ஶ்ரீலங்கா இராணுவத்தினரை காப்பாற்றிய விடுதலைப் புலிகள்: மாவை பெருமிதம்

breaking
ஶ்ரீலங்காவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து அமைத்துள்ள புதிய அரசாங்கம் செய்துவரும் மாற்றங்கள் எதுவும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். சமகால அரசியல் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “சுனாமி நினைவு நிகழ்வுகளில் நாம் இன்று கலந்துகொண்டிருந்தோம். கட்டைக்காடு பிரதேசத்தில் நான் கலந்துகொண்டிருந்த நிகழ்வில் தேசியகீதம் சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் யாழ் கட்டளை தளபதியும் இருந்தார். இதுவரை காலமாக தமிழில் இயற்றப்பட்ட தேசிய கீதமானது இப்போது புதிய அரசாங்கம் வந்த பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுனாமி நேரத்தில் இராணுவ முகாம் ஒன்றும் சுனாமியில் அடித்து செல்லப்பட்டது. ஆனால் அதில் சிக்கிய இராணுவ வீரர்களை விடுதலைப்புலிகள் காப்பாற்றினர். அவ்வாறு மனிதாபிமானம் அன்றைய நேரம் இருந்தது, ஆனால் இன்று தமிழ் மக்கள் முழுமையாக புறக்கணிக்கப்படும் விதத்தில் அரசாங்கம் செயற்படுகின்றது. இதனை நான் அவர் முன்னிலையிலேயே கூறினேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து அமைத்துள்ள புதிய அரசாங்கம் செய்துவரும் மாற்றங்கள் எதுவும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. நாம் கடந்த காலங்களில் நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டும், தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மிகவும் பொறுமையாக செயற்பட்டு பேச்சுவார்த்தைகள் மூலமாக சுமூகமாக நிலைமைகளை கையாண்டு வந்தோம். ஆனால் இன்று அரசாங்கம் தமிழ் மக்களை இலக்கு வைத்து முன்னெடுக்கும் செயற்பாடுகள் தமிழ் மக்களை பொறுமையிழக்க வைக்கும் விதத்தில் அமைகின்றது. இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த போதிலும் தமிழ் மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை என தந்தை செல்வா ஒருமுறை கூறினார். அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் தமிழ் மக்கள் நிம்மதியாக சுவாசிக்க சற்று இடம் கிடைத்தது. அதற்குள் மீண்டும் இந்த அரசாங்கம் இனவாதம் பிரிவினைவாத கொள்கைகளை முன்னிறுத்தி தமிழ் இனத்தை ஓரங்கட்ட வைக்கின்றது. இந்த நாட்டில் பிளவுகள் ஏற்பட வேறு யாரும் காரணம் அல்ல அரசாங்கமே இவை அனைத்திற்கும் பொறுப்புக்கூற வேண்டும். ஒருவேளை வருகின்ற சுதந்திர தினத்தன்று தமிழ் மொழியில் தேசிய கீதம் இயற்ற வேண்டாம் என அரசாங்கம் கூறுமானால் அன்றில் இருந்து இந்த நாட்டில் இன முரண்பாடுகள் மற்றும் பிளவுகள் பலமடையும் என்பதை ஜனாதிபதிக்கும் இந்த அரசாங்கத்திற்கும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்” என்றார்.