புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு பேரிடியாக வந்த செய்தி!

breaking
  குடியுரிமை திருத்த மசோதா மூலம் நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சித்து வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று வந்த அவர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், இலங்கையிலிருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் அகதிகளாக குடியேறியுள்ளனா். இவ்வாறு புலம்பெயர்ந்துள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனா். உயா்நீதிமன்றமும் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், குடியுரிமை திருத்த மசோதாவில் ஈழத் தமிழா்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் குடியுரிமை வழங்கக்கோரிய ஈழத்தமிழர்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. ஆனால் வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறியுள்ள இஸ்லாமியா்கள் நீங்கலான பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு பரிசீலிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அந்த நாடுகளிலிருந்து ஏற்கெனவே இந்தியாவில் குடியேறி இருக்கிற இஸ்லாமியா்களை வெளியேற்றுவதற்கான சதி நடந்து வருகிறது. குடியுரிமை திருத்த மசோதா மூலம் மதப் பிளவை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.