விடுதலை வரலாற்றின் காலப்பதிவான தளபதி. கேணல். கிட்டு - சிவசக்தி -

breaking

அந்த மனிதருக்கு அரசாங்கத்தில் வேலை.

அவருக்கு ஐந்து பெண்பிள்ளைகள். அக்கம்பக்கத்தில் எப்போதும் சண்டை சச்சரவுகள். பெண்பிள்ளைகளைப் பெற்ற தாயோ மிகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள்.

' கடன்பட்டாவது சுற்றுமதிலைக் கட்டிவிட்டால் பெண்பிள்ளைகளை வைத்திருக்கும் எனக்கு பிரச்சினை இல்லை...' என அவர் நினைத்தார்.

முதற்கட்டமாக மனைவியின் நகைகளை ஈடுவைத்து, மணலும் சீமெந்தும் எடுப்பித்தார்.

அப்போதுதான் மதில்கட்டப்படவுள்ள செய்தியறிந்த அடுத்தவீடு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அவர் நயமாகப் பேசிப் பார்த்தார். தன்நிலையை விளக்கிச் சொன்னார். மன்றாடிப் பார்த்தார். அடுத்தவீட்டுக்காரர் உடன்படவில்லை.

பக்கத்துவீட்டால் அவருக்கு இப்போது பெரும் பிரச்சினை.

இனிப் பேசிப் பயனில்லை என நினைத்தவர்,  தங்கள் ஊருக்குப் பொறுப்பாக இருந்த போராளியிடம், பிரச்சினையை தீர்த்துவைக்கக் கோரி கடிதம் எழுதிக்கொடுத்தார். பதில் வரவில்லை. இரண்டுமூன்று தடைவைகள் அப்போராளிக்கு நினைவுபடுத்திப் பார்த்தார்.

' தெரியும்தானே ஐயா.. வேலைகளாலை வர முடியேல்லை... விரைவிலை வருவன்... வந்து இரண்டு வீட்டாக்களோடையும் கதைக்கிறன்... ' என்று பல தடைவைகள் பதில் கிடைத்தது.

அவர் மனச்சோர்வடைந்துபோனார். அவர் வாங்கிவைத்த மணற்கும்பி பெருமழையில் கரைந்துகொண்டிருந்தது.

அவர் ஒருநாள் மனைவியையும் அழைத்துக்கொண்டு கிட்டண்ணையின் முகாமுக்குப் போனார். கிட்டண்ணை வெளியே சென்றிருந்தார். வரும்வரை காத்திருக்கச் சொன்னார்கள்.

சுடச்சுட சில்வர் பேணியில் தேநீர் வந்தது. மனைவியும் அவரும் பருகினார்கள்.

சற்று நேரத்தில் கிட்டண்ணை உள்ளே வந்ததார். உட்கார்ந்திருக்கும் இவர்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு உள்ளே போனவர், கடுமையான குரலில் உள்ளே இருந்த போராளிகளை எதற்கோ கடிந்துகொண்டார். அவரின் கடுஞ்சினம் இவர்களை அச்சமுற வைத்தது.

அடுத்த கணம் கிட்டண்ணை இவர்களிடம் வந்தார். முகத்தில் புன்னகை பூத்திருந்தது.

' சொல்லுங்கோ ஐயா... என்ன பிரச்சினை?...... '

அவர் தனது தேவையையும் அயல்வீட்டால் ஏற்படும் பிரச்சினையையும் சொன்னார். கூடவே, ஊர்ப்பொறுப்பாளருக்கு கடிதம் கொடுத்ததையும் பலதடைவைகள் அலைந்ததையும் சொன்னார்.

கிட்டண்ணையின் முகத்தில் மாற்றம் தெரிந்தது.

'....... அவனைக் கதைக்கச் சொல்லு.....' வோக்கியில் அவர்குரல் கட்டளையிட்டது.

சில நொடிகளில் ஊர்ப்பொறுப்பாளர் கதைத்தார்.

' உன்ரை இடத்திலை மதில் கட்டடுற பிரச்சினை தொடர்பாக கடிதம் ஏதும் வந்ததோ....' கிட்டண்ணை கேட்டார்.

' ஓமண்ணை...'

