வினையாகிய பப்ஜி கேம்: பத்தாம் வகுப்பு மாணவி விபரீத முடிவு!

breaking
படிக்காமல் செல்போனில் அண்ணனுடன் சேர்ந்து ‘பப்ஜி கேம்’ விளையாடியதை தாய் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் பத்மா. இவருடைய கணவர் ரவிக்குமார் இறந்துவிட்டார். பத்மா, தனது மகன் லோகேஷ் மற்றும் மகள் ஹேமமாலினி (15) ஆகியோருடன் வசித்து வந்தார். ஹேமமாலினி, அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை ஹேமமாலினி, தனது அண்ணன் லோகேசுடன் சேர்ந்து செல்போனில் ‘பப்ஜி கேம்’ விளையாடிக்கொண்டு இருந்தார். இதை பார்த்த பத்மா, “புத்தகத்தை எடுத்து படிக்காமல் இப்படி செல்போனில் ‘கேம்’ விளையாடிக்கொண்டு இருக்கிறாயே?” என மகளை கண்டித்தார். இதனால் மனம் உடைந்த ஹேமமாலினி, தாயிடம் கோபித்துக்கொண்டு மாடியில் உள்ள தனி அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பத்மா, லோகேஷ் இருவரும் அறை கதவை நீண்டநேரம் தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ஹேமமாலினி, தாயின் புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஹேமமாலினி, அடிக்கடி தனது தாய் மற்றும் அண்ணனிடம் சண்டை போடும்போது எல்லாம் தான் தூக்குப்போட்டு சாகப்போகிறேன் என்று விளையாட்டாக கூறுவது வழக்கம். நேற்றும் தாய் கண்டித்ததும், தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு மாடியில் உள்ள அறைக்கு ஹேமமாலினி சென்று உள்ளார். ஆனால் அவர், வழக்கம்போல் விளையாட்டாக சொல்வதாக நினைத்துவிட்டு அவரது தாயும், அண்ணனும் கண்டுகொள்ளவில்லை. அந்த விளையாட்டே வினையாகி, ஹேமமாலினியின் உயிரை பறித்துவிட்டது. இதுபற்றி ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹேமமாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.