தமிழ்த்தேசிய போராளி ஐயா ஓவியர் வீரசந்தானத்தின் இறுதி ஆசை ஞானச்செருக்கு.!

breaking

2018 டிசம்பர் 28ஆம் தேதி விடியற்காலை சுமார் ஒரு 3.00மணி இருக்கும்.20அடிக்கு 20அடி அறையின் இருளையும், நிசப்த்தையும் கலைத்து ஒலி வடிவமைப்பு பொறியாளர் படத்தின் ஒலி அமைப்பு சிறப்பாக முடிவடைந்தது என கூறினார். நானும், மகேந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்தோம். முகத்தில் சோர்வையும், தூக்கத்தையும் தவிர ஒன்றுமில்லை. கடந்த இரண்டு தினமாக படத்தின் ஒலி கலவைக்காக(இறுதி பணி) தூக்கம், ஓய்வின்றி பொறியாளரின் தூக்கத்தையும் கெடுத்து அவர் உயிரை வாங்கினோம். பொறியாளருக்கு பதில் சொல்ல கூட உடல் முரண்டுப்பிடித்தது. பொறியாளர் எங்களை பார்த்து புன்னகைத்தார். அதற்க்கு பொருள் இனி இந்த பக்கமே திரும்பி வந்துவிடாதீர்கள். படம் நிறைவடைந்தது.

இந்திய திரையுலகில் குறிப்பாக தமிழ் திரைக்கடலில் மட்டும் வருடத்திற்க்கு கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் தயாரிக்கப்படுகின்றது. அதில் 100-150 படங்கள் வரை மக்கள் மத்தியில் திரைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆனால் வருட கடைசியில் மக்கள் கொண்டாடும் படங்கள் வெறும் 5-10 மட்டும் தான். விதி விலக்கின்றி தயாரிக்கப்படும் அனைத்து படங்களும் அதற்க்கான சோதனைகளையும், போராட்டங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் கடந்து தான் முழுமையடைகின்றன, திரைக்கும் கொண்டு வரப்படுகின்றன.ஆனால் வெற்றி எனும் மாய மோகினி அனைவரையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஞானச்செருக்கும் அதற்க்கான சோதனைகளையும், போராட்டங்களையும் தாண்டி தான் இப்போழுது முழுமையடைந்துள்ளது.

ஞானச்செருக்கு ஒரு முழு நீள மக்களுக்கான திரைப்படம். அதன் உருவாக்கத்தை பார்க்க நாம் நான்கு வருடங்களுக்கு முன் செல்வோம்.

     2015-ஆம் ஆண்டின் முற்பகுதியில் நான் ஒரு முழு நீள படம் இயக்க திட்டமிட்டிருந்தேன். இந்த சமூகத்தில் படம் இயக்க தேவையான எந்த ஒரு அடிப்படை தகுதியும் இல்லாதவன் நான். எந்த ஒரு திரை பின்புலமும் இல்லை, எந்த ஒரு பெரிய இயக்குநருக்கும் உதவியாளனாக பணிப்புரியவில்லை, செல்வந்தனுடைய மகனுமில்லை. இருந்தாலும் படம் இயக்க ஆயத்தமாகிவிட்டேன். அடுத்த ஒரு மாதம் 10-க்கும் மேற்ப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களை அனுகினேன். அந்தந்த தயாரிப்பு நிறுவனங்களின் வாயிலில் நின்ற புது முக இயக்குனர்களின் கூட்ட நெரிசலில் என் அடையாளங்கள் தொலைந்து போயின.

    பின்னர் படதொகுப்பாளர் மகேந்திரன் துணையோடு ஓவியர் வீரசந்தானம் அவர்களை அடைந்தேன். அப்போழுது அவருக்கு தெரிய வாய்பில்லை இவன் தன்னை அடுத்த இரண்டு வருடத்திற்க்கு கலை என்ற பெயரில் கொடுமை படுத்த போகிறான் என்று.

   சிந்தனை நிலையில்லாதது. ஓவியரின் பழக்கம் என்னை மேம்படுத்தியது. தயாரிப்பாளர்களின் வாயிலில் நிற்ப்பதை விடுத்து ஓவியரின் வீட்டில் காலத்தை கழித்தேன். ஓவியர் வீரசந்தானம் ஒல்லியான கருத்த உடலுடன், இடுப்பில் நாலுமுழ வேட்டியுடன் வலம் வருவார். விரல்களிலும், உடலின் மேல் பகுதியிலும், வேட்டியிலும் எப்போழுதும் கலவையான நிற சாயங்கள் பதிந்திருக்கும். அடர்த்தியான தலைமுடியும், கழுத்தை மறைக்கும் தாடிக்கும் இடையில் முகத்தை புதைத்திருப்பார். 70 வருட அனுபவம் உடைய கண்கள் ஒளியுடன் சிந்தித்துக்கொண்டே இருக்கும். முதுமை அவர் உடலை தளர வைத்துள்ளது, இருந்தும் இயக்கம் வேகமாகவே இருக்கும். தினமும் குறைந்தது 10 மாத்திரைகள் போடுவார் இரத்த அழுத்தத்திற்க்கு 2 தனியாக, இருந்தும் சமுதாய அவலமும், போராட்டங்களும் அவர் இரத்தத்தை கொதி நிலையிலே வைத்திருக்கும்.