' அந்தக் கடிதத்தோடை அஞ்சுநிமிசத்திலை இஞ்ச நிக்கிறாய்.... ' வோக்கியை வைத்தார் கிட்டண்ணை.

' உங்களுக்குத் தெரியும்தானே ஐயா... பெடியளுக்கு வேலைகூட.... ' பிள்ளைகளை மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்காத தாயாகத் தெரிந்தார் கிட்டண்ணை அவருக்கு.

என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் தொண்டைத்தண்ணீர் வற்றிப்போயிருந்த அவர் தலையை மட்டும் ஆட்டினார்.

சரியாக நான்கு நிமிடத்துக்குள், சாரம் கட்டிய அந்த ஊர்ப்பொறுப்பாளர் கிட்டண்ணைக்கு முன் நின்றார். கிட்டண்ணை எதுவும் கேட்கவில்லை.

கடிதத்தை வாங்கிப் படித்துப்பார்த்தார். படித்து முடித்ததும் ஐயாவைப் பார்த்தார்.

' நீங்கள் போய் நாளைக்கே மதில் கட்டுற வேலையை தொடங்குங்கோ.... பக்கத்து வீட்டாக்கள் ஒண்டும் கதைக்காயினம்..... '

இதுதான் கிட்டண்ணையின் அடையாளம்.

துணிவு, தன்னம்பிக்கை, உடனடியாக பிரச்சினைகளைத் தீர்க்கும் முடிவெடுக்கும் திறன், மக்கள்மீது காட்டும் பாசம், பெரியவர்களை மதிக்கும் பண்பு எனப் பல விடயங்கள் கிட்டண்ணையை மக்கள் மனதில் உன்னதமான போராளியாக உயர்த்தி வைத்திருந்தது.

ஊரை எரித்து ஊழியாடிய சிங்களத்துப் படைகளை யாழ்ப்பாணம் கோட்டைக்குள்ளும், பலாலி முகாமுக்குள்ளும் அடையச் செய்த அங்குசம் எங்கள் கிட்டண்ணை.

கிட்டண்ணை ஓர் அமைப்பின் தளபதிமட்டுமல்ல. ஈழத்தமிழினத்தின் வீரத் தளபதி. சின்னஞ்சிறு குழந்தைமுதல் முதியோர் வரை எல்லோராலும் நேசிக்கப்பட்ட மனிதன் அவர்.

எப்போது இராணுவம் வீதியில் வந்தாலும், இளைஞர்களான தங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடக்குமோ என ஒவ்வொரு பெற்றோரும் ஏங்கிக்கிடந்த காலம். இரவுகளில் அமைதியாக உறங்கமுடியாது. தெருக்களில் அடிக்கடி சுற்றிவளைப்பு. கைதுசெய்தல், வதைத்தல், படுகொலைசெய்து வீதியில் எறிதல் என சிங்கள அரசபடைகளால் தமிழினம் இன்னல் சுமந்துழன்ற  அந்தக் காலப்பகுதியை மாற்றி,

எதிரிக்கு முன்னால் நெஞ்சுநிமிர்த்தி நின்ற வீரன் கிட்டண்ணை.

அவர் எப்போதும் சொல்லும் வார்த்தை, ' தலைவர் இருக்கிறார். அவரை நம்புங்கள் ' என்பதுதான்.

பலாலி, பருத்தித்துறை, நாவற்குழி, ஆனையிறவு என பல இடங்களிலும் படையினரின்  முகாமிருந்தாலும், அவர்களின் நகர்வுகளைக் கட்டுப்படுத்தும் பொறிமுறை கிட்டண்ணையடமே இருந்தது.

பெருமளவில் ஆயுதபலமற்றிருந்த நிலையிலும், படையினரைப் பார்த்து ' முடிந்தால் வெளியே வந்து பாருங்கள் ' எனச் சவால்விட்டு நிற்க அவரால் முடிந்தது. அவரின் போர்உத்திகள் அத்தனை சிறப்பானவை.

போராளிகளுக்கு பட்டறிவுகள் நிரம்பியிருக்காத காலப்பகுதி....

உமையாள்புரத்தில் படையினருக்கு கண்ணிவெடிகள் வைக்கப்பட்ட தாக்குதல்தான் கிட்டண்ணையின் முதற்களம்.

