Take a fresh look at your lifestyle.

தோல்வியின் நாயகன் சம்பந்தன் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இராசவரோதயம் சம்பந்தன் இனித் தான் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.  இச்செய்தியின் உண்மையாயின், பெப்பிரவரி 5ம் திகதி,  87 அகவை நிறைவுறும் அவர் தனது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு இவ்வாறான முடிவிற்கு வந்திருக்கலாம். தனித்து நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வரையறைக்குள் மட்டும்  அரசியலில் ஈடுபட்டு வரும் அவர்  அப்பதவியைப் பெற்றுக்கொள்ள விரும்பாவிடின், அரசியலிலிருந்து முற்றாகவே ஒதுங்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னரான சம்பந்தனின் அரசியல் ஒரளவு வெளிப்படையானது. ஆனால் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னரானகாலத்திலான அவரது அரசியல்பற்றி அவரது ஆதரவாளர்களுக்கும் அவரை விமரசிப்பவர்களுக்கும் இடையில் முற்றிலும் வேறுபட்ட கருத்து நிலவுகிறது. முன்னைய தரப்பினர் சம்பந்தன் தனது காலத்தில் ஈழத்தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் ஒரு அரசியற் தீர்வை பெற்றுத்தருவார் அல்லது அதற்காக உழைக்கிறார் என நம்புகிறார்கள். மற்றைய தரப்பினரோ, அவர்  ஈழத்தமிழரின் வேணவாவிற்கு மாறாக அவர்களது அரசியலை சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்குள் முடக்கும் பணியைச் செய்கிறார் எனக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இந்நிலையில் கடந்தமாதம் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 70வது ஆண்டு நிறைவுக் கூட்டத்திலும், இம்மாத ஆரம்பத்தில் சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் அவர் ஆற்றிய  உரைகள் ஈழத்தமிழரது அண்மைக்கால அரசியலில் சம்பந்தனின் வகிபாகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.

தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிபோது, விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம், ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் அத்துடன் முடிவடையவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். அண்மையில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில்  கோத்தாபாய இராஜபக்சவின் கொள்கைவிளக்க  உரைக்குப் பதிலளித்துப் பேசியபோது, விடுதலைப்புலிகளை அழிப்பதில் சர்வதேச சமூகம் முக்கிய பங்கு வகித்ததாகவும், குறிப்பாக இந்தியாவின் பங்கினைப்பற்றியும் குறிப்பிட்டு அக்காலத்தில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாகவிருந்த சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளராகவிருந்த எம்.கே. நாராயணன் ஆகியோர் இவ்வழிப்பில் சிறிலங்கா அதிகாரிகளுக்கு நிகராகச் செய்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மக்களுக்கு ஓரு அரசியற் தீர்வு கிடைக்கும் என்றால் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டது சரியானதாக இருக்கலாம் ஆனால் அழிக்கப்பட்டதன் பின்னர் தீர்வு எதுவும் கிட்டவில்லை என்பதே சம்பந்தனின் ஆதங்கமாக இருக்கிறது. தமிழர் தேசத்திற்காக தற்கொடை செய்து போராடிய விடுதலைப்புலிகள்  தமிழ்மக்களிற்கு ஒரு அரசியற் தீர்வு கிட்டும் என்றால் அதற்காக எத்தகைய அர்ப்பணிப்பிற்கும் தயாராகவிருந்தார்கள் என்பது சம்பந்தனுக்குப் புரியாதிருக்க நியாயமில்லை.  ஆனால் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டால் கிரீடம் தன் தலையில் வந்து விழும் என்ற  கனவில் தமிழ் இன அழிப்பினை சம்பந்தனும் ஆதரித்தார் என்பதுதான் அவரது துரோக வரலாறு.

