வெள்ளத்திலும் அரசியல் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பு.?

breaking
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட முறுக்கன்தீவு கிராமத்தில் 57 குடுப்பங்களைச் சேர்ந்த 203 பேரும், பிரம்படித்தீவு கிராமத்தில் 124 குடும்பங்களைச் சேர்ந்த 397 பேரும், சாராவெளி கிராமத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலத்தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் பல இன்னல்களை அந்த மக்கள் எதிர்நோக்கி வரும் நிலையில், கல்குடாத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இந்து மாமன்றங்களின் ஊடாக நேற்று 07.12.2019 சிறிய தோணி மூலம் அன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை மேற்கொண்டிருந்தார். இன்று (08.12.2019) இயந்திரப்படகு மூலம் மட்டக்கப்புத் தொகுதியை பிரதிநிதித்துப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீPநேசன் குறித்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்ததோடு அவர்களுக்கான அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளையும் அரச அதிகாரிகள் ஊடாக பூர்த்தி செய்து வைத்தார். இவ்விரு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே கட்சியைச் சார்ந்தவர்கள். ஆனால் வெவ்வேறு தேர்தல் தொகுதியைச் சேர்ந்தவர்கள். எதிர்காலத்தில் தங்கள் வாக்கு வங்கியை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யும் உதவிகளிலும் அரசியல் பணியை மேற்கொள்கின்றார்கள். எவ்வாறாயியும், இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் அண்மைய காலமாக சிறீலங்கா அரசாங்கத்தில் இருந்து ஒதுக்கப்படும் நிதிப்பங்கீட்டில் எழுந்துள்ள சச்சரவுகள் தொடர்வதாகவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.