சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கு ஆதரவாக பேரணி; சர்வதேச ஒற்றுமைக்கான குழு அழைப்பு

breaking

 14.12.2019 அன்று சுவிற்சலாந்து பாசல் நகரில் பேரணியொன்றை நடத்த சர்வதேச ஒற்றுமைக்கான குழு என்ற அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. சுதந்திரத்திற்காக போராடும்,பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்துநிற்கும் உலகின் பல்வேறு பகுதிகளையும் சார்ந்த மக்களின் பேரணியாக இது அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் தமிழ் வடிவம் வருமாறு, சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கு ஆதரவாகவும் ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராகவும் நடாத்தப்படும் பேரணி!

2019 ஆண்டு: உலகின் பல நாடுகளில், சர்வாதிகார அரசாங்கங்களுக்கும் அவர்களின் புதிய தாராளமயக் கொள்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றார்கள். அந்த நாடுகளின் பட்டியல் நீளமானது: சிலி, ஹாங்காங், ஈராக், ஈரான், கட்டலோனியா, ஹைட்டி, ஈக்குவடோர், லெபனான், எகிப்து, பிரான்ஸ், அல்ஜீரியா, துருக்கி, குர்திஸ்தான், பிரேசில், கொலம்பியா…..

பொலிவியாவில், புதிய தாராளவாத, அடிப்படைவாத கிறிஸ்தவ மற்றும் பாசிச சக்திகளின் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. அவர்களை ஒன்றுபட வைத்த விடயம் என்னவென்றால் பொலிவியாவின் பழங்குடி மக்கள் மீதான வெறுப்பு. தமிழீழத்தில், இனப்படுகொலைக்கும், ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் பொறுப்பான குழாமே வந்துள்ளது நவம்பரில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ரொஜாவா  துருக்கி அரசால் தாக்கப்படுகின்றது. துருக்கியில் ஆயிரக்கணக்கான அரசியல் செயற்பாட்டாளர்கள் ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் உள்ளனர். ஆக்கிரமிப்புப் போரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற உலகின் பலம்வாய்ந்த சக்திகள் ஆதரிக்கின்றன.

2019 ன் இலையுதிர் காலம் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக எழுச்சிகளினதும், எதிர்ப்பு சக்திகளினதும் இலையுதிர் காலமாகவும் அமைந்திருக்கின்றது. பெருமளவான மக்கள் அதிகரித்துவரும் சர்வாதிகார அரசியலை எதிர்க்கின்றனர், இதன் காரணமாக புதிய தாராளமய பொருளாதார கொள்கைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. பாசிச முன்னேற்றங்கள் பல்வேறு எதிர்ப்பு இயக்கங்களால் எதிர்க்கப்படுகின்றன. அப்போது மக்கள் அங்கே போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள்! இந்த தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு சமாந்தரமாக, பிலிப்பைன்ஸ் அல்லது இந்தியா போன்ற நாடுகளில் புரட்சிகர சிந்தனைவாத இயக்கங்கள் சர்வாதிகார அரசாங்கங்களுக்கும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கும் எதிராக ஒரு நீண்டகால எதிர்ப்பு போராட்டங்களை நடாத்தி வருகின்றன. அவர்களில் ஒரு பகுதியினர் பல தசாப்தங்களாக, பரந்த அளவில் வெளி உலகுக்கு தெரியாமலேயே போராடி வருகின்றார்கள்.

சுவிட்சர்லாந்தில் வாழும் மக்களாகிய நாம் இந்த இயக்கங்களின் செயற்பாடுகளில் இருந்து அதிக நம்பிக்கையை பெற்றுக்கொள்கின்றோம். இப்படியான எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் இருந்து தான் நாங்கள் குடிபெயர்ந்து வந்திருக்கின்றோம். இந்த நாடுகளில் தான் எமது சொந்தங்களும் நண்பர்களும் வாழ்கின்றார்கள், அந்த நாடுகளில் செயற்படுகின்ற அரசியல் இயக்கங்களுடன் தான் எமக்கு ஒரு பிணைப்பு இருப்பதாக உணர்கிறோம். நாம் அனைவரும் இந்த சமூக அமைப்புகளின், சமூக நீதி, அடிப்படை ஜனநாயகம் மற்றும் ஏகாதிபத்திய தலையீட்டின் முடிவு போன்ற கோரிக்கைகளையும் நிலைப்பாடுகளையும் பகிர்ந்து கொள்கிறோம்!