அந்தக் கண்ணிவெடிகள் முன்னதாகவே வெடித்துவிட... படையினர் தம்மை நிலைப்படுத்தி, கண்ணிவெடி வைத்தவர்களை துரத்தினார்கள்.

உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக போராளிகள் பின்வாங்கி ஓட... படையினரோ வெட்டைவெளியில் கவசவாகனங்களில் துரத்திக்கொண்டிருந்தனர்.

இயல்பாகவே சினங்கொள்ளும் கிட்டண்ணைக்கு அப்போது... கோபம் தலைக்கேறியது....

' எங்கட மண்ணிலை ஆரடா நீ எங்களைத் துரத்த...' என்பதுபோல நின்று திரும்பி, படையினரின் கவசவாகனத்தை குறிவைத்து தாக்குதல் தொடுத்தார்.

அவரின் இலக்குத் தப்பவில்லை. கவசவாகனம் சாய்ந்தது.

இதுதான்... இந்த வீரத்தின் அடையாளம் தான் கிட்டண்ணை.

கிட்டண்ணையின் வீரம்நிறைந்த உள்ளத்திற்குள் கனிந்த பழமாக கருணையும் நிரம்பிக் கிடந்தது. போர்க்களத்தில் எத்தனை வீரம் காட்டிநின்றாலும், போராளிகள் வீரச்சாவடைந்தால் அவர் தாங்கிக் கொள்ளமாட்டார். குமுறிக்குமுறி அழும் தாயாக அவரை அப்போது பார்க்க முடியும்.

தேசியத் தலைவரைத் 'தம்பி' என அழைக்கும் இளையவர் கிட்டண்ணை. தலைவரிடம் கிட்டண்ணை கொண்டிருந்த அன்பும் பற்றும் எழுத்துகளில் வடிக்கவொண்ணாதது.

கிட்டண்ணை கலைகளின் சுவைஞராக இருந்தார். அதனால்தான் உள்ளுர்க் கலைஞர்களை அவர் ஊக்கமளித்து வெளிக்கொண்டு வந்தார்.

மெல்லமெல்ல உயிர்ப்பற்றுப் போய்க்கொண்டிருந்த கிராமியக் கலைகளை கிட்டண்ணை உயிர்ப்பித்தார்.

தமிழினத்தவர்களின் கலைகள் தொடர்பாக கிட்டண்ணை செய்த இரண்டு பெரும்பணிகளை இப்போதுள்ள தலைமுறையினருக்கு அடையாளப்படுத்தலாம்.

ஒருகாலகட்டத்தில் பெண்களை மலினமாக நையாண்டிசெய்யும் மேடைநிகழ்வுகள் மக்களிடையே பிரபலமாகியிருந்தன. இதனைமாற்றி பெண்களை முதன்மைப்படுத்தும் கதைநிகழ்வுகளை தெருவெளி நாடகங்களாக்கிய பெருமை அவருடையது. அவரின் ஊக்குவித்தலோடு, அந்தக் கலைநிகழ்வுகள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

அதேபோன்று, எமது சமுகத்தில் ஆழப்புரையோடியிருந்த கசிப்பு உற்பத்தி. இதனால் சமுகச் சீரழிவுகள் தலையெடுக்கத் தொடங்கின. குடும்பவன்முறைகள் அதிகரித்தன. குடும்ப வழக்குகள் பெருகின. எனவே, கசிப்பு உற்பத்தியை நிறுத்துவிக்க கிட்டண்ணை முன்வந்தார். முதற்கட்டமாக கசிப்பு உற்பத்தியை கிட்டண்ணை தடைசெய்தார். கிராமங்கள்தோறும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தினார். சிலவேளைகளில் கடுமையாகவும் இருந்தார்.

ஆனாலும் கசிப்பு உற்பத்தி நடந்துகொண்டுதானிருந்தது. கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்தபோது,  அந்த உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்களின் குடும்பப் பெண்களிடமிருந்து முதலில் எதிர்ப்பு ஏற்பட்டது.

கிட்டண்ணை சிந்தித்தார். அதற்கு அவர் கண்டுபிடித்த வழிதான் தெருவெளிநாடகம்.

கோயில் வீதிகளில், சந்தைகளில், விளையாட்டுத் திடல்களில் என எல்லா இடங்களிலும் கசிப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெருவெளிநாடகம் நிகழ்த்தப்பட்டது.

