செய்தியாளன் செய்தியானான்.!

breaking
செய்தியாளன் செய்தியானான்….16.01.2007 (கிளிநொச்சியின் மூத்த ஊடகவியலாளர் வல்லிபுரம் அருள்சோதிநாதன்) “கனகபுரச்சோதி” - சோதி அண்ணையை இப்படித்தான் சொல்லுவார்கள். ஈழநாதத்தின் மூத்த ஊடகவியலாளர். 16.01.2007 அன்று சுகயீனம் காரணமாக அவரை இழந்திருந்தோம். சோதி அண்ணைக்கு காய்ச்சல் என்று தான் நினைத்திருந்தோம். சில நாட்களாக அவரது உடல்நிலை சரியில்லை. அவருக்கு கான்சர் என்று எங்களுக்கு சொல்லவில்லை. கொழும்புக்கு போகின்ற நேரத்தில் தான் எங்களுக்கு சொல்லியிருந்தார்.“தான் திரும்பி வரமாட்டன்” என்று அவருக்கே தெரிந்திருந்தது போல…
1993 ஆம் ஆண்டில் இருந்து ஈழநாதம் பத்திரிகையின் அலுவலகச்செய்தியாளராக பணியாற்றியிருந்தார். கிளிநொச்சியில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பணிப்பாளர்கள்,பணியாளர்கள் அந்நிறுவனங்களின் செயற்பாடுகள் பற்றி அதிகம் தெரிந்த செய்தியாளன் சோதி அண்ணையே. சோதி அண்ணை பொதுவாகவே மக்களுக்கு இடர்கள் தொடர்பான செய்திகளையே அதிகம் எழுதியுள்ளார். புதிதாக செய்தியாளராக பணிக்கு வரும் செய்தியாளர்களிற்கு ஒரு பயிற்றுவிப்பாளராகவும் இருந்திருக்கின்றார். அவரே தன்னுடைய உந்துருளியில் ஏற்றிச்செல்வார். சத்ஜெய நடவடிக்கையின் போது கிளிநொச்சியை கைப்பற்றியிருந்த சிறிலங்கா படையினரிடம் இருந்து ஓயாத அலைகள் 2 நடவடிக்கையின் மூலம் கிளிநொச்சியினை மீண்டும் புலிகள் மீட்டிருந்தனர். கிளிநொச்சியில் படையினர் நிலைகொண்டிருந்த காலத்தில் வீடுபார்க்கசென்றவர்கள், தேங்காய் பிடுங்கச்சென்றவர்கள் என பலரை சிறிலங்கா பiடையினர் படுகொலை செய்திருந்தார்கள், பலர் இன்று வரை காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். கிளிநொச்சியை மீட்ட காலத்தில் வீதிகள் மற்றும் காணிகள் துப்புரவு செய்யும் போது பலரது எழும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. அந்த எழும்புக்கூடுகள் யாருடைய காணியில் இருந்தது என்றும் அந்தக்காணியில் இருந்தவர்கள் யாராவது காணாமல் ஆக்கப்பட்டவர்களா என நன்கு தெரிந்தவர்களில் சோதி அண்ணையும் ஒருவர். சோதி அண்ணை ஊடகவியலாளர் என்பதை விட சமூகச் செயற்பாட்டாளராகவும் கடமையாற்றியிருந்தார். 17.01.2007 அன்று அவரது சமூகசேவைக்கும் ஊடகப்பணிக்குமாக தமிழீழ விடுதலைப்புலிகள் “நாட்டுப்பற்றாளர்” நிலை வழங்கி தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களால் தமிழீழ தேசியக்கொடியினை சோதி அண்ணையின் புகழுடல் மீது போர்த்தி கௌரவிககப்பட்டது. சோதி அண்ணை இல்லையென்றாலும் அவர் நினைவுகள் எங்களோடேயே பயணிக்கிறது.