டிக் டாக் கில் கல்லூரி மாணவி கடத்தல்.?

breaking

சேலம் அருகே, செவிலியர் கல்லூரி மாணவியை டிக்டாக் செயலி மூலம் காதல் வலை விரித்து கடத்திச்சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை (டிச. 9) கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ் (22). பட்டயப்படிப்பு படித்துள்ள இவர், கடந்த 7ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சதீஸின் நண்பர் சீனிவாசன் என்கிற கிருபாகரன் (28) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த செவிலியர் கல்லூரி மாணவி ஒருவரை சில நாள்கள் முன்பு கடத்திச்சென்றார்.

 

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சேலம் நகர மகளிர் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சதீஸை காவல்துறையினர் அழைத்து விசாரித்தனர். மறுநாளும் விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என்றதால், மனம் உடைந்த சதீஸ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தற்கொலைக்கு முன்பாக சதீஸ் எழுதியுள்ள கடிதத்தில், 'என்னால் என் குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டுவிட்டது. எனக்கு வாழப்பிடிக்கவில்லை. காணாமல் போன செவிலியர் கல்லூரி மாணவிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த மாணவியும், என் நண்பர் கிருபாகரனும் காதலிக்கின்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிவிட்டனர்,' என்று குறிப்பிட்டுள்ளார். என்றாலும், காவல்துறையினர் டார்ச்சர் செய்ததால்தான் சதீஸ் தற்கொலை செய்து கொண்டதாகக்கூறி, அரசு மருத்துவமனையில் இருந்து சதீஸின் உடலை வாங்கிச் செல்ல மறுத்தும் பெற்றோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இது ஒருபுறம் இருக்க, கிருபாகரன் புதுச்சேரியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த காவல்துறையினர், கிருபாகரனையும், செவிலியர் கல்லூரி மாணவியையும் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அந்த மாணவிக்கு 17 வயதே ஆவதும், இன்னும் மேஜர் ஆகவில்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, கிருபாகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிந்து, கைது செய்தனர். மாணவியை அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

கைதான கிருபாகரன், ஏற்கனவே நெல்லையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனம் உடைந்து அவருடைய மனைவி, பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அவர் பிரிந்து சென்ற நிலையில்தான் கிருபாகரன், டிக்டாக் செயலி மூலமாக சேலத்தில் செவிலியர் கல்லூரி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.