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் விழித்துக்கொண்டார்கள். தங்களின் தவறை உணர்ந்து அந்த உற்பத்தியைக் கைவிட்டார்கள்.

இப்படியாகத்தான் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கிட்டண்ணை செய்தார்.

கிட்டண்ணை ஒளிப்படங்கள் எடுப்பதிலும், ஓவியங்களை வரைவதிலும் பத்திரிகைகளை வெளியிடுவதிலும் சிறப்பான வல்லமை பெற்றிருந்தார். ஒவ்வொன்றையும் நுணுக்கமாகச் சிந்தித்து நுட்பமாகச் செய்வதில் அவர் கெட்டிக்காரனாக இருந்தார். தமிழர் தாயத்தை மீட்டெடுக்கும் விடுதலைப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக செதுக்கியெடுத்த பெருமையில் கிட்டண்ணையின் பங்களிப்பும் அளப்பரியது.

எமது விடுதலைப்போராட்ட வரலாற்றில் முதல்முதலாக கைதிகள் பரிமாற்றத்தைச் செய்ததன் மூலம், தமிழீழம் என்பது தனிநாடு என்பதைக் கிட்டண்ணை உலகிற்கு உணர்த்தினார். அவரின் கோபத்தையும் வீரத்தையும் துணிச்சலையும் மக்கள் விரும்பினார்கள். அவரைக் கொண்டாடிமகிழ்ந்தார்கள்.

எதிரிகளால் திட்டமிடப்பட்ட சூழ்ச்சி ஒன்றில் கிட்டண்ணை தனது காலை இழந்துவிட்டார் என்றபோது, அவரை நேசித்து அன்புசெலுத்திய மக்கள் அவருக்காகச் சொரிந்த கண்ணீரில் அவர் உயிர்மீண்டார்.

இந்திய அமைதிப் படையினரின் வருகையை அடுத்து, தேசியத்தலைவர் அவர்கள் முதல்முதலாக மக்கள்முன் தோன்றிய சுதுமலைக்கூட்டத்தில் கிட்டண்ணை உரையாற்ற எழுந்தார். அப்போது அங்கே பெருந்திரளாகக் கூடியிருந்த மக்கள் தம் கரவொலியாலும் கண்ணீராலும் அவர்மீதிருந்த பற்றை வெளிப்படுத்தினார்கள்

அதன்பின்  இந்திய அமைதிப் படையினரின் ஆக்கிரமிப்புக்காலம். தமிழ்நாட்டில் மருத்துவத்திற்காக தங்கியிருந்த கிட்டண்ணையையும்  இந்தியச் சிறையில் அடைத்தார்கள்... அங்கிருந்து....  பின் மணலாற்றுக் காட்டுக்குள் தன் தலைவரைச் சந்தித்து.... தன் போராளிகளுக்கெல்லாம் அறிவுரையோடு அன்பும் சேர்த்துதுரைத்து...... தாய்மண்ணைப் பிரியும் வலியோடு அவர் புறப்பட்டார்....

ஐரோப்பிய நாடுகளில் அவரின் பணி.

தன்னினத்தையும் தன் தாய்நாட்டையும் நேசிக்கும் ஒரு போராளி எங்கே வாழ்ந்தாலும் தன் இனத்தின் விடுதலையையும் உன்னதவாழ்வையுமே சிந்திப்பான் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் கிட்டண்ணை.

அவருக்கு எந்த நாடும் வதிவிட அனுமதி வழங்கவில்லை. ஆனால் அவர் வாழ்ந்த காலம் முழுவதும் தன் மக்களுக்காகவும் தேசத்துக்காகவுமே உழைத்தார். வெளிநாடுகளில் இருந்த இயக்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்திச் செயற்படுத்தினார்.

தான் நின்ற இடமெல்லாம் விடுதலைப்போராட்டத்தைப் பற்றி தெளிவுபடுத்தியதுடன் விடுதலைப்போராட்டம் குறித்து எழுந்த கேள்விகளுக்கும் பதிலிறுத்தார். அவரின் எல்லாச் செயற்பாடுகளிலும் அவரது ஆளுமையும், துணிச்சலும், வீரமும் விவேகமும் முன்னின்றன.

