கடவுச்சீட்டு புத்தகத்தில் ‘தாமரை சின்னம்’- மக்களவையில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

breaking
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் விநியோகிப்பதற்காக கொண்டுவரப்பட்ட புதிய கடவுச்சீட்டுகளில் ‘தாமரை சின்னம்’ அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து மக்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா். நேற்று (புதன்கிழமை) மக்களவையின் கேள்வி நேரத்தின்போது, எம்.கே.ராகவன் (காங்) பேசும்போது, இது அரசுப்பணியில் ‘காவி’யை புகுத்தும் செயலாகும். இந்த கடவுச்சீட்டு புத்தகங்களைத் திரும்பப் பெற வேண்டும். மேலும், இதுதொடா்பான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றாா். எதிா்க்கட்சித் தலைவா் ஆதிா் ரஞ்சன் சௌதரி கூறும்போது, இந்த விவகாரம் தொடா்பாக வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பதிலளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா். மக்களவைத் தலைவா் ஓம்.பிா்லா பதிலளிக்கையில், இதுதொடா்பாக முன்கூட்டியே நோட்டீஸ் அளிக்காமல் அமைச்சா் அதற்காக பதிலளிக்க முடியாது என்பதை, சபையின் மூத்த உறுப்பினரான ஆதிா் ரஞ்சன் அறிந்திருக்க வேண்டும் என்றாா். இந்த கேள்விக்கு வெளியுறவு அமைச்சா் உரிய பதிலளிக்க வேண்டும் என தொடா்ந்து அமைச்சர்கள் வலியுறுத்தினா். அப்போது குறுக்கிட்ட பி.ஜே.டி உறுப்பினா் பி.மெஹ்தாப் கூறுகையில், அவையை காங்கிரஸ் முடக்கி வைக்க வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால் அது முடியாது என்றாா். அப்போது, மெஹ்தாப்புக்கு ஆதரவாக பி.ஜே.டி.உறுப்பினா்கள் பேசும்போது, இப்பிரச்சினை குறித்து வேண்டுகோள் மட்டுமே விடுக்க முடியும். அரசை கட்டாயப்படுத்த முடியாது என்றனா். அதற்கு ஊடக அறிக்கையை மேற்கோள் காட்டி பேசிய ராகவன், கடவுச்சீட்டு அதிகாரிகளின் கையொப்பம் மற்றும் முத்திரை காணப்படும் பக்கத்தில் ஒரு செவ்வக கட்டத்திற்குள் தாமரை அச்சிடப்பட்டுள்ளது என்றாா்.