“தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு தீவிரவாத அமைப்பு அல்ல!” - முழுமையான விபரம்

breaking

சுவிற்சர்லாந்தின் கூட்டாட்சி நீதிமன்றம் குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு முடிவை உறுதிப்படுத்தியுள்ளது. இது கூட்டாட்சி அரசதரப்பு வழக்கறிஞர் பணிமனைக்கு ஒரு தோல்வி. தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு தீவிரவாத அமைப்பு அல்ல - என கூட்டாட்சி நீதிமன்றம் முடிவெடுத்து, 12 பேரை குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது கூட்டாட்சி அரசதரப்பு வழக்கறிஞர் பணிமனைக்கு கப்பல் மூழ்கியது போன்ற ஒரு நிலமை ஆகும்.

“1999ல் இருந்து 2009 வரை குறிப்பிட்ட 13 பேரில் 12 பேர் தமிழீழ விடுதலைப்புலிகளிற்காக நிதியைச் சேர்த்ததன் படி, அவர்கள் சுவிற்சர்லாந்தின் குற்றவியல் சட்டநூலின் சட்டம் 260ஐ மீறியுள்ளார்கள்!” - என கூட்டாட்சி அரசதரப்பு வழக்கறிஞர் பணிமனை இவர்கள் மேல் குற்றஞ்சாட்டியுள்ளது. ஒரு பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவு கொடுத்தது- குற்றம் என அவர்களை குறிப்பிட்டுள்ளனர்.

பங்குனி 2018 இந்த 12 குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம் இல்லாதவர்கள் என விடுவிக்கப்பட்டுள்ளதை- இன்று, 03.12.2019 சுவிற்சர்லாந்தின் கூட்டாட்சி நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச்சட்டம் மாஃவியா போன்று தோற்றமளிக்கும் பயங்கரவாத அமைப்புக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது இந்தச்சட்டம் “அல்-கைதா” மற்றும் “ஐ.எஸ்” போன்ற அமைப்புக்களிற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

“இந்தக் குற்றச்சாட்டுப்பிரச்சனை நடக்கும் போது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக இருக்கவில்லை,” என கூட்டாட்சி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்காரவாதமான தாக்குதல்களை நடத்தியிருந்தாலும், அவர்களின் இலக்கு- ஆயுதப்போராட்டம் ஊடாக ஒரு சுதந்திர நாட்டிற்கான அங்கீகாரத்தை அமைப்பது ஆகும். அந்த நேரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பிற்கு சுவிற்சர்லாந்தில் இருந்து நிதி சேர்த்தவர்களிற்கு, தாங்கள் கூட்டாட்சி நீதிமன்றத்தின் படி சட்டத்தை மீறுகின்றார்கள் என்பது தெரியாது. அதனால் இப்படி ஒரு தீர்ப்பை வழங்குவது சட்டத்தை மீறுவதாகும்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 5 பேர் வர்த்தகரீதியாக ஏமாற்று வேலை செய்ததாகவும், 2 பேர் பொய்யான ஆவணங்களைக் கொடுத்ததாகவும் - அவர்களிற்கு 11 தொடக்கம் 24 மாதங்கள் வரையான சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. கூட்டாட்சி நீதிமன்றம் கூட்டாட்சி அரசதரப்பு வழக்கறிஞர் பணிமனையின் குற்றச்சாட்டை அனுமதித்துள்ளது. பொய்யான ஆவணங்களைத் தயாரித்ததற்கு விடுதலை செய்யப்பட்ட ஒருவர் காரணமாக இருக்கின்றாரா- என்பதை கூட்டாட்சி குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் புகாரை லவுசான் மாநில நீதிபதிகள் அனுமதித்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக உண்மையிலேயே பிழை நடந்துள்ளதா என்பதை கூட்டாட்சி நீதிமன்றம் மறுபடியும் விசாரணை செய்யவேண்டியிருக்கின்றது.

இந்தக்குற்றவியல் விசாரணை கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் நடந்து வருவதால்- இதற்கு நான்கு மில்லியன் சுவிஸ் பிராங் செலவாகியது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 55 ஆயிரம் சுவிஸ் பிராங் செலுத்த வேண்டும். இதற்கு கூட்டமைப்பு பொறுப்பு. இத்துடன் ஐந்து மில்லியன் சுவிஸ் பிராங் வழக்கறிஞர் கட்டணமாக வழங்கப்பட வேண்டிய தொகையாகும். இறுதியாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பொருளாதார நிலையைப்பொறுத்து அவர்கள் இந்தக்கட்டணத்தை மீண்டும் தரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி: www.20min.ch

மொழிபெயர்ப்பு:  Nithurshana Raveendran