அத்துமீறலை கண்டு  பொங்கி எழுந்த பெண்கள்: வாகனங்களை மடக்கி ஆர்ப்பாட்டம்

breaking
  வடதமிழீழம்: மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, தோட்ட வெளி பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மண் அகழ்வை நிறுத்தக் கோரி அப்பகுதி பெண்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காடு சார்ந்த நிலப் பிரதேசத்தைக் கொண்ட குறித்த கிராமத்தில் சுமார் 100இற்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் குறித்த பகுதியில் மீன் வளர்ப்புத் திட்டத்தை செயற்படுத்துவதாகக் கூறி ஒரு தரப்பினர் பல மாதங்கள் மண் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறித்த பகுதியில் இடம்பெறுகின்றன மண் அகழ்வை நிறுத்தக் கோரி பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் மண் அகழ்விற்கான அனுமதி அநுராதபுரத்திலிருந்து வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அனுமதியை வைத்து மண் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் விசனமடைந்த குறித்த பகுதி பெண்கள் ஒன்று திரண்டு இன்று (புதன்கிழமை) காலை மண் அகழும் இடத்திற்குச் சென்று அகழ்வை தடுத்து நிறுத்தியதுடன் குறித்த இடத்தில் போராட்டத்தை முன்னெடுத்தனர். அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் மற்றும் ஜே.சீ.பீ உள்ளிட்ட வாகனங்களுடன் பணியாட்கள் குறித்த இடத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில் அவ்விடத்தின் மண் அகழ்விற்கான உரிமையைக் கோரி ஶ்ரீலங்காவைச் சேர்ந்த ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதப்பட்டதாக ஈடுபட்டுள்ளார் இதையடுத்து, குறித்த பகுதிக்கு பங்குத்தந்தை அருட் தந்தை பெனோ அலேக்சான்டர் சில்வா, மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ரி.லுஸ்ரின் ஆகியோர் சென்று மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.