்தரமாகவே கைவிடப்பட்டது.

இந்தியப் போர் ஆரம்பித்த போது –

இந்தியப் படையின் ‘புகழ்பெற்ற யாழ்ப்பாணச் சமரில்’, கோப்பாய்ச் சண்டை எமது முல்லைத்தீவு மாவட்டப் படையணியால் எதிர்கொள்ளப்பட்டது. தளபதி பசீலனின் அந்த அணியில் நவநீதனும் களத்தில் நின்றான். இந்தியர்களின் இரண்டு ‘B.M.P ராங்க்’குகள் நொருக்கப்பட்டதுடன், அங்குலமும் அசையாமல் தடுத்துநிறுத்தப்பட்ட அந்த நாட்கணக்கான சண்டையில் சொல்லிக் காட்டக்கூடியளவு திறமையுடன் நவநீதன் போரிட்டான்.

கோப்பாயில் சண்டையை முடித்துக் கொண்டு திரும்பிய படையணி, முல்லைத்தீவில் போர் அரங்கைத் திரைநீக்கம் செய்த போது –

துயரம்! கொடுந்துயரம்; முல்லைத்தீவில் ஒரு சண்டைக் களத்தில், மாபெரும் வீரன் பசீலன் வீழ்ந்து போனான்; முல்லை மண் துடித்தது. அதன் மடியில் பிறந்த குழந்தை அவன்; அந்த மண்ணின் வரலாற்றில் பொறிக்கப்பட்ட தளபதி அவன். நவநீதன் கலங்கினான்; கதறினான்; அவனால் தாங்க முடியவில்லை.

அடிபட்ட நாகமாய் அலையத் துவங்கினர் புலிகள். பதிலடி கொடுக்கப் பகலிரவாய்த் திரிந்தவர்களிடம் வசமாகச் சிக்கியது ஒரு இந்திய அணி – பசீலனை எம்மிடமிருந்து பிரித்தது இதே அணிதான் என்பது முக்கியமானது – தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால், தளபதி பால்ராஜின் தலைமையில் எம் இரண்டு அணிகள். ஒன்றுக்குக் கொமாண்டர் போர்க்; அடுத்ததுக்கு நவநீதன். மூர்கத்தனமான சண்டை. நவநீதனின் நெஞ்சுக்குள் பசீலண்ணனின் நினைவுகள் கனன்றன. பகைவர்களை நெருப்பெனச் சுட்டெரித்தான் அந்த வீரன். இந்தியரின் முதலாவது குழு தாக்கியழிக்கப்பட்ட பின்னர், மீட்கவந்த அடுத்த குழு தாக்கப்பட்டது. 25 பேரளவில் கொல்லப்பட்ட சண்டையில், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இரண்டு பிறண் எல்.எம்.ஜிகள்.

இந்தியர்கள் ‘ஒப்பரேசன் செக் மேற்’றை நடாத்திக் கொண்டிருந்தார்கள்.

பெரும் போர்களைக் கண்ட உலகின் 4வது பெரிய தரைப்படையின் 30,000 துருப்புக்கள் எங்கள் விடுதலைப் போராட்டத்தின் மையக் கருவைக் கிள்ளியெறிய நகர்த்தப்பட்ட வரலாற்றுச் சமர், பிரசித்திபெற்ற மணலாற்றுப் படையெடுப்பு.

குமுழமுனை மலைமுகாம் என்ற இந்தியத் தளம் தான் ‘செக்மேற்’றின் மையம்; கட்டளைப்பீடம்; உயர் தளபதிகள் தங்கியிருந்து ‘பிரபாகரனைக் கொல்லும்’ போரை நெறிப்படுத்திய தலைமையகம். இந்த முகாமில் ஒரு தாக்குதலைச் செய்வதன் மூலம், ‘செக்மேற்’றுக்கு ஒரு நெருக்கடியைக் கொடுக்கவும், இந்தியரின் கவனத்தைத் திசைதிருப்பவும் திட்டமிடப்பட்டது. ஒரு புலர்வுப் பொழுதில், அந்த முகாமின் தலைவாசலைத் தாக்கினர் புலிகள். மேஜர் கிண்ணிக்குத் துணைக் கொமாண்டராய்ச் சென்று வெற்றியைப் பெற்று வந்தவன் நவநீதன். எதிர்பாராத மையத்தில் விழுந்த அதிரடி – புலிகள் கொடுத்த நெற்றியடி. இந்தியத் தளபதிகள் குழம்பிப் போயினர். செய்வதறியாது திகைத்தனர். படை நகர்த்தும் பீடத்தைப் பாதுகாக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு ‘செக்மேற்’ நிறுத்தப்பட்டது. தங்கள் இலக்கு மீது இந்தியர்கள் கொடுத்த நெருக்கடி தளர்ந்தது. இந்த வெற்றியில் நவநீதனுக்குப் பெரும் பங்குண்டு.

