சட்டவிரோத செயல்களிற்கு இடையூறாக மறைகாணியை (சிசிரிவி) பொருத்தியவருக்கு அச்சுறுத்தல்: அகற்றப்பட்டது மறைகாணி

breaking
  யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் உள்ள நரிக்குண்டு குளப் பகுதியில் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதைக் கண்காணிக்க அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமரா அச்சுறுத்தல் காரணமாக அகற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது யாழ்ப்பாணம் மாநகர சபை ஊடாக நடவடிக்கை எடுக்கும் நோக்குடன், அந்தப் பகுதியில் வசிக்கும் அரச அலுவலகர், மாநகர சபை உறுப்பினர்கள் முன்னிலையில் அண்மையில் சி.சி.ரி.வி. கமராவை பொருத்தியிருந்தார். இதனைடுயடுத்து குளத்தை அண்டியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள், தன்னார்வாளர்கள், இளைஞர்கள் ஆகியோர் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குளத்தினை சுற்றி வீசப்பட்ட கழிவு பொருற்கள், சுற்றியுள்ள பற்றைகள் என்பவற்றை அப்புறப்படுத்தினர். இதன்போது மருத்துவ கழிவுகள் அடங்கிய பைகள் அவ்விடத்தில் இருந்து மீட்கப்பட்டன. அதனுள் பாவித்த ஊசிகள், மருந்து போத்தல்கள் என்பன காணப்பட்டன. அவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனை கழிவுகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அந்தச் செய்தியையடுத்து சி.சி.ரி.வி கமராவை பொருத்திய வீட்டின் உரிமையாளான அரச அலுவலகருக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டு தொலைபேசி இலக்கங்களிலிருந்து தொடச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதனால் அவர் அந்த சி.சி.ரி.வி. கமராவை அங்கிருந்து அகற்றியுள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபை முன்னெடுக்க வேண்டிய பணியை தன்னார்வத்தில் முன்னெடுத்த குறித்த வீட்டு உரிமையாளர் அச்சுறுத்தல் காரணமாக அச்சத்தில் உள்ளார். இது தொடர்பாக மாநகரசபை உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் தமது சூழலை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.