Take a fresh look at your lifestyle.

வலப்பனை மண்சரிவில் காணாமல் போன சிறுவனை தேடும் பணியின் அடுத்த கட்டம் ஆலோசிக்கப்படும்!

 


நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்த சிறுவனின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை. இன்றும் தேடுதல் பணி இடம்பெற்ற பின்னர் அடுத்த கட்டம் குறித்து ஆராயப்படும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹ புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

வலப்பனை பிரதான வீதியில், நாகந்தலாவ – மலபத்தாவ எனுமிடத்தில், வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததால் வீட்டிலிருந்த நால்வரும் உயிரிழந்தனர். ஜி.ஜி.ரம்பண்டா (58), கே.ஜி.பிசோமெனிக்கா (52), ஜி.ஜி.கலன்ன பெதும் கெக்குலண்தர (15), கே.எம்.திசானி கருணாரத்ன (18) ஆகிய நால்வரும் உயிரிழந்துள்ளனர்.

இதில் ஜி.ஜி.கலன்ன பெதும் கெக்குலண்தரவின் உடல் மீட்கப்படவில்லை. ஏனைய மூவரின் உடலும் மீட்கப்பட்டது.

உடலை தேடி நேற்றும் தேடுதல் பணிகள் இடம்பெற்றன. அடிக்கடி மழை வருவதாலும், அந்த பகுதி சேறும் சகதியுமாக இருப்பதால் தேடுதல் பணிகள் சிரமமாக இருப்பதாக அரச அதிபர் குறிப்பிட்டார்.

நிலச்சரிவு மிகவும் கனமானது, இயந்திரங்களை பயன்படுத்த முடியாது. இருப்பினும், நாங்கள் இன்று தேடுதலை தொடர்கிறோம். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் மூன்று நாட்களிற்கு குறையாமல் நடைபெற வேண்டுமென்பது சர்வதேச விதி.

இன்றையக்குப் பிறகு, தேடுதலில் ஈடுபடுபவர்கள் மூலம் கள நிலைமையை அறிந்து, உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து, அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் கலந்துரையாடி தேடுதலை தொடர்வதா என்பதை முடிவு செய்வோம் என்றார்.

இதேவேளை, நுவரெலிய பகுதியில் பல இடங்களில் படிப்படியாக வெள்ளம் வடிந்துள்ளது. கினிகத்தேன, அம்பகமுவ, நுவரெலியா பகுதிகளில் தற்காலிய தங்குமிடங்களிலிருந்து மக்கள் வெளியேறி விட்டனர்.

வலப்பனை மண்சரிவு இடம்பெற்ற பகுதியை சேர்ந்த 10 குடும்பங்கள் முன்வத்த பகுதியிலுள்ள ஆலயமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.