வநீதனைப் பற்றிச் சொல்வதானால் – சண்டையில் தான் ஆரம்பிக்க வேண்டும்; சண்டைகளால் தொடர வேண்டும்; சண்டையொன்றில் முடிக்க வேண்டும்.

அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும்.

போர் தான் அவனுடைய ‘தனிச் சிறப்புக் கலை’
போரில் தான் அவன் ‘துறைசார் வல்லுனன்’.
எங்கள் இயக்கத்தில் தலைசிறந்த சண்டை வீரர்கள் என்று தேர்ந்தெடுத்தால்இ நவநீதன் தவறமாட்டான்.

எதிரிகளை எதிர்கொள்ளும் வேளைகளில் எல்லோரையும் மேவி முன்னால் நின்று – அவனுடைய துப்பாக்கி தீ உமிழும்.

கணப்பொழுதுக்குள் எதிரியின் மூச்சுப்படும் தூரத்துக்கு நெருங்கி, அவன் சுழன்றடித்துச் சுட்டு வீழ்த்தும் லாவகம் – மெய் சிலிர்க்க வைக்கும்.(verkal.net)

அவனொரு ‘Quick Gunner’ – ‘மின்னல் வேகத் துப்பாக்கி வீரன்;.’ போர்களங்களில், எதிரி காணும் முன் எதிரியைக்கண்டு துப்பாக்கியை புயலின் வேகத்தில் இயக்குவான். அந்த வேகத்திலும், குறி பிசகாமல், நிதானமாகக்குறி வைக்கும் வல்லமை, அவனது தனி ஆற்றல்.

அவனது சண்டைகள் பார்ப்பவர்களை வியக்கவைக்கும்; சண்டை தெரிந்தவர்களைக் கூட ஆச்சரியப்படுத்தும்.

சமர்க்களங்களின் நடுவில் சிக்கலான சூழ்நிலைகள் பிறக்கும் போது, மதிநுட்பம் வாய்ந்த விதமாக முடிவெடுத்து – எச்சரிக்கையாகவும்,, அவதானமாகவும் செயற்பட்டு – இடையூறுகளை வெற்றிகரமாகச் சமாளித்து விடும் திறமை மிக்கவன் அந்தத் தளபதி.

போர் வீரர்கள் இரண்டு வகையானவர்களாகக் காணப்படுவார்கள். ஒருவகை – குழுச்சண்டை வீரர்கள.; அடுத்தவகை தனிச் சண்டை வீரர்கள். குழுச்சண்டையானது படையாட்கள் எல்லோருக்கும் பொதுவானது. யுத்தப் பயிற்சி பெற்ற எல்லோருமே செய்யக்கூடியது. ஆனால் தனிச்சண்டை அப்படியானதல்ல் அதற்குத் தனித்தன்மையான நிபுணத்துவம் தேவை. குறிப்பிட்ட சிலர் தான் அதில் வல்லவர்களாக இருப்பார்கள். நவநீதன் ஒரு தனிச் சண்டைக்காரன். நூற்றுக்கணக்கான வீரர்களைக் கொண்ட ஒரு சேனையை தனித்து நின்று எதிர்கொள்ளக்கூடிய மனத்துணிவும், புத்திக் கூர்மையும் செயற்திறனும் அவனிடம் உண்டு.

