இலங்கையர்களுக்கு ஒருபோதும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது – இந்திய மத்திய அரசு

breaking
இந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. 30 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுமா? என விழுப்புரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் போதே இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்படமாட்டாது எனவும் அவர் இதன்போது திட்டவட்டமாக கூறியுள்ளார். 1955ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்திற்கமைய குடியுரிமை விதிகள் 2009 இன்படி இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த சட்டப்பிரிவின் 5 மற்றும் 6 ஆம் விதிகளின் படி, அயல்நாட்டவர் குடியுரிமைப் பெற முடியும் என தெரிவித்துள்ளார். எனினும், சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதிகளின் கீழ், இந்திய குடியுரிமையைப் பெற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.