ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல்.?

breaking
ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் இராணுவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) அத்துமீறி நடத்திய தாக்குதலில் உள்ளூர்வாசிகள் இருவர் கொல்லப்பட்டதுடன் 9 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்த ஆண்டு மட்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 3 ஆயிரம் முறை அத்துமீறி இந்தியப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதிலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்த பின் 950 முறை அத்துமீறி இந்திய இராணுவத்தினர் மீதும், மக்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஷாப்பூர் மற்றும் கிர்னி செக்டார் பகுதியில் இன்று பிற்பகலில் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் இராணுவம் திடீரென்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு இந்திய இராணுவம் தரப்பிலும் பதிலடி தரப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. 35 வயது பெண் குல்நாஸ் அக்தர் என்பவரும், 16 வயது சிறுவன் ஷோயிப் அகமது என்பவரும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் என்றும் 9 பேர் காயமடைந்தனர் என்று இராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.