போரன்றி வேறேதும் நினையாத புலிவீரன் அவன். பயிற்சியைப் பற்றியும், வேவைப் பற்றியும், ஆயுதங்களைப் பற்றியும், சண்டையைப் பற்றியுமே அவன் பேசிக்கொண்டிருப்பான். தூக்கத்தில் வருகின்ற கனவுகள் கூட அவனுக்குக் கள நிகழ்வுகளாகத்தான் இருந்திருக்கும்.

எல்லாப் போராளிகளுமே அவனோடு சண்டைக்களத்துக்குப் போக விருப்பப்படுவார்கள். அவர்களுக்கொல்லாம் அவன் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். இயக்கத்தின் உயர் தளபதிகளினதும் அதீத நம்பிக்கைக்குப் பாத்திரமான போராளியாக அவன் திகழ்ந்தான். தனது செயல்களாலே அவன் வளர்த்துக் கொண்ட நம்பிக்கை அது. ஆம், செயலால் மட்டும்.

சமர் அரங்கொன்றின் பின் முனையிலிருந்து நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருக்கும் கட்டளைத் தளபதி. சண்டை சிக்கல்படுகின்ற சில சூழ்நிலைகளில், “இந்த நேரத்தில் எப்படிச் செய்ய வேண்டும்” என நினைக்கின்றாரோ, சண்டையின் முன் முனையில் வழிநடாத்தும் நவநீதன் அப்படியே செய்து முடிப்பான். அந்தளவுக்கு போர் பற்றிய அறிவை – ஞானத்தை – அவன் பெற்றிருந்தான்.

கட்டையாகிப்போன காலைப் பற்றி அவன் கருத்திலெடுப்பதேயில்லை. சண்டைகளில் அவன் முன்னுக்கு ஓடித்திரிந்து தாக்கும் போதும், தாக்குதலுக்காக நாங்கள் நீண்ட தூரத்திற்குச் செல்ல வேண்டுமானாலும் – மனஞ்சோராமல் உற்சாகத்தோடு நடக்கும் போதும், அவன் தனது மனவுறுதியைக் காட்டுவான்; அது வியப்பைத் தரும்.

நவநீதன் அன்பானவன். மிக அமைதியானவன். மென்மையான சுபாவத்தைக் கொண்டவன்.

“நவநீதன் பேசிப்போட்டான்” என்று, யாருமே சொல்லாத அளவுக்குப் பண்பானவன்.

அவன் அதிகம் கதைக்கமாட்டான் – இடைக்கிடை பகிடி சொல்லுவான்; மற்றவர்களது மனங்களை நோக வைக்காமல், எப்போதாவது யாரையும் கிண்டல் செய்வான் அவ்வளவோடு சரி.

நிர்வாக வேலைகளைச் செய்யும் போது வளைந்துகொடுத்து எல்லோரையும் சமாளித்து, விடயங்களை ஒப்பேற்றி விடுகின்ற திறமையைக் கொண்டவன். எல்லா வகையான மனப்போக்கு உடையவர்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக நடந்து கொள்ளும் பக்குவம் மிக்கவன்.

எப்போதும் ஒரு அப்பாவித் தனம் அவனது விழிகளில் மிதக்கும்.
எப்போதும், ஒரு குழந்தைத் தனம் அவனது முகத்தில் குடியிருக்கும். எங்கள் நெஞ்சுக்குள் பொந்து அமைத்து வாழ்ந்த மாடப்புறா அவன்.

பகைவர்களுக்கு முன்னால் யுத்தசன்னத்தனாகி நெருப்பென நிற்கும் அந்த வீரன், எங்களுக்குள் – பனிநீராய்ப் படர்ந்து குளிர்மையாக வருடுகின்ற நண்பன்.

எவ்வளவு ஆற்றல்கள் அவனுக்குள் குவிந்து கிடந்தன! எத்துணை திறமைகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக அவன் உலா வந்தான்! ஆனாலும் அவன் வெளியில் மிளிராத போர் வீரன்; தன்னைப் பிரபல்யப்படுத்திக் கொள்ள விரும்பாத விடுதலைப் புலி. இலைமறைகாயாக இருந்து, பிரளயங்களைப் படைத்துக் கொண்டிருந்த பிரபாகரனின் பிள்ளை.

இறுதிக்காலத்தில் சண்டைகளுக்குப் பின்னாலேயே அவன் வைத்திருக்கப்பட்டான். ஏற்கெனவே ஏராளமான சண்டைகளுக்குள் நின்றவன்; மாங்குளத்தில் வெடி வாங்கி காலைச் சின்னதாக்கிக் கொண்டவன். சண்டைகளில், அவன் பயன்படுத்துவதை விட, அவன் பட்டறிந்து பெற்றிருக்கும் அனுபவம் மிகுந்த பயன்பாட்டைத் தரும். எனவே தான், இயக்கத்திற்காகவும் அவனுக்காகவும் சமர்களில் பின்முனையிலேயே அவன் வைத்திருக்கப்படுவான். ஆனாலும், பின்னுக்கே நின்று ஒழுங்குகளைச் செய்து கொண்டிருப்பவன், சண்டை வெடித்த அடுத்த நிமிடங்களில் முன்னுக்கே தான் போய்விடுவான்.

புலோப்பளைச் சண்டையைப் பாருங்கள். அதில் அவன் பங்கு முக்கியமானது; குறிப்பிடத்தக்கது.

பூநகரிக்குப் படையெடுக்க நாங்கள் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த போதுதான், எதிரியானவன் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்தான்.

ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்து ஆரவாரமான ஏற்பாடுகளுடன் ‘யாழ்தேவி’ புறப்பட்டவுடனேயே நவநீதனது குழுதான் அங்க அனுப்பப்பட்டது.

பகைவர் சேனைக்கு வாசலிலேயே வரவேற்புக்கொடுக்க அல்ல் அவர்களின் அசைவுகளை அவதானித்துத் தகவல் சொல்ல மட்டும்.

ஒரு படையெடுப்பை முறியடிக்க முனையும் போது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் போர் வியூகமாகும். எமது படைவீரர்களை சரியானதோர் வியூகமைத்து நிறுத்தி வைக்கும் போதுதான், எதிரிப்படையை அதற்குள் தப்பும் வழியற்றுச் சிக்கவைத்துத் தாக்கி அழிக்க முடியும். அவ்வளவு நேர்த்தியாக வியூகம் அமைக்க வேண்டுமானால், எதிரியின் நகர்வு பற்றி மிகத் துல்லியமாக தகவல்கள் தேவை. படையினரின் தொகை என்ன? ஆயுத – படைக்கல வகைகள் என்னென்ன? படையூர்திகள் மற்றும் வசதிகள் எப்படி? என்ன ஒழுங்குமுறையைக் கையாண்டு எதிரி படை நகர்த்துகின்றான்? என்ற தரவுகள் எந்தப் பிசகுமின்றிக் கிடைக்க வேண்டும்.

அவற்றின் அடிப்படையில் தான் – நாம் சிறந்ததொரு வியூகத்தை அமைத்து, நம்பிக்கையோடு காத்திருக்க முடியம்.

புலோப்பளையில் இந்தப் பணியைச் செய்து முடித்தவன் நவநீதன். நாங்கள் காவியம் படைத்த அந்தப் பெருஞ்சமரில், வெற்றி வாகை சூடக்கூடியவாறு, நுட்ப தந்திரோபாயமான போர் வியூகத்தை அமைக்க சரியான தகவல்களைத் தந்தது மட்டுமல்ல – இரவிரவாக நடந்து திரிந்து சண்டைக்கேற்ற ‘நிலை இடம்’ தேடுவதில் நவநீதன் தளபதிகளுக்கு உதவினான்.

எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்பும், மீண்டும் முன்னுக்கே சென்று இறுதிவரை எதிரியின் நகர்வுகளைப் பற்றிய தகவல்களைத் தந்து கொண்டிருந்தவனுக்கு, சண்டை தொடங்கியவுடன் பின்னுக்கு வந்துவிடுமாறுதான் சொல்லப்பட்டது. ஆனால், உரிய இடத்திற்குள் எதிரியின் படையணி வர, எமது முதலணியோடு களத்திலிறங்கிச் சமரை ஆரம்பித்தது அவன் தான்.

அடுத்தது தான் பூநகரிச் சமர் –

புலிகள் இயக்கத்தின் போரிடும் சக்தியைப் பற்றி சர்வதேச செய்தி அலைவரிசைகளையெல்லாம் வியந்துரைக்க வைத்தது செருக்களம்.

அவலப்பட்ட மக்களுக்குப் பாதை திறக்கக் கேட்ட போது – அரசியல் பேரம் பேசி அகங்காரம் செய்தோர்க்கு உச்சந்தலையடி கொடுத்த போர் அரங்கு.

அந்தக் கூட்டுத்தளத்தின், ‘வில்லடி’ கட்டளை முகாமைத் தாக்கும் பெரும் படையணிக்குள், உப குழுவொன்றுக்கு நவநீதன் தளபதி. ஒதுக்கப்பட்ட ஒரு காவலரண் தொகுதியைத் தாக்கி அழித்த பின் முகாமின் மையத்தைத் தாக்கும் பிரதான படைப்பிரிவுக்குத் துணைக்குழுவாக இறங்கவேண்டுமென்பது தான், அவனுக்குக் கொடுக்கப்பட்ட பணி.

‘வில்லடி’ முகாம் தான், கூட்டுத்தளத்தின் கட்டளை முகாம். அது மிகப் பலமானது. 91ஆம் ஆண்டு ஆளையிறவுத் தளத்தை நாம் வெற்றி கொள்ள முற்பட்ட போது அது இருந்ததைப்போல, ஏறக்குறைய அதேயளவு பலத்துடன் தான் இது இருந்தது.

நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் சண்டை ஆரம்பித்தது. விடிந்த போது நவநீதனுக்கான காவலரண் தொகுதி தாக்கியழிக்கப்பட்டு விட்டது. ஆனால் கட்டளை முகாமில், ‘ராங்க்’குகளையும், பெருந்தொகை ஆயுதங்களையும் இழந்த எதிரி, சிறு பகுதியொன்றில் எஞ்சியிருந்தான்.

அர்த்தசாம இருளில் சிதறியோடிப்போன சிப்பாய்களும், விடிந்த பின் கட்டளை முகாமை நோக்கி ஓடிவர, திடீரென எதிரி அசுர பலம் பெற்றான்.

எதிரி, ‘அடுக்குமுறைப் பாதுகாப்பு முறையில்’, (Depth Defence System) ஒன்றன் பின் ஒன்றாக அமைத்திருந்த காவலரண்களைத் தகர்த்தெறிந்து கொண்டு, ‘கனரக மோட்டார் பீரங்கி’ உள்ள தளத்தை நோக்கி முன்னேறிய எமதணி அதனைக்கைப்பற்றும் போது, அணி பெருமளவில் சேதப்பட்டு விட்டது; பொழுதும் விடிந்து விட்டது.

அந்த நேரத்திலேயே – துணைக் குழுக்களை அழைத்து பீரங்கிகளை அப்புறப்படுத்த முன்னர் – எதிரி புதுப்பலம் கொண்டு கடுமையாகத் தாக்கத் துவங்கினான்.

பீரங்கித் தளம் வெளியான தரையமைப்பைக் கொண்டது. முற்றாக அவனுக்குச் சாதகமான களம். அத்தோடு, திட்டமிட்ட ரீதியில் அமைக்கப்பட்ட சக்தி மிக்க அரண்களிலிருந்து எதிரி தாக்கி முன்னேறினான்; விடிந்துவேறுவிட்டது. வானூர்திகள் பார்த்துப் பார்த்துக் குண்டடித்தன. இரவுச் சண்டையிலேயே மிகுந்தளவில் பலவீனப்பட்டுப் போன எமதணி இயலுமானவரை போரிட்டது; ஆனால் ஏறக்குறைய அது முற்றாகவே சேதப்பட்டு விட்ட நிலையில், பீரங்கிகளை மீட்க முடியாமலேயே பின்வாங்க நேரிட்டது.

