சிலியில் கட்டுங்கடங்காமல் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: 200 வீடுகள் தீக்கிரை

breaking
சிலி நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமான வல்பரைசோவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினை கட்டுக்குள் கொண்டுவர நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கட்டுங்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்துவரும் இந்த காட்டுத்ததீயின் காரணமாக வல்பரைசோ நகரில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களை பயன்படுத்தியும் காட்டுதீயை அணைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் தீயை அணைப்பது பெரும் சவாலாக அமையும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமெரிக்க நாடுகளில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் வல்பரைசோ நகரம், தலைநகர் சாண்டியாகோவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் லத்த காற்று மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக நேற்று முன்தினம் காட்டுத்தீ ஏற்பட்டது. கிட்டத்தட்ட 445 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பு இந்த காட்டுத்தீயில் எரிந்து நாசமானது. அத்தோடு, கட்டுங்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீ ரோகுயண்ட் மற்றும் சான்ரோக் நகரங்களில் உள்ள குடியிருப்பு பகுதியை நோக்கி நகர்ந்ததால், இந்த காட்டுத்தீயில் சிக்கி சுமார் 200 வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயுள்ளன. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், இந்த காட்டுத்தீயில் சிக்கி யாரும் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் இல்லை. அதே சதயம் இந்த காட்டுத்தீயால் வல்பரைசோ நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. சுமார் 1 லட்சம் மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.