சுவிட்சர்லாந்து நடுநிலையான நாடல்ல

சுவிட்சர்லாந்து என்பது ஒரு நாடு மட்டுமல்ல, அது உலகளாவிய ரீதியில்  சமத்துவமின்மையூடாகவும் மற்றும் சுரண்டல்களினூடாகவும்  பங்காளியோ பங்களிப்போ இல்லாது இலாபமடைகின்ற ஒன்றாகவும் இருக்கின்றது. சுவிஸ் மக்களில் பெரும்பான்மையினர் இந்த நிலைமைகளையிட்டு எதுவும் செய்ய முடியாது உள்ளனர், ஆனால் அவர்கள் அவற்றை அங்கீகரிக்கவில்லை.

எவ்வாறாயினும், சுவிஸ் அரசும் அதன் பொருளாதாரமும் இவற்றிற்கு ஆதரவாகவே தம்மை தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்வதுடன் அடக்குமுறையாளர்களிற்கு சார்பாகவே நிலையெடுத்து வருகின்றது! ருவாக் போன்ற சுவிஸ் நிறுவனங்கள் ஆயுதங்களையும் போர் தொழில்நுட்பங்களையும் போர் நடைபெறும் பகுதிகளுக்கு வழங்குகின்றன, உதாரணமாக அவை ரோஜாவாவில் போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் துருக்கிக்கு வழங்குகின்றன.

கிரெடிட் சுவிஸ் போன்ற சுவிஸ் வங்கிகள் போர் தளவாட அதிகரிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. தமிழீழத்தை பொறுத்தவரை சுவிஸ் நாடு இலாபமீட்டும் ஒரு தரப்பு மட்டுமல்ல, தமிழின அழிப்பின் பங்காளியும் கூட. அத்தோடு இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழர்களின் கோரிக்கைகளை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

இவை வெறும் உதாரணங்கள் மட்டுமே, இவை சுவிஸ் நாடு எவ்வாறு சர்வதேச ரீதியில் முரண்பாடான பிரதேசங்களில் தங்களின் மூக்கை நுழைத்து பின்னிப்பிணைந்துள்ளது என்பதையும் சுவிஸ் அரசும் சுவிஸ் நாட்டு நிறுவனங்களும் எந்த பக்கம் சார்ந்துள்ளன என்பதையும் காட்டிநிற்கின்றன.

முதலாளித்துவ அமைப்பு என்பது உலகளவிய ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சமுதாய கட்டமைப்பின் மாற்று சிந்தனை வடிவங்கள் நிலைபெறுவதற்கான வாய்ப்பை தக்கவைக்க, உலகளாவிய ரீதியில் கட்டமைக்கப்பட்ட, ஒரே குறிக்கோளோடு முற்போக்கு சிந்தனையுடன் செயற்படும் ஒரு எதிர்ப்பு இயக்கம் தேவைப்படுகிறது. ஆட்சியாளர்களை தெளிவாக புரிந்துகொள்ளக்கூடிய,  உலகளாவிய ரீதியில் செயற்படும் ஒரு இயக்கம் சுவிசிலும் எழுச்சி பெறவேண்டும்: இதுவரை இந்த ஆட்சியாளர்களாலும் ஆட்சிக்கட்டமைப்புக்களாலும் பாதிக்கப்பட்டது போதும். உலகெங்கிலும் போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதர சகோதரிகளுடன் நாங்கள் தோளோடு தோளாக நிற்போம். –சர்வதேச ஒற்றுமைக்கான குழு–