வெளிநாட்டு வாழ்வின் மினுக்கங்களால் அவரை அசைக்க முடியவில்லை. மிக எளிமையானவராக... எப்போதும் தலைவரையும் மக்களையும் பற்றிச் சிந்திப்பவராக வாழ்ந்தார் கிட்டண்ணை.

எங்களுடைய இனத்தின் சுதந்திர அவாவினையும் அதற்காக மக்கள் படடுக்கொள்ளும் வலிகளையும் வெளிநாடுகளில் பதியமிட்டு, புலம்பெயர் மக்கள் மனங்களில் விடுதலைக்கான பொறியைக் கிளர்த்தியவர் கிட்டண்ணை. அவரின் செயற்பாடுகளின் விளைவுகள் தேசத்தில் மிளிர்ந்தன ஒளியாக.

1993 ஐனவரியில் கிட்டண்ணை தன் தோழர்களோடு கடல்வழியாக மீண்டும் தாயகம் திரும்பிக்கொண்டிருந்தார்....

அவரின் வருகையை மோப்பம்பிடித்து முன்னுணர்ந்து கொண்ட இந்தியப்படைகள் அவர் பயணித்த கப்பலை வழிமறித்தன....

கிட்டண்ணை வங்கக்கடல்நடுவே வழிமறிக்கப்பட்ட செய்தி தாயமெங்கும் பரவியது... அவர் மீண்டுவந்துவிடவேண்டும் என மக்கள் துடித்துநின்றார்கள்... ஆனாலும்... இந்தியப் படையோ  கிட்டண்ணை பயணித்த கப்பலை வழிமறித்து, அவரைச் சரணடையப் பணித்தது...

அந்த தன்மான வீரன்... போராளிகளை வழிநடத்திய தளபதி... சாவைத் துச்சமென எண்ணிய தமிழ்மகன்.... இந்தியப்படையிடம் சரணடையவில்லை... கப்பற் பணியாளர்களை வெளியேற்றிவிட்டு, கப்பலோடு தன்னை அழித்துக்கொள்ள முடிவெடுத்தார் கிட்டண்ணை.

நடுக்கடலில் கப்பலை வெடிக்கவைத்து... தம்முயிர்களை ஆகுதியாக்கினார்கள் அந்த வீரமறவர்கள்.

16.1.1993 அன்று...கிட்டண்ணையேர்டு....லெப்.கேணல் குட்டிசிறி, மேஐர் வேலன், கடற்புலிகளான கப்டன் குணசீலன், கப்டன் றொசான், கப்டன் நாயகன், கப்டன் ஐPவா, லெப்டினன்ட் தூயவன், லெப்டினன்ட் நல்லவன், லெப்டினன்ட் அமுதன் என எல்லோருடைய உயிர்களும் தீயோடும், கடலோடும் கலந்தன.

' கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு ' என மக்களின் நேசம்பெற்ற நாயகன் கேணல் கிட்டுவிற்கு மகுடம்சூட்டினார் எங்கள் தேசியத் தலைவர் அவர்கள்.

இழப்பு... தாங்கமுடியாத துயரம். எனினும் தாங்கிக்கொண்ட விடுதலைப்போராட்டம்  தொடர்ந்து எழுச்சிகண்டது. இன்று இந்த மானமறவர்களின் 27 ஆவது நினைவுநாளில் நிற்கின்றோம் நாங்கள்.

தாய்மண், தாயகமக்கள் என எப்போதும் சிந்தித்து எம்மோடு வாழ்ந்து, எமக்காகவே மரணித்த இவர்களின் உயிர்க்கொடைக்கு என்ன பதில் வைத்திருக்கின்றோம்... எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள் கனவுகளை நனவாக்குவோம் என்பதைத்தவிர....

' எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே....' என்றுரைப்போமா... தமிழர் என்கின்ற ஒற்றைச்சொல்லை உயிர்ப்பிப்போமா.... அடுத்த தலைமுறை தலைநிமிர்ந்து வாழ நாங்கள் முன்வருவோமா.... எனப் பற்பல கேள்விகளுக்கு நடுவே... எங்களுக்காய் உயிரீந்த அனைவரையும் நினைவிருத்தி முன்நகர்வோம்.