பௌத்த பிக்குவை நையப்புடைந்த சிங்கள இளைஞர்கள்

breaking
  பௌத்த மதகுரு ஒருவர் மூன்று பேர் கொண்ட குழுவினால் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கப்பட்டு அசைய முடியாமலிருந்த பிக்குவை பொலிசார் மீட்டு, சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மட்டக்களப்பு எல்லையிலுள்ள ஓமாடியாமடு கிராமத்தில் உள்ள சுதுகல ஆரன்ய சேனாச்சனிய விகாரையின் பௌத்த பிக்குவான சுபத்தாலங்காரம கிமி என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். சிங்கள இளைஞர்களே அவரை தாக்கியுள்ளனர். காட்டோரமாக ஒதுக்குப்புறமாக அந்த விகாரை அமைந்துள்ளது. நேற்று வெள்ளிக் கிழமை மாலை குறித்த பௌத்த பிக்கு, விகாரையில் தமது வழமையான பணிகளை மேற்கொண்டிருந்தபோது மது போதையில் மூன்று சிங்கள இளைஞர்கள் அங்கு சென்றுள்ளனர். அந்த காட்டுப்பகுதிக்கு சட்டவிரோத செயற்பாடுகளிற்காக இளைஞர்கள் வருவதால், எச்சரிக்கையடைந்த பிக்கு, அவர்கள் குறித்து வினவியுள்ளார். அவர்கள் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டபோது, அங்கிருந்து வெளியேறுமாறு கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் ஒருவர், பிக்குவை மிக கடுமையாக தாக்கியுள்ளான். கையிலிருந்த கொட்டானால் தாக்கி, கடுமையான காயமேற்படுத்தியுள்ளான். அத்துடன், அங்கிருந்த உடைமைகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்து வீழ்ந்த பிக்கு, நடமாட முடியாத நிலையில், பொிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், பிக்குவை மீட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அயல் கிராமத்தை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞர்களே தன்னை தாக்கியதாகவும், அவர்களை அடையாளம் காட்ட முடியுமென்றும் பிக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.