2ஆவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டு நிறைவேறிய யாழ்.மாநகரசபையின் வரவு செலவுத்திட்டம்

breaking
  யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று (13) இரண்டாவது தடவையாகத் தோற்கடிக்கப்பட்டது. 5 மேலதிக வாக்குகளால் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது. எனினும், இரண்டாம் முறை தோற்கடிக்கப்பட்ட பின்னர், அந்த வரவு செலவு திட்டம் தானாகவே நிறைவேற்றப்பட்டதாக அர்த்தப்படும் என்ற உள்ளூராட்சிசபை விதியின் பிரகாரம், வரவ செலவு திட்டம் நிறைவேறியுள்ளது. யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் கடந்த 28ம் திகதி தோற்கடிக்கப்பட்டிருந்தது. உள்ளூராட்சிசபை விதியை அறிந்திராத யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட், வரவு செலவு திட்டம் நிறைவேறியதாக அப்போதே அறிவித்தார். எனினும், கட்சியின் மூத்த உறுப்பினர்கள், அவர் செயற்பட்டது பிழையென குறிப்பிட்டு, விதிகளை அவருக்கு எடுத்துக் கூறியிருந்தனர். இதையடுத்து இன்று (13) அவசரஅவசரமாக சிறப்பு அமர்வு அழைக்கப்பட்டது. இதில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இன்றைய அமர்வில் 43 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். 19 பேர் வரவு செலவு திட்டத்தை ஆதரித்தும், 24 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 12 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்கள் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐ.தே.க ஆகியன ஆதரித்து வாக்களித்தன. இன்றைய சபை அமர்பின் போது உறுப்பினர்களிடையே கருத்து மோதல்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.