இலங்கையில் தமிழ் பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்தால் பிரச்சினையா?

breaking
புதிய கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குடிவரவு குடிஅகல்வு திணைக்களம் அறிவித்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்த விடயம் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கயான் மிலிந்த விளக்கமளித்துள்ளார். கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தை எடுக்கும் போது முகத்தில் ஒப்பனைகளோ அல்லது வேறு எந்தவித மாற்றங்களும் இல்லாது புகைப்படத்தை எடுக்க வேண்டும் என சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் விதிமுறைகளில் உள்ளது. விதிமுறைகளுக்கு அமைய 2015ஆம் ஆண்டு முதல் முகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி கடவுச்சீட்டுக்கான புகைப்படம் எடுக்கப்படுமாக இருந்தால், அது குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் நிராகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கையானது தமிழ் பெண்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு செயற்பாடு கிடையாது எனவும் அவர் கூறினார். எனினும், கடவூச்சீட்டுக்கான புகைப்படத்திற்கு பொட்டு வைத்து எடுத்தல், சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் விதிமுறைகளுக்கு முரணானது என கயான் மிலிந்த குறிப்பிட்டார். முகத்தில் செயற்கை மாற்றங்களை ஏற்படுத்தி புகைப்படம் எடுக்கப்படுவதாக இருந்தால், தமது கணினி கட்டமைப்பில் அது தன்னிச்சையாக நிராகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.