1977ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழீழக் கோரிக்கையை முன்நிறுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டபோது, அக்கட்சியின் சார்பில் முதற்தடவையாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் சம்பந்தன். இத்தனைக்கும் அவர் தமிழீழக் கோரிக்கையை என்றைக்குமே ஏற்றுக்கொண்டவர் அல்ல.  பிரிக்கப்படாத சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்குள் வாழ்வதனை உளமார ஏற்றுக்கொள்ளும் சம்பந்தன்,  தமிழீழக் கோரிக்கையை ஆதரித்து தேர்தலில் நின்றது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமல்லை. ஏனெனில் இத்தேர்தலில் போட்டியிட்ட ஏனைய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பகுதியானவர்கள் தமிழீழக் கோரிக்கையில் உறுதியாக நின்றவர்கள் அல்ல.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த கூட்டாட்சி (சமஷ்டி) பற்றி, அல்லது குறித்த காலக்கெடுவிற்குள் தீர்வு கிடைக்கும் என சம்பந்தன் ‘அடித்துக்’ கூறும்போது, தான் கூறுவதனையே அவர் நம்புவதில்லை. அவரை நன்கறிந்த அவரது ஆதரவாளர்களும் அவர்கூறுவதனை நம்புவதில்லை. ஆனால் இக்கோசமானது வெகுமக்களைக் கவர்வதனால் அவரது  வாக்குவங்கியை பாதுகாக்க உதவுகிறது. (தமிழ் ஊடகங்களின் செய்தியறிக்கைகளில் வரும் அறைகூவல் விடுப்பது, அடித்துக் கூறுவது போன்ற சொற்தொடர்கள் அவை குறித்து நிற்கும் செயலுக்கு உரியவையல்ல என்பதனைக் கவனத்திற் கொள்ளவும்)

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது. அவர்களே அக் கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தனை ஏற்றுக்கொண்டிருந்தனர் ஆகவே அவர்களை எதிர்க்கவோ, விமர்சிக்கவோ கூடாது என்ற வாதத்தை சிலர் முன்வைக்கின்றனர். இன்னுச் சிலரோ சற்று மேலே சென்று, ‘வீடு’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தேசியத்தலைவர் அவர்களே குறிகாட்டியிருந்தாகக் கூறுகிறார்கள். இவர்கள் ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியலைப் புரிந்துகொள்ளாதவர்கள் அல்லது புரிந்துகொண்டும் தமது ஆதாயத்திற்காகப் பொய்யுரைப்பவர்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணியும், தமிழரசுக்கட்சியும் எப்போதும் விடுதலை இயக்கங்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தன. தமது அதிகாரத்தை பறிக்கும் போட்டிச்சக்தியாகவே இவை விடுதலை இயக்கங்களைக் கருதி வந்தன. இயக்கங்களிடமிருந்த ஆயுதங்களின் பயத்தினால் வெளிப்படையான எதிர்ப்பினைக் காட்டாவிட்டாலும்,  சிறிலங்கா மற்று வெளிநாட்டு அதிகார மையங்களின் உதவியுடன் அவற்றை அழிக்கவே முற்பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதலை இயக்கங்களால் கொல்லப்பட்டமைக்கு இதுவே காரணமாக அமைந்தது. எதுவித ஆயுதவன்முறையுடன் தொடர்புபடாத ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கொழும்பில் வைத்து தற்கொடைத் தாக்குதலுக்கு உள்ளானதன் காரணத்தை இதிலிருந்துதான் விளங்கிக் கொள்ளமுடியும்.

தமிழ் மக்களின் தலைகளை இலக்குவைத்து குண்டுபோடுவதனையே நியாயப்படுத்தி வந்த சிங்களத் தலைவர்கள், சமகாலத்தில் சம்பந்தன், ஆனந்தசங்கரி போன்றவர்களுக்கு கொழும்பில் குண்டுதுளைக்காத காரருடன் இருப்பிட வசதியும் வழங்கி அவர்களைப் பராமரித்ததன் தாற்பரியம் இதுதான்.

