தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பம்

breaking
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் எதிர்வரும் 27 மற்றும் 30ஆம் திகதிகளில் ஊரக உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து இதர மாவட்டங்களிலுள்ள ஊரக உள்ளூராட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தலாம் என உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பாணையை இரத்து செய்த மாநில தேர்தல் ஆணையம், புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதற்கமைய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் ஆகியவற்றுக்கு எதிர்வரும் 27, 30 ஆம் திகதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாமென அறிவிக்கப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்ய எதிர்வரும் 16ஆம் திகதியே கடைசி நாளாகும். ஜனவரி 2ஆம் திகதி வாக்குகள் எண்ணப்படும். தேர்வான உறுப்பினர்கள் பதவியேற்பு ஜனவரி 6ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.