சரி நம் கதைக்கு திரும்புவோம். எனக்கும், ஓவியருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. “வீணா காலத்தை ஓட்டாத போய் இயங்கு போ” என்று அவர் சொல்லி முடிப்பதிற்க்குள் நான் முந்திக்கொண்டேன். அடுத்து ஒரு குறும்படம் இயக்க போகிறேன், நீங்கள் தான் அதில் கதாநாயகன். அவர் எதிர்பார்க்கவில்லை. முகத்தில் கோபம் வந்துவிட்டது, ஆனால் வார்த்தை வரவில்லை. மேலும், கீழும் பார்த்தார் ஓவியம் தீட்ட சென்று விட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து கதை சொல்ல அழைத்தார். கதை சொன்னேன். “இந்த கிழவன இயக்க முடியுமானு உனக்கு நம்பிக்கை இருக்கானு” கேட்டார். முயற்ச்சிப்போம் என கூறினேன்.

ஓவியரின் இறுதி ஆசை பட வெளியிடுதான்.இறுதி நாட்களில் பட நிறைவை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தார்.படம் எக்காரணம் கொண்டும் முடங்கி விடக்கூடாது.நானும் மகேந்திரனும் குழுவினரை சந்தித்து ஊக்கப்படுத்தினோம்.குழுவினர் மத்தியில் சமநிலையை ஏற்ப்படுத்த வேண்டும். சில தொழில்நுட்ப கலைஞர்கள் விலகிக்கொண்டனர்.சிலர் சொல்லி கொள்ளாமலே மறைந்துவிட்டனர்.புதிய குழுவை உருவாக்கினேன்.மெல்ல நின்ற பட வேலைகளை ஆரம்பித்தேன்.இடையில் கிடைத்த ஓய்வு நேரங்களில் ஓவியரின் நண்பர்களை சந்தித்து ஓவியரை பற்றிய ஒரு ஆவணப்படத்தை உருவாக்கினேன்.படத்திற்க்கான பொருளாதார சிக்கல்கள் விடாமல் துரத்தி கொண்டே இருந்தது.மாமா இரண்டாவது முறையாக வங்கியில் கடன் வாங்கினார்.இம்முறை அண்ணனும் ஒரு பெரிய தொகையை கொடுத்தான்.

      ஏறத்தாழ ஓவியர் மறைந்த ஒன்றரை ஆண்டுகள் பல ஏற்ற,தாழ்வுகள், வளைவுகளை, போராட்டங்களை கடந்து “ஞானச்செருக்கை” 2018 டிசம்பர் மாதம் முடித்தேன்.

படத்திற்க்கு துணையாக பலர் இருந்தாலும்(ஓவியர் உட்பட) மகேந்திரன் துணை இல்லாமல் படம் முழுமையடைந்திருக்காது.

மகேந்திரன் பள்ளி பருவ நண்பன். நான் கல்லூரி முடித்த பின் கலைதுறையில் பயணப்படபோகிறேன் என்றவுடன் நானும் வருகிறேன் என வந்தவன். பள்ளி பருவத்தில் சத்துணவு கிடைக்கவில்லை என்றால் அன்று அவன் பட்டினி தான். கிழிந்து, தைத்து, நைந்த கால் சட்டையுடன் தான் பெரும் பாலும் நான் அவனை பார்த்திருக்கிறேன். வறுமையும், வலியும் தான் சிறந்த வாழ்வியல் முறையை அவனுக்கு கற்று கொடுத்துள்ளது.

         படத்தை முடித்தவுடன் வெளிநாடுகளில் நடக்கும் உலக திரைப்பட போட்டிகளுக்கு அனுப்பி வைத்தேன். ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தது 1000 படங்களாவது போட்டியிடும். முன்னே சொன்னது போல் தமிழ் திரையுலகை பொறுத்த வரை எல்லா படங்களும் அதற்க்கான ஏற்ற இறக்கங்களை போராட்டங்களை கடந்து தான் முழுமையடைகிறது. ஞானச்செருக்கு ஒன்றும் விதி விலக்கு அல்ல. ஆனால் மக்களுக்கு அதன் போராட்ட கதைகள் ஒன்றும் தேவையில்லை. சிறந்த படங்கள் மட்டுமே தேவை. அந்த வகையில் ஞானச்செருக்கு தனது சிறப்பை, தரத்தை வெளிப்படுத்த உலக திரைப்படங்களோடு போட்டியிட சென்றுள்ளது. இதுவரை 11 உலக நாடுகளின் அங்கீகாரங்கள் கிடைத்துள்ளது. விருதுகளுக்காக(Nominate) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெண்ணீன்சுல(Venezuela,south America) நாட்டில் நடந்த சர்வதேச திரைப்பட போட்டிகளில் ஐந்து விருதுகளை பெற்றுள்ளது.சிறந்த படம்,ஒளிப்பதிவு,இசை,தயாரிப்பு வடிவமைப்பு,குறிப்பாக சிறந்த நடிகராக ஓவியர் வீர சந்தானம் தேர்வாகியுள்ளார். மகிழ்ச்சியடைகிறோம்.இன்னும் அங்கீகாரங்களும் விருதுகளும் தொடரும். இந்தாண்டு இறுதிக்குள் மக்கள் மத்தியில் ஞானச்செருக்கு படத்தை வெள்ளித்திரையில் வெளியிட முயற்ச்சிக்கிறோம்.

ஓவியர் வீர சந்தானம் மறுபடியும் வருவார் வீரநெடியோனாக.

ஞானச்செருக்கு வெறும் படமல்ல.அது ஒரு வாழ்க்கை பயணம்,வாழ்வியல் முறை.

 நன்றி

தரணி ராசேந்திரன்.

இயக்குனர் ஞானச்செருக்கு