நாடாளுமன்ற தெரிவுக் குழுக்கள் சில தொடர்ந்தும் செயற்படும் என அறிவிப்பு.!

breaking
நாடாளுமன்ற தெரிவுக் குழுக்கள் சில தொடர்ந்தும் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தொடர்பாடற்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான இலங்கையின் இன மற்றும் மத ஒற்றுமையை உறுதி செய்வதை ஆராய்ந்து அதன் விதப்புரைகளை நாடாளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கானதுமான, நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடந்தும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகர் தலைமையில் இயங்கும், தேசிய மதிப்பீட்டு ஆற்றல்களை உறுதிப்படுத்துவதற்கு ஆய்வுகளை மேற்கொண்டு அதன் விதப்புரைகளை நாடாளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கானதுமான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் தொடர்ந்தும் செயற்படும் என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, வலுசக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு ஆகியன தொடர்ந்தும் செயற்படவுள்ளன. மேலும், சுகாதாரம் மற்றும் மனித சேமநலம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு, உள்ளக நிர்வாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துரைசார் மேற்பார்வைக்குழு, சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு உள்ளிட்ட சில நாடாளுமன்றக் குழுக்களும் தொடர்ந்தும் இயங்கவுள்ளன. எட்டாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் வர்த்தமானி அறிவித்தலின் படி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.