ஈரானுக்கு எதிராக படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா? – பென்டகன் தகவல்

breaking
ஈரானால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மத்திய கிழக்குப் பகுதிக்கு இராணுவத்தை அனுப்ப முடிவு எடுக்கப்பட்டதாக வெளியான செய்தியை அமெரிக்கா மறுத்துள்ளது. ஈரானால் மத்தியக் கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்காக சுமார் 14 ஆயிரத்துக்கும் அதிகமான படை வீரர்களை அங்கு அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இது முற்றிலும் தவறான செய்தி என அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் அலிசா ஃபரா (Alyssa Farah ) தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015இல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.