2001 ஆண்டு நோர்வே அனுசரணையில் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடாத்துவது பற்றிய பூர்வாங்க நடவடிக்கைகள் நடைபெற்ற காலத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளுக்கும் அதன் தலைவர்கள், உறுப்பினர்களுக்கும் கூட்டமைப்பு தொடர்பில் ஒரே நோக்கமிருந்தது எனக் கூறமுடியாது. விடுதலைப்புலிகளின் தலைமையைப் பொறுத்தவரை, பேச்சுவார்த்தை மேடையில் தமிழர் தரப்பு ஒருமித்த கருத்தை முன்வைக்க வேண்டும். அதற்காக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அரசியல் செய்யும் எல்லாத் தரப்பையும் ஒரணியில் கொண்டு வரவேண்டியிருந்தது. இந்த முயற்சியில், சிறிலங்கா இராணுவத்தின் ஒட்டுக்கு குழுக்களாகவிருந்த ஈபிடிபி, புளொட் ஆகிய கட்சிகளைத் தவிர மிகுதி அனைத்து அரசியற் கட்சிகளையும் ஒரணியில் கொண்டு வரமுடிந்தது.

ஆனால், கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னர் விடுதலைப்புலிகள் எதிர்பார்த்ததுபோன்று சம்பந்தன் நடந்து கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக, விடுதலைப்புலிகளே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று வெளிப்படையாகக் கூறிக்கொண்டிருந்த சம்பந்தன், வெளித்தரப்புகளுடனான, குறிப்பாக மேற்குலக நாடுகளினதும், இந்தியாவினதும் பிரதிநிதிகளுடனான உரையாடல்களில் தன்னை விடுதலைப் புலிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொண்டார்.  தன்னைப்போன்று வன்முறையை விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர்கள், விடுதலைப்புலிகளின் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வேறுப்பட்டிருப்பதாகவும், தாங்கள் தேசம், சுயநிர்ணய உரிமை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தவில்லை எனவும், ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பரவலாக்கத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறிவந்தார். விடுதலைப்புலிகளை அழிக்க சிறிலங்காவிற்கு உதவிய இவ்வெளித்தரப்புகள் தங்களுக்கு எந்தத்தீர்வையும் பெற்றுத் தரவில்லை என இன்று சம்பந்தன் அங்கலாய்ப்பதன் பின்னணி இதுதான்.

விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர், சம்பந்தன் அவரது அரசியல் வாழ்வில் பெற்றுக்கொள்ளக் கூடிய உயர்பதவியான எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொண்டார். மூன்று வருடத்தில் அவரது பதவி பறிபோனபின்னரும்கூட அரச மாளிகை ஒன்றில் வசிக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. கொழும்பிற்கு பயணம் செய்த வெளிநாட்டுப் பிரமுகர்கள் சம்பந்தனை சந்தித்துக் கொள்வது வழக்கமானது. இத்தனையிருந்தும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் விடயத்திலோ, அன்றாடப் பிரச்சனைகளுக்கான தீர்வு விடயத்திலோ சம்பந்தனால் ஒரு துரும்பைத்தானும் பெற்றுத் தரமுடியவில்லை.

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் வீரியமற்ற ஒரு தலைவராகவே (impotent leader) சம்பந்தன் பதியப்படுவார். துர்வாய்ப்பாக, கூட்டமைப்பில் அவரை பிரதியீடு செய்யக்கூடிய நிலையில் இருப்பவர்களும் சம்பந்தனைவிட மோசமானவர்களாகவே காணப்படுகிறார்கள். இந்நிலையில் மாற்று அரசியற் தலைமை ஒன்றுக்கு வழிவிடத் தமிழ்மக்களாக தயாராகவேண்டும். அவ்வாறில்லையெனில்  தமிழ் அரசியல் இயக்கமற்று தேங்கி நிற்கும் அபாயம் உள்ளதனை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

– கோபி இரத்தினம்

%d bloggers like this: