நெதர்லாந்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019.!

breaking
நெதர்லாந்தில் தேசிய மாவீரர் நினைவெழுச்சி நாள் 27-11-2019 புதன்கிழமை அல்மேர பிரதேசத்தில் மிகஎழுச்சியுடன் நடைபெற்றது. சுமார் 12.30 மணியளவில் பொதுச்சுடரேற்றப்பட்டு பின் நெதர்லாந்து தேசியக்கொடியும் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியும் ஏற்றி ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வு தொடர்ந்து வாத்திய அணிவகுப்புடன் மாவீரர் குடும்பங்கள் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மரியாதையுடன் ஆசனங்களில் அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து தேசியத்தலைவரின் 2008ம் ஆண்டு உரை ஒளிப்படமாகவும்  தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள்   அறிக்கையை  ஒலிநாடாவிலும் மக்கள் கேட்கும் விதமாக ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து துயிலுமில்லப் பாடலுடன் மாவீர் குடும்பங்கள் ஈகைச்சுடரேற்ற தொடர்ந்து பொது மக்களும் கனத்த இதயத்துடன் எம் காவல் தெய்வங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள். தொடர்ந்து தமிழமுதம் இசைக்குழுவின் எழுச்சி கானங்களும் எழுச்சி நடனங்கள் எழுச்சி கவிதைகள் சிறார்களின் எழுச்சி உரைகள் அத்துடன் இலண்டனில் இருந்து வருகை தந்த ஊடகவியலாளர் திரு கோபி இரத்தினத்தின் சிறப்புரை என எழுச்சி நிகழ்வுகளும் அத்துடன் இந்த ஆண்டு நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும்வெற்றிக் கேடையங்களும் வழங்கப்பட்டது. மிக உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்ட இந் நிகழ்வில் சுமார் 800இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து அமைதியாக எழுச்சி நிகழ்வில் பங்கேற்றார்கள். எழுச்சியுடன் சிறப்புற நடைபெற்ற இந் நிகழ்வு சுமார் 19.30 மணியளவில் தேசியக் கொடிகள் கையேற்கப்பட்டு பின் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் எல்லோரும் இணைந்து பாடி பின் எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற கோசத்துடன் இனிதே நிறைவடைந்தது