பிரான்ஸ் அரசிற்கெதிரான போராட்டத்தால் முதல்முறையாக முடக்கப்பட்ட லூவர் அருங்காட்சியகம்!

breaking
பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தினால், முதல்முறையாக லூவர் அருங்காட்சியகம் முடக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) லூவர் அருங்காட்சியத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்காக போராட்டக்காரர்கள், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை உள்ளே நுழைய விடாதபடி, அருங்காட்சியகத்தின் வாயிலை அடைத்துக்கொண்டு போராட்டம் நடத்தினர். இதனால், அருங்காட்சியத்தை பார்வையிடவந்த பலர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து விடைபெற்றனர். எனினும் இணையத்தளம் மூலம் நுழைவுச் சிட்டைகள் பெற்றுக்கொண்டவர்களுக்கு பணம் மீள அளிக்கப்படும் என லூவர் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் CGT, Sud, Solidaires, FSU போன்ற தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து லூவர் அருங்காட்சியகம் முடக்கப்படுவது இதுவே முதன் முறை. பிரான்ஸில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஓய்வூதிய திட்டத்துக்குள் கொண்டுவந்ததால், தற்போது ஊழியர்களிடையே பெரும் நம்பிக்கையின்மை எழுந்துள்ளது. இதனால் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து, கடந்த 5ஆம் திகதி முதல் பிரான்ஸின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பொலிஸார், விமானநிலைய ஊழியர்கள் என பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.