சென்னைக்கு வந்த எகிப்து வெங்காயம்.!

breaking
எகிப்து நாட்டு வெங்காயம் இறக்குமதி காரணமாக தமிழகத்தில் வெங்காய விலை குறைய தொடங்கியுள்ள நிலையில், சில்லறை விற்பனையாளர்கள் 2 மெட்ரிக் டன் வரை மட்டுமே வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், கப்பல் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து திருச்சி, சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சென்னை கோயம்பேடு சந்தைக்கு முதற்கட்டமாக 60 டன் அளவிலான எகிப்து வெங்காயம் நேற்றுவந்த நிலையில், மேலும் 50 டன் எகிப்து வெங்காயம் இன்று வரவுள்ளது. இந்த வெங்காயம் இன்று முதல் விற்பனைக்கு வர இருப்பதால் விலை குறைய வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டியில் 30 டன் எகிப்து வெங்காயம் விற்பனை தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. எகிப்து வெங்காயம் எப்படி இருக்கும்? எகிப்தில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயம் இந்தியாவில் விளையும் வெங்காயத்தை போன்று இல்லாமல் காரம் குறைவாகவும், கண் எரிச்சலை ஏற்படுத்தாத வகையிலும் இருக்கும். எகிப்தில் விளையும் ஒரு வெங்காயமே 200 கிராம் முதல் 600 கிராம் வரை இருக்கும். இந்த வெங்காயத்தை, இந்திய வெங்காயம் போல, நீண்ட நாட்கள் சேமித்து வைத்து விற்பனை செய்ய முடியாது. பத்து முதல் 15 நாட்கள் வரை மட்டுமே இந்த வெங்காயம், தாக்குபிடிக்கும். அதற்கு மேல் வைத்திருந்தால் அழுகிவிட அதிக வாய்ப்புள்ளது. எகிப்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சென்னை கோயம்பேடு சந்தையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ஜான் சுந்தர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இருப்பு வைத்துள்ள வெங்காயத்திற்கு முறையான ரசீதுகள் வைத்துள்ளனரா? என்றும் ஆய்வு செய்தனர். இதே போன்று, திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டி, திண்டுக்கல் - பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெங்காய மண்டியிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். புதுக்கோட்டையில் பெருமாள் கோயில் மார்க்கெட், பெரிய மார்க்கெட், தெற்கு ராஜவீதியில் உள்ள வெங்காய மண்டிகள், வெங்காய மூட்டைகள் வைக்கப்பட்டிருக்கும் குடோன்கள் ஆகியவற்றிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையே, சில்லறை விற்பனையாளர்கள் 5 டன் வரை இருப்பு வைத்திருக்கலாம் என்பதை மாற்றி 2 டன் வரை வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. மொத்த விற்பனையாளர்கள் ஏற்கனவே உள்ளபடி 25 டன் வரை வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.