கைப்பற்றப்பட்ட பீரங்கித் தளமும், பீரங்கிகளும் கைவிடப்பட்டு விட்டன. இப்போது பீரங்கித் தனம் நடுவில். அதன் பின்னால் எதிரிப்படை; முன்னால் புலிகள் படை. பீரங்கிகள் அநாதரவாகக் கிடந்தன – அவனுக்குப் பக்கத்தில், எங்களுக்கு எட்டத்தில்.

திரும்பவும் தாக்கி அவற்றைக் கைப்பற்றியே ஆக வேண்டும். ஆனால் பகலில்…….? அது முற்று முழுதாகவே பகைவனுக்குச் சாதகமான சூழ்நிலை. பெரும் இழப்பைக் கொடுத்து, மிகுந்த சிரமத்துடனேயே நாம் மோத வேண்டியிருக்கும். அப்படியானால் இரவு….? இல்லை; இருளும் வரை காத்திருக்க முடியாது. எதிரி மீண்டும் சுதாகரித்து, முழுப்பலத்தையும் திரட்டி முன்னேறி, பீரங்கிகளைத் திரும்ப கைப்பற்றிடக் கூடும். அதனால், அவனுக்கு அவகாசம் கொடுக்காமல் உடனடியாகத் தாக்கதலை நடாத்த வேண்டும்.

இது ஒரு சிக்கல் நிறைந்த களநிலைமை இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நவநீதன் அழைக்கப்பட்டான்; அவன்தான் அதற்கு உரித்தானவன்.

தேர்ந்தெடுத்த வீரர்களைக் கொண்டு உடனடியாக ஒரு தாக்குதலணி தயார் செய்யப்பட்டது. அந்த அணியின் கொமாண்டராகி சண்டையைத் துவக்கினான் தளபதி.

முரட்டுத்தனமான முன்னேற்றம். அது அவனுக்குப் பழக்கப்பட்ட வேகம். ‘பீரங்கிகள்’ – என்ற ஒரே உறுதியுடன் பாய்ந்தனர் வேங்கைகள். நிலைமையைப் புரிந்து கொண்ட எதிரி பலம் கொண்ட மட்டும் மோதினான்; தாக்குதலை முறியடிக்க தன் சக்திக்கு மீறிச் சண்டையிட்டான்.

இருந்தபோதும் –
பீரங்கிகளை அடையும் வரை நவநீதன் சண்டையை நடாத்திச் சென்றான்.

எதிரியின் வெறித்தனமான தாக்குதலுக்கு மத்தியிலும் தளத்தைக் கைப்பற்றினர் புலிகள்.
பீரங்கிகள் இரண்டு.

முதலாவதைக் கழற்றி எடுத்துப் பின்னுக்கு அனுப்பிவிட்ட போது – உற்சாகம் பொங்கியது.

நெருப்பு மழைக்குள்ளும் இரண்டாவதைக் கழற்றிக் கொண்டிருந்த போது தான்……. அந்தத் துயரம் நடந்தது!

எங்கள் கதாநாயகனுக்குப் பக்கத்தில்…… மிக அருகில்…… எதிரி ஏவிய மோட்டார் குண்டொன்று விழுந்து வெடித்தது… அவனை…… ஓ! அதை எப்படிச் சொல்ல……?

எங்கள் கண்களுக்கு முன்னாலேயே எங்கள் நெஞ்சினிய நண்பன்…… கை…… கால்…… இடுப்பு…… நெஞ்சு…… முகம்…… எல்லாமே பிய்ந்து போய்…… தசைகள் தொங்கி…… இறைச்சியாய்…… ஓ! அதை எப்படி விபரிக்க……

இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்து கொண்டும் எங்கள் நவநீதன் கத்தினான்…… “மோட்டரை எடுங்கோடா……மோட்டரை விடாதேங்கோடா……”

உயிரின் கடைத்துளி சிந்தும் போதும், சத்தமில்லாமல் அவனது வாய் அசைந்து கொண்டேயிருந்தது…… அது “மோட்டரை விடாதேங்கோடா……” என்ற கட்டளையாகத்தான் இருந்திருக்கும்

அவன் சொல்லிவிட்டுப் போயி விட்டான்.
நாங்கள் விடவில்லை.
கொண்டுதான் வந்தோம்!

விடுதலைப்புலிகள் இதழ் (சித்திரை – 1994).