காலணி இல்லாமல் நாடாவை சுற்றிக்கொண்டு ஓடி 3 தங்கம் வென்ற மாணவி!

breaking
காலணி வாங்கப் பணமில்லாமல், காலில் நாடாவை சுற்றிக் கொண்டு ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு, மூன்று தங்கங்களை வென்ற மாணவியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள். பிலிப்பைன்ஸில் இந்த சம்பவம் நடந்தது. 11 வயதான ரீ புல்லோஸ் எனும் மாணவி, பிலிப்பைன்ஸில் நடந்த பாடசாலைகளிற்கிடையிலான விளையாட்டு நிகழ்வில் மூன்று தங்கங்களை வென்றார். அந்த நாட்டின் பின்தங்கிய பகுதியிலிருந்து வந்த அந்த மணவிக்கு மட்டுமல்ல, அவரது குழுவிலிருந்து 12 பேரில், இருவருக்கு மட்டுமே காலணி இருந்தது. ரீ புல்லோஸ் மட்டுமல்ல, காலணி இல்லாத ஏனைய மாணவிகளும், காலில் நாடா சுற்றிக் கொண்டுதான் ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்புதான் புல்லோஸ் தன்னுடைய ஓட்டத் திறனை வெளிப்படுத்தினார் என்று அவரது பயிற்சியாளர் பிரிடிரிக் வெலென்ஸுவேலா கூறினார். “நாடாவைக் காலில் சுற்றிக்கொண்டு ஓடி மூன்று போட்டிகளில் வெல்வது மிகவும் சிரமமான செயல். ஆனால் அதனைச் செய்து முடித்துள்ளார் புல்லோஸ்,” என்று பெருமிதம் பொங்கக் கூறினார் அவர்.